யோவான் 6
6
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்தல்
1இவை நடந்த கொஞ்சக் காலத்திற்கு பின்பு, இயேசு கலிலேயா கடலின் மறுகரைக்குச் சென்றார். இது திபேரியா கடல் என்றும் அழைக்கப்பட்டது. 2நோயாளிகளுக்கு இயேசு செய்த அடையாளங்களை கண்டிருந்ததினால், மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். 3அப்பொழுது இயேசு ஒரு மலைச்சரிவில் ஏறிப்போய், தமது சீடர்களுடன் உட்கார்ந்தார். 4யூதருடைய பஸ்கா என்ற பண்டிகை சமீபமாயிருந்தது.
5இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, மக்கள் பெருங்கூட்டமாகத் தம்மிடம் வருவதைக் கண்டார். அவர் பிலிப்புவிடம், “இந்த மக்கள் சாப்பிடும்படி உணவை நாம் எங்கே வாங்கலாம்?” என்று கேட்டார். 6அவனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இயேசு அதைக் கேட்டார். ஏனெனில் தாம் என்ன செய்யப்போகிறார் என்று அவர் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்.
7பிலிப்பு இயேசுவுக்கு மறுமொழியாக, “ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பிடி அளவு உணவு கொடுத்தால்கூட, இவர்களுக்காக உணவு வாங்க, ஆறுமாதச் சம்பளம்#6:7 200 தினாரி போதாதே!” என்றான்.
8அவருடைய சீடர்களில் இன்னொருவனான சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா அவரிடம், 9“இங்கே ஒரு சிறுவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு சிறு மீன்களும் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரும் கூட்டமான மக்களுக்கு அது எப்படிப் போதும்?” என்றான்.
10அதற்கு இயேசுவோ, “மக்களை உட்காரச் செய்யுங்கள்” என்றார். அந்த இடமோ புல் நிறைந்த தரையாய் இருந்தது. எனவே மக்கள் உட்கார்ந்தார்கள். அவர்களில் ஆண்கள் மட்டும் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள். 11அப்பொழுது இயேசு அந்த அப்பங்களை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தியபின் அங்கு உட்கார்ந்திருப்பவர்களுக்கு வேண்டியமட்டும் பகிர்ந்து கொடுத்தார். மீன்களையும் அவ்விதமாகவே கொடுத்தார்.
12அவர்கள் எல்லோரும் திருப்தியாய் சாப்பிட்டு முடிந்ததும், இயேசு சீடர்களிடம், “மீதியாயிருக்கும் அப்பத்துண்டுகளை சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளில் ஒன்றையும் வீணாக்கக் கூடாது” என்றார். 13அப்படியே அவர்கள் மீந்தவற்றைச் சேர்த்தெடுத்தார்கள். அந்த ஐந்து வாற்கோதுமை அப்பத்தின் துண்டுகளிலிருந்து சாப்பிட்டு மீதியாய் விடப்பட்டவற்றை அவர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
14இயேசு செய்த அந்த அற்புத அடையாளத்தை மக்கள் கண்டபோது, “நிச்சயமாக இவரே உலகத்திற்கு வரவேண்டியிருந்த இறைவாக்கினர்” என்று சொல்லத் தொடங்கினார்கள். 15அவர்கள் தம்மைப் பலவந்தமாய் தங்களுடைய அரசனாக்க எண்ணியிருக்கிறார்கள் என்று இயேசு அறிந்தார். எனவே அவர் அவர்களைவிட்டு விலகி, மீண்டும் தனியாகவே ஒரு மலைக்குச் சென்றார்.
இயேசு தண்ணீரின்மேல் நடத்தல்
16மாலையானபோது, அவருடைய சீடர்கள் மலையிலிருந்து இறங்கி கடலுக்குச் சென்றார்கள். 17அங்கே அவர்கள் ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து கப்பர்நகூமுக்குப் போகப் புறப்பட்டார்கள். அப்பொழுது இருட்டிவிட்டது, இயேசுவோ இன்னும் அவர்களுடன் வந்து சேரவில்லை. 18கடும் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால் கடல் கொந்தளித்தது. 19அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தூரம்வரை கட்டுப்படுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, இயேசு கடலின்மேல் நடந்து படகின் அருகில் வந்தார்; அவர்கள் அவரைக்கண்டு பயந்தார்கள். 20இயேசு அவர்களிடம், “நான்தான்; பயப்படவேண்டாம்” என்றார். 21அப்பொழுது அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஏற்றிக்கொண்டவுடன் படகு அவர்கள் போய்ச் சேரவேண்டிய கரையை அடைந்தது.
22மறுநாள் கடலின் மறுகரையில் தங்கியிருந்த மக்கள், அங்கே ஒரு படகு மட்டுமே இருந்தது என்றும், அதிலே இயேசு தமது சீடர்களுடன் ஏறவில்லை என்றும், சீடர்கள் மட்டுமே அதில் சென்றார்கள் என்றும் தெரிந்துகொண்டார்கள். 23பின்பு திபேரியாவிலிருந்து சில படகுகள், கர்த்தர் நன்றி செலுத்தி பகிர்ந்து கொடுத்த அப்பத்தை மக்கள் சாப்பிட்ட இடத்தின் அருகே வந்துசேர்ந்தன. 24எனவே அங்கு கூடிவந்த மக்கள், இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கு இல்லையென்று கண்டார்கள். உடனே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு அங்கிருந்த கப்பல்களில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றார்கள்.
இயேசுவே ஜீவ அப்பம்
25கடலின் மறுகரையிலே அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவர்கள் அவரிடம், “போதகரே, எப்பொழுது நீர் இங்கே வந்தீர்?” என்று கேட்டார்கள்.
26அப்பொழுது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் அடையாளங்களைக் கண்டதினால் அல்ல, இங்கே திருப்தியாகச் சாப்பிட்டதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள். 27அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார்.
28அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “இறைவனுடைய வேலையை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
29இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இறைவன் அனுப்பிய என்னை விசுவாசிப்பதே இறைவனுடைய வேலை” என்றார்.
30அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் கண்டு உம்மை விசுவாசிக்கும்படி, நீர் எங்களுக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பீர்? என்னத்தைச் செய்வீர்? 31எங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்களே; ‘அவர்கள் சாப்பிடுவதற்கு அவர் பரலோகத்திலிருந்து உணவு கொடுத்தார்’#6:31 யாத். 16:4; நெகே. 9:15; சங். 78:24,25 என்று எழுதியிருக்கிறதே” என்றார்கள்.
32அப்பொழுது இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலிருந்து உங்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல, என் பிதாவே பரலோகத்திலிருந்து வந்த உண்மையான உணவை உங்களுக்குக் கொடுக்கிறார். 33பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, உலகத்துக்கு ஜீவன் கொடுக்கிற நானே இறைவனின் உணவு” என்றார்.
34அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எப்பொழுதும் இந்த உணவை நீர் எங்களுக்குத் தாரும்” என்றார்கள்.
35அப்பொழுது இயேசு அவர்களிடம், “நானே ஜீவ அப்பம். என்னிடம் வருகிறவன் ஒருபோதும் பசியுடன் போகமாட்டான். என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் தாகமடையமாட்டான். 36நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என்னைக் கண்டு இன்னும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள். 37பிதா எனக்குக் கொடுக்கின்ற அனைவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒருவரையும் நான் துரத்திவிடமாட்டேன். 38ஏனெனில் நான் என்னுடைய சித்தத்தைச் செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்வதற்காகவே பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன். 39அவர் எனக்குத் தந்திருப்பவர்கள் எல்லோரிலும் நான் ஒருவரையும் இழந்துவிடக் கூடாது. கடைசி நாளிலே நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது. 40என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார்.
41“நானே பரலோகத்திலிருந்து கீழே வந்த உணவு” என்று இயேசு சொன்னதால், யூதர்களில் சிலர் அவரைக்குறித்து முறுமுறுக்கத் தொடங்கினார்கள். 42அவர்கள் இயேசுவைப்பற்றி, “இவர் யோசேப்பின் மகன் இயேசு அல்லவா? இவருடைய தகப்பனையும் தாயையும் நமக்குத் தெரியுமே. அப்படியிருக்க, ‘நான் பரலோகத்திலிருந்து வந்தேன்’ என்று இப்பொழுது இவர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
43இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முறுமுறுத்துக் கொள்வதை நிறுத்துங்கள்” என்றார். 44“என்னை அனுப்பிய பிதா, ஒருவனை ஈர்த்துக்கொள்ளாவிட்டால், ஒருவரும் என்னிடத்தில் வரமாட்டார்கள். என்னிடம் வருகிறவரையோ நான் கடைசி நாளில் எழுப்புவேன். 45‘அவர்கள் எல்லோரும் இறைவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’#6:45 ஏசா. 54:13 என்று இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே பிதாவுக்குச் செவிகொடுத்து, அவரிடம் கற்றுக்கொள்கிற ஒவ்வொருவனும் என்னிடம் வருகிறான். 46இறைவனிடமிருந்து வந்த என்னைத்தவிர, ஒருவரும் பிதாவைக் கண்டதில்லை; நான் மட்டுமே பிதாவைக் கண்டிருக்கிறேன். 47மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. 48நானே ஜீவ அப்பம். 49உங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்கள்; ஆனால் அவர்கள் இறந்துபோனார்களே. 50ஆனால் புசிக்கிறவர்கள் சாகாமல் இருக்கக்கூடிய அப்பம் இங்கு இருக்கிறது. அது பரலோகத்திலிருந்து வந்திருக்கிறது. 51நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார்.
52அப்பொழுது யூதர்கள், “இவன் எப்படி தன் மாம்சத்தை நமக்குச் சாப்பிடக் கொடுப்பான்?” என்று தங்களுக்குள்ளே கடுமையாய் வாக்குவாதம் பண்ணத் தொடங்கினார்கள்.
53இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் மானிடமகனாகிய எனது மாம்சத்தைச் சாப்பிட்டு, என்னுடைய இரத்தத்தை பானம் பண்ணாவிட்டால் உங்களுக்குள்ளே ஜீவன் இருக்கமாட்டாது. 54எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். 55ஏனெனில் எனது மாம்சமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். 56எனது மாம்சத்தைப் புசித்து, எனது இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவர், என்னில் தங்கி வாழ்கிறார். நானும் அவரில் வாழ்கிறேன். 57ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினார். பிதாவின் நிமித்தமே நான் உயிர் வாழ்கிறேன். அதைப் போலவே என் மாம்சத்தைப் புசிக்கிறவர் என் நிமித்தம் வாழ்வடைவார். 58இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். 59இயேசு கப்பர்நகூமிலே ஜெப ஆலயத்தில் போதித்தபோது இதைச் சொன்னார்.
சீடர்களில் பலர் இயேசுவை விட்டுவிடுதல்
60இதைக் கேட்ட இயேசுவினுடைய சீடர்களில் பலர், “இது ஒரு கடுமையான போதனை. யாரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றார்கள்.
61தமது சீடர்கள் இதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு அறிந்து அவர்களிடம், “இது உங்கள் மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறதா? 62மானிடமகனாகிய நான் முன்பிருந்த இடத்திற்கு மேலெழுந்து போவதை நீங்கள் கண்டீர்களானால், அது உங்களுக்கு எப்படியிருக்கும்! 63பரிசுத்த ஆவியானவரே ஜீவனைக் கொடுக்கிறார்; மாம்சமானதோ ஒன்றுக்கும் உதவாது. நான் உங்களுடன் பேசிய வார்த்தைகள் ஆவியானவரையும் ஜீவனையும் கொண்டுள்ளன. 64ஆனால் உங்களில் சிலர் விசுவாசியாமல் இருக்கிறீர்கள்” என்றார். ஏனெனில் இயேசு தொடக்கத்திலிருந்தே அவர்களில் யார் தம்மை விசுவாசிக்கவில்லை என்றும், யார் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்றும் அறிந்திருந்தார். 65மேலும் இயேசு சொன்னதாவது, “யாரையாவது என் பிதா எனக்கு கொடுத்தால் மட்டுமே, அவர் என்னிடம் வரமுடியும் என்று இதனாலேயே நான் உங்களுக்குச் சொன்னேன்” என்றார்.
66அப்பொழுதிலிருந்து இயேசுவின் சீடர்களில் பலர் அவரைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். தொடர்ந்து அவர்கள் அவரைப் பின்பற்றவில்லை.
67அப்பொழுது இயேசு பன்னிரண்டு பேரிடமும், “நீங்களும் போய்விட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
68சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. 69நீர் இறைவனின் பரிசுத்தர் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்” என்றான்.
70அப்பொழுது இயேசு, “பன்னிரண்டு பேராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? ஆனால் உங்களில் ஒருவன் பிசாசாக இருக்கிறான்!” என்றார். 71இயேசு சீமோன் ஸ்காரியோத்தின் மகனான யூதாஸைக் குறித்தே இவ்விதம் சொன்னார். அவன் பன்னிரண்டு பேரில் ஒருவனாயிருந்தும் அவரைக் காட்டிக்கொடுக்கிறவனாய் இருந்தான்.
Àwon tá yàn lọ́wọ́lọ́wọ́ báyìí:
யோவான் 6: TCV
Ìsàmì-sí
Pín
Daako
Ṣé o fẹ́ fi àwọn ohun pàtàkì pamọ́ sórí gbogbo àwọn ẹ̀rọ rẹ? Wọlé pẹ̀lú àkántì tuntun tàbí wọlé pẹ̀lú àkántì tí tẹ́lẹ̀
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.