சகரியா 9:2-9

சகரியா 9:2-9 TAERV

ஆமாத், ஆதிராக் நாட்டின் எல்லை. தீரு, சீதோன் நகரத்தார் திறமையும், மதிநுட்பமும் உடையவர்களாக இருந்தபோதிலும், இச்செய்தி அவர்களுக்கு எதிரானது. தீரு ஒரு கோட்டையைப் போன்று கட்டப்பட்டது. அங்குள்ள ஜனங்கள் வெள்ளியை வசூல் செய்தார்கள். அது புழுதியைப் போல் மிகுதியாக இருந்தது. பொன்னானது களி மண்ணைப்போன்று சாதாரணமாக இருந்தது. ஆனால் நமது அதிகாரியாகிய கர்த்தர் அவற்றை எடுத்துக்கொள்வார். அவர் ஆற்றல் மிக்க கப்பல் படையை அழிப்பார். நகரமானது நெருப்பால் அழிக்கப்படும். “அஸ்கலோனில் உள்ள ஜனங்கள் அவற்றைப் பார்ப்பார்கள். அவர்கள் அஞ்சுவார்கள். காத்சா ஜனங்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். எக்ரோன் ஜனங்கள் நிகழ்வதைப் பார்த்து நம்பிக்கையை இழப்பார்கள். காத்சாவில் எந்த ராஜாவும் விடுபடமாட்டான். அஸ்கலோனில் எவரும் வாழமாட்டார்கள். அஸ்தோத்தில் உள்ள ஜனங்கள் தங்களது உண்மையான தந்தை யாரென்று அறியமாட்டார்கள். நான் தற்பெருமைமிக்க பெலிஸ்திய ஜனங்களை முழுவதுமாக அழிப்பேன். அவர்கள் இரத்தமுள்ள இறைச்சியை உண்ணமாட்டார்கள். வேறு உண்ணக்கூடாத உணவையும் உண்ணமாட்டார்கள். மீதியுள்ள பெலிஸ்திய ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக இருப்பார்கள். அவர்கள் யூதாவின் மற்றுமொறு கோத்திரமாக இருப்பார்கள். எக்ரோன் ஜனங்கள் என் ஜனங்களின் ஒரு பகுதியாக எபூசியர்களைப்போல இருப்பார்கள். நான் எனது நாட்டைக் காப்பாற்றுவேன். நான் பகைவர்கள் படைகளை என் நாட்டின் வழியாகப் போக அனுமதிக்கமாட்டேன். நான் அவர்கள் என் ஜனங்களைத் துன்புறுத்தும்படி விடமாட்டேன். என் சொந்தக் கண்களால் எனது ஜனங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு துன்புற்றார்கள் எனப் பார்த்தேன்.” சீயோன் நகரமே, மகிழ்ச்சியாயிரு. எருசலேம் ஜனங்களே, மகிழ்ச்சியோடு கூவுங்கள். பார், உனது ராஜா உன்னிடம் வருகிறார். அவர் நல்லவர், வெற்றிபெற்ற ராஜா. ஆனால் அவர் பணிவுள்ளவர். அவர் கழுதை மேல் வந்துக்கொண்டிருக்கிறார். இது வேலை செய்யக்கூடிய கழுதைக்கு பிறந்த இளங்கழுதை.