சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்மாதிரி
துதியின் கண்ணீர்
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தணம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். சங்கீதம் 30:4
சில வருடங்களுக்கு முன்பு, மரணத்தறுவாயில் இருந்த எனது தாயாரைப் பராமரித்து வந்தேன். தாயாரைப் பராமரிப்பவராக அவருக்குச் சேவை செய்ய தேவன் எனக்கு நான்கு மாதங்களை அனுமதித்ததற்காக தேவனுக்கு நன்றி கூறினேன். மேலும், அந்த துயரமான செயற்பாட்டினூடாகக் கடந்துசெல்ல உதவிசெய்யும்படி நான் தேவனிடம் கேட்டேன். எனது குழப்பமான உணர்வுகளுடன் நான் முட்டிமோதுகையில், தேவனைத் துதிப்பதற்கு நான் அடிக்கடி போராடினேன். ஆனால் எனது தாயார் தனது இறுதி மூச்சை விட்டதும் நான் கட்டுப்பாடற்று மிகவும் அழுது, “அல்லேலூயா” என்று எனக்குள் மெதுவாகக் கூறினேன். சில வருடங்களின் பின்னர், 30ம் சங்கீதத்தை மிகவும் கிட்ட நெருங்கிப் பார்க்கும்வரைக்கும், அன்று அத்தகைய கொடூரமான கணத்தில் தேவனை துதித்ததையிட்டு நான் மிகவும் குற்ற உணர்வு கொண்டிருந்தேன்.
“ஆலயப் பிரதிஷ்டைக்காக” பாடிய தாவீதின் சங்கீதத்தில், தேவனுடைய உண்மைத்துவத்திற்காகவும் இரக்கத்திற்காகவும் அவர் தேவனை ஆராதித்தார் (வசனம் 1-3). “அவருடைய பரிசுத்த நாமத்தைத் துதிக்கும்படியாக” அவர் பிறரையும் ஊக்குவித்தார் (வசனம் 4). அதன்பின்பு, கஷ்ட துன்பத்தையும் நம்பிக்கையையும் தேவன் எப்படிப் பிணைக்கிறார் என்பதனை தாவீது ஆராய்ந்து அறிந்தார் (வசனம் 5). துக்கத்தின் காலத்தையும் மகிழ்ச்சியின் காலத்தையும், பாதுகாப்பை உணர்ந்த காலத்தையும், திகிலடைந்தவராய் இருந்ததையும் அவர் ஏற்றுக்கொண்டார் (வசனம் 6-7). அவர் தேவனில் கொண்டிருந்த நம்பிக்கையில் நிலைத்திருந்துகொண்டே உதவிக்காக அழுகிறார் (வசனம் 7-10). தாவீதினுடைய அழுகை மற்றும் நடனம், துக்கம் மற்றும் மகிழ்ச்சி என்று இந்தக் கணங்களுக்கூடாக அவருடைய துதியின் எதிரொலி கோர்வையாக இணைந்துநிற்கிறது (வசனம் 11). இன்னல்களைத் தாங்கிக்கொள்வதினதும், தேவனுடைய உண்மைத்துவத்தை எதிர்பார்ப்பதினதும் புரியாததும் குழப்பமானதுமான நிலைமையை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, தாவீது தேவனுக்கான முடிவில்லாத பக்தியைப் பிரகடனப்படுத்துகிறார் (வசனம் 12).
தாவீதைப்போலவே, “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” என்று நாம் பாடமுடியும் (வசனம் 12). நாம் சந்தோஷமாய் அல்லது வருத்தப்படுகிறவர்களாய் இருந்தாலும், தேவன்மீதுள்ள நமது நம்பிக்கையைப் பறைசாற்றவும், ஆனந்த சத்தத்தோடும் துதியின் கண்ணீரோடும் அவரை ஆராதிப்பதற்கும் நமக்கு உதவிசெய்ய தேவனால் கூடும். – சொசிட்ல் டிக்சன்
பிரதிபலிப்பு: உங்கள் குழப்பமான உணர்வுகளுடன் தேவனை நம்புவதற்கு தேவன் உங்களுக்கு எவ்வாறு உதவியுள்ளார்? இன்னமும் கஷ்டங்களின் மத்தியில் செல்லுகையில் அவரை எப்படி உங்களால் துதிக்க முடியும்?
ஜெபம்: அன்பின் தேவனே, எனது உணர்வுகளின் செயலாக்கங்களிலும் உம்மை நம்புவதற்கும் உம்மைத் துதிப்பதற்கும் தயவுபண்ணி எனக்கு உதவி செய்யும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread Asia Pacific க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/