சகரியா 9:2-9

சகரியா 9:2-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தமஸ்குவின் எல்லையாக உள்ள ஆமாத்தின்மேலும், தீரு, சீதோன் பட்டணங்கள் திறமைமிக்கதாய் இருந்தபோதும், அவற்றின்மேலும் அவரது தண்டனை வரும். தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள். அவள் வெள்ளியைத் தூசியைப்போலவும், தங்கத்தை வீதியின் அழுக்கைப்போலவும் குவித்து வைத்திருக்கிறாள். ஆனால் யெகோவா அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப் போடுவார். கடலில் அவளுக்குள்ள வலிமையை அழித்துப்போடுவார். அவள் நெருப்புக்கு இரையாக்கப்படுவாள். அஸ்கலோன் பட்டணம் அதைக்கண்டு அஞ்சும்; காசா பட்டணமும் வேதனையால் துடிக்கும். எக்ரோன் பட்டணத்தின் எதிர்பார்ப்பும் அற்றுப்போகும். காசா தன் அரசனை இழப்பாள். அஸ்கலோன் பாழாய்ப்போகும். வெளிநாட்டவர் அஸ்தோத்தில் குடியிருப்பார்கள். நான் பெலிஸ்தியரின் அகந்தையை இல்லாமல் ஒழிப்பேன். இரத்தம் வடியும் உணவை அவர்கள் வாயிலிருந்தும் அருவருப்பான உணவை அவர்களின் பற்களின் இடையிலிருந்தும் நீக்குவேன்; மீதியான பெலிஸ்தியரோ நம் இறைவனுக்கு உரியவராவார்கள். அவர்கள் யூதாவின் தலைவர்களாவார்கள். எக்ரோன் எபூசியரைப்போல் ஆகும். எனவே பெலிஸ்திய நாடு இஸ்ரயேலில் ஒரு பங்காகும். ஆனால் நான் கொள்ளையர்களை எதிர்த்து, என் ஆலயத்தைப் பாதுகாப்பேன்; நான் என் மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதால், ஒடுக்குவோர் யாரும் திரும்பவும் ஒருபோதும் என் மக்களை மேற்கொள்ளமாட்டார்கள். சீயோன் மகளே, நீ மிகவும் களிகூரு. எருசலேம் மகளே, நீ ஆர்ப்பரி. இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவராய் இரட்சிப்புடன் வருகிறார், தாழ்மையுள்ள அவர், கழுதையின்மேலும், கழுதைக் குட்டியான மறியின்மேலும் ஏறி வருகிறார்.

சகரியா 9:2-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும், சீதோனும் அதின் எல்லைக்குள்ளாக இருக்கும். தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது. இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும். அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காசாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் புலம்பும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்று இருக்கும். அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் தங்கியிருப்பார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன். அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பற்களின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான். சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படுவதற்காக அதைச் சுற்றிலும் முகாமிடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.

சகரியா 9:2-9 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆமாத், ஆதிராக் நாட்டின் எல்லை. தீரு, சீதோன் நகரத்தார் திறமையும், மதிநுட்பமும் உடையவர்களாக இருந்தபோதிலும், இச்செய்தி அவர்களுக்கு எதிரானது. தீரு ஒரு கோட்டையைப் போன்று கட்டப்பட்டது. அங்குள்ள ஜனங்கள் வெள்ளியை வசூல் செய்தார்கள். அது புழுதியைப் போல் மிகுதியாக இருந்தது. பொன்னானது களி மண்ணைப்போன்று சாதாரணமாக இருந்தது. ஆனால் நமது அதிகாரியாகிய கர்த்தர் அவற்றை எடுத்துக்கொள்வார். அவர் ஆற்றல் மிக்க கப்பல் படையை அழிப்பார். நகரமானது நெருப்பால் அழிக்கப்படும். “அஸ்கலோனில் உள்ள ஜனங்கள் அவற்றைப் பார்ப்பார்கள். அவர்கள் அஞ்சுவார்கள். காத்சா ஜனங்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். எக்ரோன் ஜனங்கள் நிகழ்வதைப் பார்த்து நம்பிக்கையை இழப்பார்கள். காத்சாவில் எந்த ராஜாவும் விடுபடமாட்டான். அஸ்கலோனில் எவரும் வாழமாட்டார்கள். அஸ்தோத்தில் உள்ள ஜனங்கள் தங்களது உண்மையான தந்தை யாரென்று அறியமாட்டார்கள். நான் தற்பெருமைமிக்க பெலிஸ்திய ஜனங்களை முழுவதுமாக அழிப்பேன். அவர்கள் இரத்தமுள்ள இறைச்சியை உண்ணமாட்டார்கள். வேறு உண்ணக்கூடாத உணவையும் உண்ணமாட்டார்கள். மீதியுள்ள பெலிஸ்திய ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள். அவர்கள் யூதாவின் மற்றுமொறு கோத்திரமாக இருப்பார்கள். எக்ரோன் ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக எபூசியர்களைப்போல இருப்பார்கள். நான் எனது நாட்டைக் காப்பாற்றுவேன். நான் பகைவர்கள் படைகளை என் நாட்டின் வழியாகப் போக அனுமதிக்கமாட்டேன். நான் அவர்கள் என் ஜனங்களைத் துன்புறுத்தும்படி விடமாட்டேன். என் சொந்தக் கண்களால் எனது ஜனங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு துன்புற்றார்கள் எனப் பார்த்தேன்.” சீயோன் நகரமே, மகிழ்ச்சியாயிரு. எருசலேம் ஜனங்களே, மகிழ்ச்சியோடு கூவுங்கள். பார், உனது ராஜா உன்னிடம் வருகிறார். அவர் நல்லவர், வெற்றிபெற்ற ராஜா. ஆனால் அவர் பணிவுள்ளவர். அவர் கழுதை மேல் வந்துக்கொண்டிருக்கிறார். இது வேலை செய்யக்கூடிய கழுதைக்கு பிறந்த இளங்கழுதை.

சகரியா 9:2-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும். தீரு தனக்கு அரணைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது, இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும். அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்றிருக்கும். அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன். அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான். சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச் சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.