சகரியா 9:2-9

சகரியா 9:2-9 TCV

தமஸ்குவின் எல்லையாக உள்ள ஆமாத்தின்மேலும், தீரு, சீதோன் பட்டணங்கள் திறமைமிக்கதாய் இருந்தபோதும், அவற்றின்மேலும் அவரது தண்டனை வரும். தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள். அவள் வெள்ளியைத் தூசியைப்போலவும், தங்கத்தை வீதியின் அழுக்கைப்போலவும் குவித்து வைத்திருக்கிறாள். ஆனால் யெகோவா அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப் போடுவார். கடலில் அவளுக்குள்ள வலிமையை அழித்துப்போடுவார். அவள் நெருப்புக்கு இரையாக்கப்படுவாள். அஸ்கலோன் பட்டணம் அதைக்கண்டு அஞ்சும்; காசா பட்டணமும் வேதனையால் துடிக்கும். எக்ரோன் பட்டணத்தின் எதிர்பார்ப்பும் அற்றுப்போகும். காசா தன் அரசனை இழப்பாள். அஸ்கலோன் பாழாய்ப்போகும். வெளிநாட்டவர் அஸ்தோத்தில் குடியிருப்பார்கள். நான் பெலிஸ்தியரின் அகந்தையை இல்லாமல் ஒழிப்பேன். இரத்தம் வடியும் உணவை அவர்கள் வாயிலிருந்தும் அருவருப்பான உணவை அவர்களின் பற்களின் இடையிலிருந்தும் நீக்குவேன்; மீதியான பெலிஸ்தியரோ நம் இறைவனுக்கு உரியவராவார்கள். அவர்கள் யூதாவின் தலைவர்களாவார்கள். எக்ரோன் எபூசியரைப்போல் ஆகும். எனவே பெலிஸ்திய நாடு இஸ்ரயேலில் ஒரு பங்காகும். ஆனால் நான் கொள்ளையர்களை எதிர்த்து, என் ஆலயத்தைப் பாதுகாப்பேன்; நான் என் மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதால், ஒடுக்குவோர் யாரும் திரும்பவும் ஒருபோதும் என் மக்களை மேற்கொள்ளமாட்டார்கள். சீயோன் மகளே, நீ மிகவும் களிகூரு. எருசலேம் மகளே, நீ ஆர்ப்பரி. இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவராய் இரட்சிப்புடன் வருகிறார், தாழ்மையுள்ள அவர், கழுதையின்மேலும், கழுதைக் குட்டியான மறியின்மேலும் ஏறி வருகிறார்.