YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 5

5
முறைகேடான சகோதரன்
1ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியோடு தகாத தொடர்பு வைத்திருக்கும் பாலியல் ஒழுக்கக்கேடு உங்கள் மத்தியில் இருக்கின்றதென்றுகூட சொல்லப்படுகிறது. ஏனைய மத நம்பிக்கையாளராலும் சகிக்க முடியாத விடயம் இதுவாகும். 2இதைப்பற்றி நீங்கள் கர்வம்கொள்கின்றீர்களே. மாறாக வேதனை அல்லவா அடைய வேண்டும்? இதைச் செய்தவனை உங்கள் ஐக்கியத்தில் இருந்து வெளியேற்றுங்கள். 3நான் சரீரத்திலே உங்களுடன் இல்லாதிருந்தாலும் ஆவியில் உங்களோடிருந்து, நான் அங்கு இருப்பது போல் இதைச் செய்தவனுக்கெதிராக தீர்ப்புச் செய்கின்றேன். 4ஆண்டவர் இயேசுவின் பெயரினால் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, ஆவியில் நானும் உங்களோடு இருக்கின்றேன். நமது ஆண்டவர் இயேசுவின் வல்லமையும் உங்களோடு இருக்கின்றது. 5ஆதலால் அப்படி நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, அவனுடைய உடல் அழிந்து கர்த்தரின் நாளிலே அவனது ஆவி இரட்சிக்கப்படும்படி அவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள்.
6அப்படியிருக்க நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளித்த மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிப்புள்ளதாக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? 7நமது பஸ்கா#5:7 பஸ்கா – இது யூதர்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த தமது விடுதலையை நினைவுகூர்ந்து ஆசரிக்கும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கின்றபடியால், நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாக இருக்கின்றீர்கள். அப்படி இருக்கின்றபடியால் பழைய புளித்த மாவை அகற்றி விடுங்கள். 8ஆகையால் நாம் பழைய புளித்த மாவாகிய தீமையோடும் கொடுமையோடும் அல்லாமல், புளிப்பில்லாத அப்பமாகிய மனத் தூய்மையோடும் உண்மையோடும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவோம்.
9முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோருடன் கூடிப் பழக வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன். 10ஆயினும் இவ்வுலகத்து மக்களை நான் குறிப்பிடவில்லை. பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவோர், பேராசையுடையோர், ஏமாற்றுக்காரர், விக்கிரகத்தை வழிபடுவோர் ஆகியோரைவிட்டு விலகுவதென்றால், இவ்வுலகத்தைவிட்டே விலக வேண்டியிருக்குமே. 11ஆனால் இப்போது நான் உங்களுக்கு எழுதுகின்றதாவது, தன்னை ஒரு சகோதரன் என்று கூறிக்கொள்கின்றவன் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவனாகவோ, பேராசைக்காரனாகவோ, விக்கிரக வழிபாடு செய்கின்றவனாகவோ, பழிசொல்லித் தூற்றுகின்றவனாகவோ, குடிகாரனாகவோ, அல்லது ஏமாற்றுகின்றவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு நீங்கள் கூடிப் பழகக் கூடாது. அப்படிப்பட்டவனுடன் சேர்ந்து உணவு உண்ணவும் கூடாது.
12திருச்சபைக்கு வெளியே இருக்கின்றவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்வது என் வேலையா? திருச்சபைக்கு உள்ளே இருக்கின்றவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்யவேண்டியது நீங்கள் அல்லவா? 13திருச்சபைக்கு வெளியே இருக்கின்றவர்களைக் குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால், “அந்தக் கேடு கெட்டவனை உங்கள் மத்தியிலிருந்து துரத்தி விடுங்கள்.”#5:13 உபா. 17:7

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in