YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 6

6
விசுவாசிகளுக்குள்ளே வழக்குகள்
1உங்களில் யாருக்காவது வேறொருவருடன் மனத்தாங்கல் இருந்தால், அவன் தனது சக பரிசுத்தவான்களிடம் போகாமல் தன் வழக்கை இறை நம்பிக்கையற்றவர்களின் முன்பாக தீர்ப்பதற்காக கொண்டுபோவதேன்? 2பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தை நீங்கள் நியாயம் தீர்க்கப் போகின்றவர்களாய் இருக்கையில் சிறிய வழக்குகளை தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையா? 3தூதர்களை நாம் நியாயம் தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அதைவிட மேலான இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை தீர்ப்பதற்கு நீங்கள் தகுதியற்றவர்களா? 4ஆதலால், அத்தகைய வழக்குகள் உங்களுக்குள் இருக்கும்போது திருச்சபையின் பார்வையில் மதிப்பற்றவர்கள் முன்னாலே ஏன் அதனைக் கொண்டு செல்கிறீர்கள்? 5நீங்கள் வெட்கத்துக்குள்ளாக வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்கின்றேன். உங்களிடையே உள்ள பிணக்கைத் தீர்க்கக் கூடிய ஞானமுள்ள ஒருவனாவது உங்கள் மத்தியில் இல்லையா? 6மாறாக, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு விரோதமாக நீதிமன்றத்துக்குப் போகின்றானே. அதுவும் அவிசுவாசிகளுக்கு முன்பாக இப்படிச் செய்கின்றான்.
7உங்கள் மத்தியில் உள்ள ஒருவருக்கெதிரான இன்னொருவரின் வழக்கு உங்கள் தோல்வியடைந்த நிலையைக் காட்டுகிறது. மாறாக நீங்கள் ஏன் உங்களுக்கு எதிரான தீங்குகளை சகித்துக்கொள்ளக் கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் நீங்கள் ஏன் அதனை பொறுத்துக்கொள்ளக் கூடாது? 8அப்படியிராமல் நீங்களே மற்றவர்களை ஏமாற்றி அநியாயம் செய்கின்றீர்கள். அதுவும் உங்கள் சகோதரருக்கும் அப்படிச் செய்கின்றீர்கள்.
9அநியாயக்காரர்களுக்கு இறைவனுடைய அரசில் உரிமைப் பங்கு இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாதிருங்கள். பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவர்களோ, சிலை வணக்கக்காரர்களோ, தகாத உறவில் ஈடுபடுகின்றவர்களோ, விலை ஆடவர்களோ, ஓரினச் சேர்க்கையாளர்களோ, 10அல்லது திருடரோ, பேராசைக்காரர்களோ, குடிவெறியரோ, பழிசொல்லித் தூற்றுவோரோ, ஏமாற்றுக்காரரோ இறைவனுடைய அரசில் சொத்துரிமை பெற மாட்டார்கள். 11உங்களில் சிலரும் அவ்வாறே இருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரினாலும் நமது இறைவனின் ஆவியானவரினாலும் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்கள் ஆக்கப்பட்டீர்கள்.
பாலியல் ஒழுக்கக்கேடு
12“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு,” ஆனால் எல்லாமே பயனுள்ளவையல்ல. “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு.” ஆனால் நான் ஒன்றுக்கும் அடிமைப்பட மாட்டேன். 13“வயிற்றுக்கு உணவும், உணவுக்கு வயிறும்” என்கிறீர்கள். ஆனாலும் ஒரு நாள் இறைவன் உணவையும் வயிறையும் அழித்து விடுவார். உடல், பாலியல் ஒழுக்கக்கேட்டுக்கு உரியதல்ல. அது ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்குரியவர். 14இறைவன் தமது வல்லமையினால் ஆண்டவர் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினாரே. அவர் நம்மையும் எழுப்புவார். 15உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் அங்கங்கள் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அவ்வாறிருக்க, கிறிஸ்துவின் அங்கங்களை நாம் விலைமாதுடன் இணைக்கலாமா? ஒருபோதும் கூடாதே. 16தன்னை ஒரு விலைமாதுடன் இணைக்கின்றவன், அவளுடன் ஒரே உடலாய் இருக்கின்றான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கின்றபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.”#6:16 ஆதி. 2:24 17ஆனால் ஆண்டவருடன் தன்னை இணைத்துக்கொள்கின்றவன், ஆவியில் அவருடன் ஒன்றிணைந்திருக்கிறான்.
18பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்து விலகியோடுங்கள். மனிதன் செய்யும் மற்ற எல்லாப் பாவங்களும் அவனுடைய உடலுக்குப் புறம்பானவை. ஆனால் பாலியல் பாவத்தைச் செய்கின்றவன் தன் சொந்த உடலுக்கு விரோதமாக செய்கின்றான். 19உங்கள் உடல் நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருக்கும் ஆலயமாய் இருக்கின்றது என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. 20நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் உடலினால் இறைவனை மகிமைப்படுத்துங்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in