இயேசு: நம் ஜெயக்கொடிமாதிரி
சுகவீனத்தின் மீது ஜெயம்
இயேசுவின் தழும்புகளால் நாம் குணமாகிறோம் என்று கர்த்தருடைய வார்த்தை நமக்கு கூறுகிறது. இயேசுவானவர் மரித்து பின் உயிர்த்தெழுந்த போது, அவர் பாவம், மரணம் மற்றும் வியாதியை அவற்றின் எல்லா வடிவங்களிலும் நித்தியமாக தோற்கடித்தார். அவர் மூலமாக, அவருடைய வெற்றியில் நாமும் பங்குபெறுகிறோம், என்பது மிகவும் அற்புதமான காரியம்! ஆனால் விழுந்து போன உலகில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கையில் சுகவீனங்களின் மேல் ஜெயம் என்பது நமக்கு எதைக் குறிக்கிறது?
புதிய ஏற்பாட்டின் முழுமையிலும், நாம் இயேசுவின் மூலமும் அவருடைய நாமத்தின் அதிகாரத்தினால் அப்போஸ்தலர்கள் மூலமும் வியத்தகு குணப்படுத்துதலின் எடுத்துக்காட்டுகளை காணலாம். இத்தகைய குணப்படுத்தலின் சாட்சிகளை வாசிக்கும் போது, கர்த்தர் நம்முடைய சுகவீனத்தைப் பற்றிய ஜெபங்களுக்கு குறிப்பிட்ட முறைகளான: வலியிலிருந்து உடனடி விடுதலை, குணப்படுத்த இயலாத அல்லது மரணத்திற்கேதுவான நோயிலிருந்து பூரண சுகம், அல்லது பதட்டத்தின் மீதான பூரண ஜெயம் ஆகிய பதில்களை அவர் அளிப்பார் என நினைப்பது சுலபமானது. ஆக நம் எதிர்பார்ப்புகளை நமது அனுபவங்கள் பூர்த்திசெய்யவில்லை என்றால் என்ன செய்வோம்? நாம் குணப்படுத்தல் எப்படி இருக்கும் என்பதன் வியக்கத்தக்க ஆழத்தை மட்டுப்படுத்தாதபடி நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:28 இல் தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்குச் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக தேவன் நடத்துவார் என்று கூறியுள்ளார். நடப்பதெல்லாம் நன்மையானவை என்பது அதன் அர்த்தமல்ல - பாவம் மற்றும் மரணத்தின் மீதான இயேசுவின் வெற்றி இந்த உலகவாழ்க்கையின் எல்லா சோதனைகளையும் நீக்கி விடவில்லை. உள்ளபடி, யோவான் 16:33 இல், இயேசு நமக்கு இந்த உலகத்தில் உபத்திரவம் உண்டு என்று உறுதியாக கூறுகிறார், மேலும் சுகவீனங்கள் என்பது நாம் சந்திக்கும் கஷ்டங்களில் ஒரு பகுதி என்பதில் சந்தேகமேயில்லை. பல தருணங்களில் அற்புதமான வழிகளில் தேவன் தலையிடுகிறார் என்றாலும், நமக்கு பூரண சுகம் பரலோகத்தின் இந்த பக்கத்தில் கிடைக்கும் என எந்த உறுதியும் தரப்படவில்லை. ஆனால் நித்தியமாக நிலைக்கும் வெற்றியை இரட்சிப்பு உத்தரவாதம் செய்கிறதென்று நாம் நிச்சயமாக நம்பலாம். மகிழ்ச்சியில் நிறைந்தும் சுகவீனம், பாவம், மரணம், வலிகள், மற்றும் பயங்களிலிருந்து முழுமையான விடுதலை அடைந்தும் நாம் நித்திய காலத்தை கர்த்தரின் சமூகத்தில் களிப்போம்.
பதிலளிக்கப்படாத ஜெபத்தைப்போலத் தோன்றும் அல்லது நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்காத காரியங்களைக் குறித்தும் மனச்சோர்வு அடைய வேண்டாம். கர்த்தர் உங்கள் ஜெபங்களை கேட்கிறார், மேலும் எல்லா விஷயங்களிலும் உங்கள் நன்மைக்காகவும் அவரின் மகிமைக்காகவும் கிரியை செய்கிறார். இந்த ஈஸ்டர் காலத்தில், கர்த்தரிடம் உங்களுக்கு நித்திய கண்ணோட்டத்தை அளிக்குமாறு கேளுங்கள். பரலோகத்தின் நிச்சயத்தை மனதில் கொண்டிருக்கும்போது, நாம் துணிச்சலுடன் ஜெபிக்கவும், எந்த சோதனைகளிலும், அதன் முடிவு எப்படியானாலும், நமக்கு ஜெயமே என்கிற தைரியத்தோடு அதைக் கடந்து செல்ல நம்மால் முடியும்.
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.
More