சகரியா 9
9
9 அதிகாரம்
1ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்.
2ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும்.
3தீரு தனக்கு அரணைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது,
4இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.
5அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்றிருக்கும்.
6அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.
7அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.
8சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச் சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
9சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
10எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.
11உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.
12நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
13நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.
14அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
15சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.
16அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.
17அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சகரியா 9: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.