கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

20 ல் 8 நாள்

8.கனவுகள் நொறுங்கிய வாழ்க்கையா?

1 சாமுவேல் 25:25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது.

அபிகாயில் தன்னை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு யாரையும் குற்றம் சுமத்தாமல், பழியைத் தானே ஏற்றுக்கொண்டு, சாந்தமான வார்த்தைகளால் தாவீதிடம் பேசினாள் என்று பார்த்தோம்.

அவள் பேச ஆரம்பித்தவுடனே அவள் எவ்வளவு பேசினாள் என்பதை படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தாவீது ஒரு அழகிய, ஆற்றல்மிக்க, இளமை நிறைந்த வாலிபன். அவனைப் பார்த்ததும் அவள் அவனைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் அவள் வாயைத் திறந்ததுமே உண்மையைப் பிட்டு வைக்க ஆரம்பித்தாள்.

நாம் சாதாரணமாகப் பேசுவது போல, நான் யாருக்கு கழுத்தை நீட்டியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்று நாபாலின் துர்க்குணத்தை இரண்டே இரண்டு வாசகங்களில் விளக்கி விட்டாள்.

அபிகாயில் வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு தயவு தாட்சியம் இல்லாத, ஒரு அசுத்த நடக்கயுள்ள ஒருவனோடுதான்! எத்தனை பரிதாபம்! நிச்சயமாக அவள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கவே முடியாது.

இன்று நம்முடைய 21 வது நூற்றாண்டில் இந்த நிலைமை மாறியிருக்கிறதா?இன்றும் நம்மில் பலர் நாபாலோடுதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அபிகாயிலின் திருமணம் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்டதாகத்தான் இருந்திருக்கும். அன்று அவள் வாழ்ந்த காலத்தில் அப்படிதான் நடந்தது. அதுமட்டுமல்ல! திருமண பந்தங்களுக்கு பணம் ஒரு காரணமாயிருந்தது. அபிகாயிலின் தகப்பனார் அவளை ஒரு பணக்காரனுக்குக் கட்டிக் கொடுக்கத்தான் விரும்பியிருப்பார். அபிகாயிலின் குடும்பம் கூட பணக்காரர்களாக இருந்திருக்கலாம்! பணக்காரர்கள் ஒருவரோடு ஒருவர் சம்பந்தம் கலந்து கொள்வது இன்றும் நம்மிடையே வழக்கம்தானே!

நாம் ஒருவேளை இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தால் நமக்கு ஏமாற்றமும் ஆத்திரமும் தான் வந்திருக்கும்.

ஆனால் அபிகாயிலின் குரலில் எந்த ஆத்திரமும், கோபமும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றிக் கூறவில்லை. தான் ஒரு பேலியாளின் மகனோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக தாவீதிடம் கூறுகிறாள். தன்னுடைய் கணவனின் செயலில் தனக்கு கொஞ்சம்கூட பிரியமில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறாள்.

எத்தனை தெளிவு! எத்தனை சாந்தம்! எப்படி அபிகாயிலால் இப்படி இருக்க முடிந்தது!

அபிகாயிலைப் போல உன் வாழ்க்கை அமைந்து விட்டதா? நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லையா? உன் கனவுகள் நொறுங்கிப்போய் விட்டனவா? கசப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?

உன்னை உண்மையாய் நேசிப்பவர் ஒருவர் உண்டு! அவர் இயேசு கிறிஸ்து! அவருடைய உண்மையான அன்பு உன் உள்ளத்தில் வேரூன்றியிருக்கும் கசப்பை மாற்றும்! அவரிடம் வா!

வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com