கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி
20. உனக்காகவும் ஒரு திட்டம் உண்டு!
1 சாமுவேல்: 25:42 பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாதிபதிகளுக்குப் பின்சென்று போய் அவனுக்கு மனைவியானாள்.
நான் இதற்கு முன்னால் இந்தப் பகுதியை வாசிக்கும்போதெல்லாம், ஒரு பணக்கார விதவையான அபிகாயில், தாவீதை மணந்து சந்தோஷமாக வாழ்ந்தாள் என்றுதான் நினைத்துக்கொள்வேன். ஆனால் அபிகாயிலின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் படிக்கும் போது தான் அது தவறான எண்ணம் என்று புரிந்தது. அவள் தாவீதின் நாடோடி வாழ்க்கையில் அல்லவா பங்கெடுக்க வேண்டியிருந்தது!
தாவீது தன்னிடம் ஆள் அனுப்பியபோது அவள் மறு பேச்சில்லாமல் அதை ஏற்றுக்கொண்டாள் என்று பார்த்தோம். நாபாலால் அவள் உள்ளம் காயப்பட்டிருந்தது! அவனுடைய திடீர் மரணம் வேறு அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது!
அதுமட்டுமல்ல! அபிகாயில், தாவீது இருவரின் வாழ்க்கையிலும் முந்தைய திருமணத்தில் ஏற்பட்ட தோல்வி மனதில் இன்னும் ஆறாத காயமாகத் தான் இருந்திருக்கும். தாவீது சவுல் ராஜாவின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்திருந்தான். இந்த25 ம் அதிகாரம் 44 ம் வசனத்தில் பார்க்கிறோம், சவுல் அவளை வேறொருவனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தான் என்று. ஒருவேளை சவுல் தனக்கு தாவீதின் மீது இருந்த வெறுப்பை இவ்விதமாக வெளிப்படுத்தியிருந்திருப்பான். காயத்தோடு ஒன்று சேர்ந்த இருவரும், ஒருவர் காயத்துக்கு மற்றொருவர் மருந்து போடவேண்டும் என்றுதான் எதிர்பார்த்திருப்பார்கள்!
எல்லா எதிர்பார்ப்புகளோடும் வந்த அந்தப் பெண்ணுக்கு கிடைத்தது, 400 பேர்களோடு ஓடி ஒளிய வேண்டிய நாடோடி வாழ்க்கைதான். ஆனால் இஸ்ரவேலின் தேவன் தாவீதைக் கொண்டு தீட்டியிருந்த திட்டம் அவளுக்குப புரிந்தது! துராகிரதனாகிய நாபாலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே தேவன் அவளை இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜாவின் மனைவியாகக் கண்டார்!
தாவீதோடு வாழ்ந்ததின் அடையாளமாக அவளுக்கு ஒரு குமாரன் இருந்தான் என்றும், அவள் தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டபோது கூட இருந்தாள் என்றும் வேதத்தில் பார்க்கிறோம். அதைவிட அதிகமாக அவளைப்பற்றி எதுவும் கூறப்படவில்லையானாலும், அவள் தாவீதுக்கு அறிவாலும், ஆற்றலாலும் உறுதுணையாக இருந்திருப்பாள் என்றே நம்புகிறேன்.
அபிகாயில் புத்திசாலித்தனமும், அன்பும், தாழ்மையும் நிறைந்தவளாய் மலர்ந்திருந்தாள்! ஆனால் அவளுடைய வாழ்க்கை அன்பற்ற , முரட்டுத்தனமான முட்களுக்குள்தான் அடைபட்டிருந்தது. தேவனுடைய சித்தத்தின் படி ராஜாவாக அபிஷேகம் பெற்ற தாவீது வனாந்திரத்தில் அலைந்து கொண்டிருந்த போது, அவள் தாவீதை சந்தித்ததும், அவனை மணந்ததும் அந்த கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள் பூத்த மலரைப்போல் அமைந்தது!
இதை வாசித்துக் கொண்டிருக்கும் தேவனுடைய பிள்ளைகளே! இன்று எந்த சூழ்நிலையில், எப்படிப்பட்ட முட்களின் மத்தியில் நீ வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒன்றை மட்டும் மறந்து விடாதே! தேவனாகியக் கர்த்தர் உன் சிறுமையைக் காண்கிறார்! அவர் உனக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்! உலகம் இன்று உன்னை வெறுக்கலாம், உன் குடும்பம் உன்னை வெறுக்கலாம் ஆனால் தேவன் உன்னை ஒரு உன்னதமான பாத்திரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்!
நீயும் முட்களுக்குள்ளே மலர்ந்து நறுமணம் வீசுவாய்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com