யோவான் 5
5
நோயுற்றவன் சுகமடைதல்
1இவைகளுக்குப் பின்பு, யூதர்களுடைய ஒரு பண்டிகைக்கு இயேசு எருசலேமுக்குச் சென்றார். 2எருசலேமிலே ஆட்டு வாசலின் அருகே ஒரு குளம் இருந்தது. அது எபிரெய மொழியிலே பெதஸ்தா#5:2 சில கையெழுத்துப் பிரதிகளில் பெத்சதா என்றும், மற்ற கையெழுத்துப் பிரதிகளில் பெத்சாய்தா என்றுமுள்ளது. என்று அழைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. 3அங்கே பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் போன்ற அநேக நோயாளிகள் படுத்திருப்பது வழக்கம். அவர்கள் தண்ணீர் கலங்கும் வேளைக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். 4சிலவேளைகளில் கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கிவந்து அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் சுகமடைவான்.#5:4 சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் சேர்க்கப்பட்டுள்ளது. 5அங்கிருந்த ஒருவன் முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான். 6இயேசு அவனைக் கண்டு, அங்கே அவன் அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்துகொண்டார். அவர் அவனிடம், “நீ சுகமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
7அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு எனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், வேறொருவன் எனக்கு முன்பாகவே இறங்கி விடுகிறான்” என்றான்.
8அப்பொழுது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட” என்றார். 9உடனே அவன் குணமடைந்தான்; மேலும் தன் படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனான்.
இது நிகழ்ந்த நாள் யூதருடைய ஒரு ஓய்வுநாளாயிருந்தது. 10எனவே யூதத்தலைவர்கள், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையை எடுத்துக்கொண்டு போவதை மோசேயின் சட்டம் தடைசெய்கிறது” என்றார்கள்.
11அவன் அதற்கு, “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான்.
12எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள்.
13சுகமடைந்தவனுக்கோ, தன்னை குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில் இயேசு அங்கு கூடியிருந்த மக்களிடையே போய் மறைந்துவிட்டார்.
14பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “பார், நீ சுகமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமானது ஏதாவது உனக்கு நேரிடலாம்” என்றார். 15அவன் பிறகு புறப்பட்டுப்போய் தன்னை குணமாக்கியது இயேசுவே என்று யூதருக்குச் சொன்னான்.
இறைமகனின் மூலமாக நித்திய ஜீவன்
16இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர் இயேசுவைத் துன்புறுத்தினார்கள். 17இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கிறார்; நானும் வேலைசெய்கிறேன்” என்றார். 18இயேசு ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தந்தை என்றும் சொல்லி தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர் அவரைக் கொலைசெய்ய இன்னும் அதிகமாய் முயற்சிசெய்தார்கள்.
19இயேசு அவர்களுக்கு சொன்னது: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எவைகளையெல்லாம் பிதாவானர் செய்கிறதை மகன் காண்கிறாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்யமாட்டார்; பிதா எவைகளை செய்கிறாரோ அவைகளையே மகனும் செய்கிறார். 20ஏனெனில் பிதா மகனில் அன்பாயிருந்து, தாம் செய்வதையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார். ஆம், நீங்கள் வியப்படையும்படி பிதா இவற்றை விடவும் பெரிதான செயல்களைக் காண்பிப்பார். 21பிதா மரித்தவர்களை உயிருடன் எழுப்பி, அவர்களுக்கு ஜீவன் கொடுப்பது போலவே, மகனும் தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார். 22மேலும், பிதா ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பை கொடுக்கும் வேலை முழுவதையும் மகனிடமே ஒப்படைத்திருக்கிறார். 23எல்லா மனிதரும் பிதாவைக் கனம் பண்ணுவதுபோல, மகனையும் கனம்பண்ணும்படி இப்படிச் செய்தார். மகனுக்கு கனம் கொடாத எவனும், அவரை அனுப்பிய பிதாவுக்கும் கனம் கொடாதிருக்கிறான்.
24“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். 25மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள். 26பிதா தம்மில்தாமே ஜீவனாய் இருப்பதுபோல, மகனும் தம்மில்தாமே நித்திய ஜீவனாய் இருக்கும்படி செய்கிறார். 27நான் மானிடமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும் பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார்.
28“இதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் காலம் வருகிறது, கல்லறைகளில் இருக்கிறவர்கள் எல்லோரும் மானிடமகனுடைய குரலைக் கேட்டு, வெளியே வருவார்கள். 29நல்ல செயல்களைச் செய்தவர்கள் ஜீவன் பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள். 30சுயமாய் நான் எதையும் செய்ய முடியாதிருக்கிறேன்; பிதா சொல்கிறபடி மட்டுமே நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில் நான் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாடுகிறேன்.
இயேசுவைக்குறித்த சாட்சிகள்
31“என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது. 32எனக்காகச் சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கிறார். என்னைப்பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன்.
33“நீங்கள் யோவானிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான். 34மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே நான் இதைச் சொல்கிறேன். 35யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் அவனுடைய வெளிச்சத்தில் சொற்ப காலத்திற்கு மகிழ்ச்சியடைவதைத் தெரிந்துகொண்டீர்கள்.
36“யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மதிப்புள்ள சாட்சி எனக்கு இருக்கிறது. நான் செய்து முடிக்கும்படி பிதா எனக்கு ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அதையே நான் செய்கிறேன். அந்த வேலையே பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கிறது. 37என்னை அனுப்பிய பிதா தாமே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை, 38அவருடைய வார்த்தை உங்களில் தங்கியிருப்பதும் இல்லை. ஏனெனில் நீங்கள் அவர் அனுப்பியவரை விசுவாசியாமல் இருக்கிறீர்கள். 39நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. 40ஆனால் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி என்னிடம் வருவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை.
41“மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்கிறதில்லை. 42ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்கள் இருதயத்தில் இறைவனுக்கு அன்பு இல்லை என்பதை நான் அறிவேன். 43நான் என் பிதாவின் பெயரில் வந்திருக்கிறேன். நீங்களோ என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்; இன்னொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 44நீங்களோ ஒருவரிடமிருந்து இன்னொருவர் புகழ்ச்சியை பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரே இறைவனாயிருக்கும் அவரிடமிருந்து வரும் புகழைத் தேட முயற்சியாமல் இருக்கிறீர்கள். இப்படியிருக்க நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
45“பிதாவுக்கு முன் நான் உங்களைக் குற்றம் சாட்டுவேன் என்று நினைக்கவேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மோசேயே உங்களைக் குற்றம் சாட்டுவான். 46நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவன் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறான். 47மோசே எழுதி வைத்திருப்பதையே நீங்கள் விசுவாசிக்கவில்லை. அப்படியிருக்க நான் சொல்வதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார்.
Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:
யோவான் 5: TCV
Ìsàmì-sí
Pín
Daako
Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.