YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 4

4
கிறிஸ்துவின் அப்போஸ்தலன்
1எனவே எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள் என்றும் இறைவனின் மறைபொருள்களை பிரசித்தப்படுத்துவதற்கு பொறுப்புடையவர்கள் என்றும் மக்கள் எண்ண வேண்டும். 2எப்போதும் பொறுப்பாளர் உண்மையுள்ளவர் என்று நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம். 3உங்களாலேயாவது, எந்த மனிதருடைய நீதிமன்றத்தினாலேயாவது நான் நியாயம் தீர்க்கப்படுவதை பெரிதாக எண்ணுவதில்லை. நானும் என்னைக் குறித்து நியாயத்தீர்ப்புச் செய்வதில்லை. 4என் மனசாட்சி சுத்தமாயிருக்கிறது, அதனால் நான் குற்றமற்றவன் என்றில்லை. கர்த்தரே என்னை நியாயம் தீர்க்கின்றவர். 5எனவே, குறிக்கப்பட்ட காலம் வருமுன்பே நீங்கள் எவரையும் நியாயம் தீர்க்க வேண்டாம்; ஆண்டவர் வரும்வரை காத்திருங்கள். அவர் இருளில் மறைந்திருப்பவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து மனிதருடைய உள்ளங்களின் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தும்போது, ஒவ்வொருவனும் தனக்குரிய புகழ்ச்சியை இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வான்.
6இப்போதும் பிரியமானவர்களே, என்னையும் அப்பொல்லோவையும் முன்னுதாரணமாக குறிப்பிட்டு உங்கள் நன்மைக்காகச் சொல்கின்றேன்; “எழுதியிருப்பதற்கு அப்பால் போக வேண்டாம்” என்பதன் கருத்தை நீங்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அப்போது ஒருவர் மற்றவரைவிட தன்னை மேலாக எண்ணாமல் இருப்பீர்கள். 7ஏனெனில், உங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் எனக் காண்பவர்கள் யார்? நீங்கள் வரமாகப் பெற்றுக்கொள்ளாத எது உங்களிடம் இருக்கின்றது? நீங்கள் அதை வரமாகப் பெற்றிருந்தால், அதை ஒரு வரமாகப் பெறாத ஒருவனைப் போல் ஏன் பெருமை பாராட்டுகிறீர்கள்?
8உங்களுக்குத் தேவையானதெல்லாம் இருக்கின்றது! நீங்கள் செல்வந்தர்களாகிவிட்டீர்கள்! நாங்கள் இல்லாமல் நீங்கள் அரசர்களாகிவிட்டீர்கள்! நீங்கள் அரசர்களானால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து அரசாளலாமே. 9நான் நினைக்கின்றபடி, இறைவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்கு நியமிக்கப்பட்டவர்களின் வரிசையின் இறுதியில் காட்சிப் பொருளாக நிறுத்தினார். நாங்கள் முழு உலகத்திற்கும் இறைதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் கண்காட்சி#4:9 கண்காட்சி – ரோமர்களின் வேடிக்கை அரங்கத்தில் கொலை செய்யப்படுகின்றவர்கள் காட்சிப் பொருளாக வரிசையில் நிற்க வைக்கப்பட்டு மிருகங்களுடன் உயிருக்கு போராட வேண்டியிருக்கும். ஆனோம். 10கிறிஸ்துவுக்காக நாங்கள் அறிவீனர்கள். ஆனால் நீங்களோ கிறிஸ்துவில் ஞானமுள்ளவர்கள்! நாங்கள் பலவீனர், நீங்களோ பலசாலிகள்! நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், நாங்களோ அவமதிக்கப்படுகிறோம்!
11இந்நேரம் வரையும் நாங்கள் பசியும் தாகமும் உள்ளவர்களாகவும், கந்தல் உடையுடன் துன்பப்பட்டவர்களாகவும், வீடற்றவர்களுமாகவும் இருக்கின்றோம். 12நாங்கள் எங்கள் சொந்தக் கைகளினால் கடுமையாக உழைத்து, மற்றவர்கள் எங்களைச் சபிக்கும்போது ஆசீர்வதிக்கிறோம். துன்புறுத்தப்படும்போது தாங்கிக்கொள்கிறோம். 13மற்றவர்கள் எங்களை அவதூறாய்ப் பேசுகின்றபோது, தயவுடன் பதிலளிக்கிறோம். இதுவரை நாங்கள் உலகத்தின் கழிவுப் பொருளாகவும் பூமியின் குப்பையாகவும் எண்ணப்படுகிறோம்.
பவுலின் முறையீடும் எச்சரிக்கையும்
14நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்பதற்காக நான் இவற்றை உங்களுக்கு எழுதாமல், என் அன்பான பிள்ளைகளென எண்ணி உங்களை எச்சரிப்பதற்காகவே எழுதுகிறேன். 15கிறிஸ்துவுக்குள் உங்களுக்குப் பத்தாயிரம் பாதுகாவலர்கள் இருந்தாலும், தந்தைமார் அநேகர் இல்லை. நற்செய்தியின் மூலமாக நான் ஒருவனே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களுக்குத் தந்தையானேன். 16ஆகவே நீங்களும் என்னைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். 17இதற்காகவே, எனக்கு அன்பானவனும் கர்த்தருக்குள் உண்மையுள்ளவனுமாகிய என் மகன் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். நான் எல்லாத் திருச்சபைகளிலும் எல்லா இடங்களிலும் போதித்து வருகின்ற கிறிஸ்து இயேசுவோடு இணைந்த என் வாழ்க்கை முறையை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.
18நான் உங்களிடம் மீண்டும் வர மாட்டேன் என்று உங்களில் சிலர் கர்வம் கொண்டிருக்கிறீர்கள். 19ஆனால் கர்த்தருக்கு விருப்பமானால் நான் மிக விரைவில் உங்களிடம் வந்து இந்த கர்வம் கொண்டவர்களின் பேச்சை அல்ல, அவர்களின் பலத்தை அறிந்துகொள்வேன். 20ஏனெனில், இறைவனின் அரசு பேச்சிலே அல்ல, வல்லமையிலே தங்கியிருக்கிறது. 21நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நான் உங்களிடம் பிரம்புடன் வர வேண்டுமா? அல்லது அன்புடனும் சாந்தமுள்ள ஆவியுடனும் வர வேண்டுமா?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in