கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி
6.பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்!
மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது என்பது என்னால் என்றுமே முடியாத ஒன்று. நான் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழியை சுமத்தவும் மாட்டேன்.
இன்றைய வேதாகம வசனம் நிச்சயமாக என் மனதை நெகிழ வைத்தது. அவள் தாவீதண்டை சென்று தன் கணவனாகிய நாபால் செய்த அட்டூழியத்துக்கு பழியைத் தானாக முன்வந்து தன்மேல் ஏற்றுக் கொண்ட ஒரு தைரியமானப் பெண்ணாகப் பார்த்தேன்.
அபிகாயில் தன்னுடைய குடும்பத்துக்காக எல்லாப் பழியையும் ஏற்றுக்கொண்டாள். அதுமட்டுமல்ல தாவீதின் நல்ல உள்ளத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அவள் அவனுடைய பட்டயம் ஏந்திய கோபமான உள்ளத்தை அல்ல, அவனுடைய இளகிய உள்ளத்தைத் தொட முயற்சி செய்தாள். கோபமாய் வந்த தாவீதிடம் என் கணவன் செய்தது தவறு என்றால் நீ செய்கிறது நியாயமா என்று வாதம் பண்ணாமல், மொத்தத் தவறுக்கும் தானே பொறுப்பு என்கிறாள்.
அபிகாயில் எந்தவிதத்திலும் பொறுப்பு அல்ல என்று தாவீது நன்கு அறிவான். அபிகாயிலின் வாயிலிருந்து இந்த தாழ்மையான மென்மையான வார்த்தைகள் புறப்பட்டவுடனே அவன் உள்ளம் இளகிற்று, அவன் பட்டயம் இறங்கிற்று.
நம்முடைய வாழ்க்கையில் நாம் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க என்னென்ன முயற்சிகள் எடுப்போம்! அதற்காக கடுமையாக எந்த நிலைக்கு வேண்டுமானலும் போய் போராடுவோம் அல்லவா! நாம் பட்டயத்தை கீழே இறக்கி, சமாதானத்தை உண்டு பண்ணாமல், நாம் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்கத்தானே போராடுவோம்!
ஆனால் அபிகாயில் என்ன செய்தாள் பாருங்கள்!
பழியை யார் ஏற்பது என்பது முக்கியம் இல்லவே இல்லை, சண்டையை யார் நிற்பாட்டுவது என்பதுதான் முக்கியம் என்று நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்.
என்ன ஆச்சரியம்! தன்னைப்பற்றி சிந்திக்காமல் மற்றவர்களின் நலனுக்காக போராட வந்திருக்கும் அபிகாயிலுடன் போராட முடியாது என்று முடிவு செய்தான் தாவீது!
இன்று நான் அபிகாயிலின் இடத்தில் இருந்தால், நாபாலுடைய குற்றத்தின் பழியை என் தலையில் ஏற்றுக்கொண்டிருப்பேனா என்று யோசிக்கும்போது அபிகாயில் என் மனதில் ஒரு உயர்ந்த இடம் பெற்றாள்!
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com