இங்கே துவங்குங்கள் | இயேசுவோடு முதல் படிகள்மாதிரி
நாள் 14 | கொலோசெயர் 4
வணக்கம் நண்பர்களே. இன்று கொலோசெயர் 4, மீண்டும் அடிப்படை. இயேசு எளிதான இரண்டு கட்டளைகளை நமக்கு கற்பிக்கிறார்: உங்கள் எல்லாவற்றையும் கொண்டு தேவனை நேசியுங்கள் மற்றும் உங்களைப் போல மற்றோரையும் நேசியுங்கள். இந்த எளிதான திறவுகோல்கள் நாம் இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்ற வழிநடத்தும்.
3ம் அதிகாரம் முடிந்த இடத்தில் 4ம் அதிகாரம் தொடங்குகிறது: உறவுகளுக்கான வழிகாட்டுதல். இங்கே - அடிமையும் எஜமானனும். இப்போது நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்: வேதம் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறதா? சமத்துவமின்மை, இனக் கோட்பாடுகள், ஒடுக்குதலை வேதம் ஏற்கிறதா?
நான் ஒளிவு மறைவின்றி நேரடியாக சொல்கிறேன். வேதம் அதை ஏற்கிறதில்லை. வேதாகமம் அடிமைத்தனத்தையோ ஆதரிக்கவில்லை , வேதத்தை பயன்படுத்தி ஒடுக்குதலை, மனித சமத்துவமின்மையை ஆதரிப்போர் வேதத்தை தவறாக முறைகேடாக பயன்படுத்துகின்றனர் - அது அவர்களுக்கே வெட்கம் உண்டாக அப்படி செய்கிறார்கள். ஆனால் இங்கே ஏன் வேதம் எஜமான்கள் என்றும் அடிமைகள் என்றும் விளிக்கிறது என்றால் அப்போதைய காலத்தில் அதுவே நடைமுறையில் இருந்தது, இங்கே பவுல் கற்பனை வாழ்வில் அல்ல நிஜ வாழ்வில் எப்படி வாழ்வது என்ற வழிமுறைகளை வழங்குகிறார். அடிமைகளுக்கு, அவர் சொல்கிறார்: கடினமாக உழையுங்கள் - நீங்கள் தேவனுக்கு வேலை செய்வது போல ஏனெனில் அவரே உங்கள் உண்மையான எஜமானன்.
4ம் அதிகாரத்தில்:
“எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள்.”
இங்கேயும் வேதத்தில் எவ்விடத்திலும் அடிமையும் எஜமானனும் தேவனுக்கு முன்பாக சமம் என்று நினைவுபடுத்துகிறது, சமுதாயம் அவர்களை எப்படி பிரித்தாலும் சரி. இருந்தாலும், தேவன் அளித்த அதிகாரத்தின்படி ஏன் பவுல் அடிமைத்தனத்தை ஒழிக்கவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
இது முக்கியமானது. இயேசு, தனது முதலாம் வருகையில், வகைமுறைகளை ஒழுங்குபடுத்தவோ உலகத்தை சரி செய்யவோ வரவில்லை. நமது இதயத்தை சீர்படுத்த வந்தார், தேவனோடு நம் இதயத்தை சீர்பொருத்த வந்தார். அவருடைய இரண்டாம் வருகையில், இயேசு தனது இராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிப்பார், ஆனால் முதலாவது அவருடைய இராஜ்ஜியத்தை நம்மிலேஸ்தாபிக்க வந்தார். முதலாவது: உங்கள் இதயத்தின் இராஜா. இரண்டாவது: அகில உலகத்திற்கும் இராஜா.
எனவே பவுல் இன்னமும் சீர்கேடாய் இருக்கும் இவ்வுலகில் நம்மை சரியாக வாழ சொல்கிறார். அடிமைகளும் எஜமான்களும், ஊழியர்களும் முதலாளிகளும், எது சரியோ அதைச் செய்ய வேண்டும். பின்பு கூடுமானால் அடிமைகளை விடுதலை பெறச் சொல்கிறார் பவுல், பவுல் பிலேமோனுக்கு எழுதின நிருபத்தில் பிலேமோனின் அடிமையை விடுதலை செய்து அவனை சகோதரனே என்றழைக்கச் சொல்கிறார் - அந்நாட்களில் இது மிகப் பெரிய காரியம்.
சரித்திரத்தை சற்று பின்னோக்கி பார்த்தால், அடிமைத்தனத்தை ஒழிக்க போராடிய, தியாகம் செய்த பல தலைவர்கள் அவர்களுக்கான ஊக்கத்தை வேதத்தில் இருந்தே பெற்றிருக்கின்றனர். கர்த்தர் முதலாவது அவர்களுடைய இருதயத்தை மாற்றினார், பின்பு அவர்களுடைய உலகத்தை மாற்றினார்.
மீண்டும் கொலோசெயருக்கு திரும்புவோம், வசனம் 2:
"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்."
இவ்வசனம் நமக்கு அடுத்த புது பழக்கத்தை காண்பிக்கிறது: ஜெபம். ஒவ்வொரு நாளும் வேதம் வாசியுங்கள் ஜெபியுங்கள். மீண்டும் சொல்கிறேன்,நேற்று செய்தேன் என்றல்ல, எப்பொழுதும் செய்யுங்கள். ஜெபம் மிகவும் அற்புதமானது. நம்மால் கர்த்தரோடு பேச இயலும் - அகிலத்தையும் படைத்த ஆண்டவரோடு - நேரடியாக. "இடைவிடாமல்" என்று பவுல் சொல்கிறார். ஜெபத்தை முதன்மைபடுத்துங்கள்.
எதைக் குறித்து நாம் ஜெபிக்க வேண்டும்? எல்லாவற்றையும் குறித்து. தேவைகளைக் குறித்து, கேட்டு பெற்றவைகளுக்காக நன்றி, நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதைக் குறித்து அல்லது எதை நினைத்து குழப்பத்தோடு இருக்கிறீர்களோ அதைக்குறித்து அல்லது எதை குறித்த நம்பிக்கையோடு இருக்கிறீர்களோ அதைக் குறித்து. மக்களுக்காக ஜெபியுங்கள். எனக்காக ஜெபியுங்கள்! எனக்கு அது தேவை. ஜெபியுங்கள் - எல்லாவற்றைக் - குறித்தும்.
சற்று சிந்தியுங்கள். ஆரோக்கியமான உரையாடல் அல்லது நல்ல தகவல் பரிமாற்றம் என்பது எல்லா உறவுக்கும் முக்கியமான தேவை. பேசும்போது தான் நாம் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து கொள்ள முடியும். சேர்ந்து பயணிப்பதின் சிறப்பு என்னவெனில் உரையாடலுக்கான நேரம் கிடைப்பதுதான், மனம்விட்டுப் பேசினால், உறவு பலப்படும். தேவனோடுள்ள உறவுக்கும் இது பொருந்தும். நாம் இயேசுவை பின்பற்றும்போது, அந்த பயணத்தில் அவரோடு பேசுகிறோம். நம் ஆழ்மனதில் உள்ளதை, நம்பிக்கைகளை பயங்களை தேவனோடு பகிர்கிறோம். நம் மனக்கதவை திறந்து இயேசுவை உள்ளே அனுமதிக்கிறோம்.
ஜெபத்தை ஒரு நல்ல நண்பனோடு பேசுவதாக நினையுங்கள். நமக்கு என்ன தேவை என்பதைக் குறித்தே பேசுவோமாகில், அந்த உறவு ஆரோக்கியமானதல்ல. ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தக்கதாக பேசுவோமாகில், அது ஆரோக்கியமான உறவு. மதிப்பிடப்படும் வீட்டுப்பாடமோ கட்டுரையல்ல ஜெபம், எனவே "சரியான" முறையில் ஜெபிப்பதைக் குறித்து கலங்க வேண்டாம். மனமார தேவனிடம் பேசுங்கள் அவ்வளவே. தாழ்மையோடும் பயபக்தியோடும் தேவனுடைய சிங்காசனத்தின் அருகில் வாருங்கள் - அவர் கர்த்தர்; ஆனால் நம்பிக்கையோடு வாருங்கள் - இயேசு உங்களை கர்த்தரோடு சீர்பொருத்தி இருக்கிறார். மேலும் ரோமர் 12 சொல்கிறது "ஜெபத்திலே தரித்திருங்கள்" - எப்போதுமே துண்டிக்கப்படாத அலைபேசி இணைப்பைப்போல.
கொலோசெயரின் மீதப் பகுதிகள் வாழ்த்துச் செய்தி உள்ளடக்கியுள்ளது. நினைவில் கொள்ளுங்கள், இது உண்மையான மக்களிடையே எழுதப்பட்ட உண்மையான கடிதம். மாத்திரமல்ல அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தனர்! எனவே வாழ்த்துச் செய்தி அனுப்பினர். வேதத்தில் இது எனக்கு மிகவும் பிடிக்கும். இது நேரடியானது. தேவன் தான் சொல்ல விரும்புவதை கல்லில் பொறித்திருக்கலாம், ஆனால் இதை தேவன் நேசிக்கத் தெரிந்த மனிதர் உள்ளத்தில் எழுத சித்தமானார். அந்த நேசம் இக்கடிதங்களின் பக்கங்களிலே ஜொலிக்கிறது.
இது நமக்கு இன்னுமொரு பழக்கத்தை அறிமுகப்படுத்துகிறது: ஐக்கியம். மற்ற கிறிஸ்தவர்களோடு நேரம் செலவிடுங்கள். ஒருங்கிணைந்து வாழ்ந்து பாருங்கள். தேவனை நேசியுங்கள் மேலும் மற்றோரையும் நேசியுங்கள். சபை கூடுதலை விட்டுவிடாதபடி எபிரேயர் நம்மை எச்சரிக்கிறது - கிறிஸ்தவ குடும்பக்கூடுகை.
வேதத்தில் சொல்லப்பட்ட சபை என்பது கட்டிடமல்ல, அது இயேசுவை பின்பற்றும் மக்களை குறிக்கிறது. சபை ஒரு கட்டிடத்தில் கூடலாம், ஆனால் நாம் ஒருவரோடு ஒருவர் மனதளவில் உண்மையாக இணையவில்லை என்றால், நாம் முக்கிய குறிப்பை தவறவிட்டுவிட்டோம். நீங்கள் 4ம் அதிகாரத்தை வாசிக்கும்போது, குறிப்பிட்டுள்ள பெயர்களை உற்று நோக்குங்கள் - இக்கடிதம் இவர்களுக்கு எழுதப்பட்டது - மாற்கு, யுஸ்து, எப்பாப்பிரா, லூக்கா, நிம்பா, மற்றும் கவனியுங்கள்,
“...அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.” (4:15).
அக்காலத்திலே, சபை வீடுகளிலே கூடிற்று - குடும்பங்கள் கூடுவதைப் போல.
எனவே இது தான் அடிப்படை: தேவனை நேசியுங்கள் மாத்திரமல்ல பிறரை நேசியுங்கள். இதனைச் செய்வதற்கு, ஜெபிக்கிற பழக்கத்தை தொடங்குங்கள்: தேவனை அறிந்து கொள்ளுங்கள். ஐக்கியம் என்னும் பழக்கத்தை தொடங்குங்கள்: பிறரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்களோடு வேலை செய்பவரையோ படிப்பவரையோ உங்களோடு இணைந்து இத்திட்டத்தை வாசிக்க அழையுங்கள், விவாதம் மற்றும் கேள்விகளோடு கலந்துரையாடுங்கள், இணைந்து ஜெபியுங்கள்.நாம் மூண்று பழக்கங்களைப் பற்றி பார்த்தோம். வேதம் வாசிக்கும் பழக்கம், ஜெபிக்கும் பழக்கம், மேலும் ஐக்கியம் என்னும் பழக்கம். இது மிகவும் எளிது.
இதனை தொடங்குவதற்கு உதவி தேவைப்பட்டால், நாளை அதனை பார்ப்போம். இன்று, கொலோசெயர் 4ம் அதிகாரத்தை வாசியுங்கள், மேலும் எளிதாக மனதில் இருத்துங்கள்: தேவனை நேசியுங்கள் மற்றோரையும் நேசியுங்கள்.
பிரதிபலிப்பு & விவாதத்திற்கு
- ஏன் இயேசுவை பின்பற்றுவதற்கு ஜெபம் இன்றியமையாததாக இருக்கிறது? ஜெபம் இயேசுவோடான பயணத்தில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
- ஏன் இயேசுவை பின்பற்றுவதற்கு ஐக்கியம் இன்றியமையாததாக இருக்கிறது? மற்ற கிறிஸ்தவர்களோடான ஐக்கியம் இயேசுவோடான பயணத்தில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருவேளை நீங்கள் இயேசுவையோ அல்லது வேதத்தையோ புதிதாக அறிந்திருந்தால், அல்லது புதிதாக அறிந்திருக்கும் நண்பருக்கு உதவ நேர்ந்தால் - இங்கே துவங்கவும். அடுத்த 15 நாட்களுக்கு, இந்த 5 நிமிட ஒலி வழிகாட்டிகள் உங்களை: மாற்கு மற்றும் கொலோசெயர் எனும் இரண்டு அடிப்படையான வேத புத்தகங்களுக்கு நேராக நடத்தி செல்லும். இயேசுவின் கதையை பின்தொடர்ந்து, தனி நபர் வெளிப்பாடுகள் மற்றும் குழு கலந்துரையாடல்கள்யோடு சேர்ந்து அவரை பின்தொடரும் அடிப்படையான காரியங்களை கண்டறியுங்கள். இந்த துவக்கத்திற்கு இதை பின்தொடருங்கள், பின் உங்கள் நண்பரை வரவேற்று மீண்டும் பின்தொடருங்கள்!
More