எண்ணாகமம் 5:1-10

எண்ணாகமம் 5:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் மோசேயை நோக்கி: குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு. ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்பண்ணுகிற தங்கள் பாளயங்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிடக்கடவீர்கள் என்றார். கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரர் செய்து, அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிட்டார்கள். மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின் முதலோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய்க் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தக்கடவன். அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும். இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப் படைக்கும்படி, ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாயிருக்கும். ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 5:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ இஸ்ரயேலரிடம், முகாமில் தொற்றும் தோல்வியாதி உள்ளவர்களோ, உடலில் கசிவு உள்ளவர்களோ அல்லது பிணத்தைத் தொட்டதினால் சம்பிரதாய முறைப்படி அசுத்தமுள்ளவர்களோ இருந்தால், அவர்களை முகாமுக்கு வெளியே அனுப்பிவிடும்படி கட்டளையிடு. அவர்கள் ஆண்களோ பெண்களோ யாராயிருந்தாலும், அவர்கள் மத்தியில் நான் வாழும் முகாமை அவர்கள் அசுத்தப்படுத்தாதபடி, அவர்களை வெளியே அனுப்பிவிடும்படி கட்டளையிடு” என்றார். இஸ்ரயேலர் அவ்வாறே அவர்களை முகாமைவிட்டு வெளியே அனுப்பினார்கள். யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா மோசேயிடம் பேசி, “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஒரு ஆணோ, பெண்ணோ வேறொருவனுக்கு எந்த வழியிலாவது குற்றம் செய்து யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருந்தால், அந்த நபர் குற்றவாளி. ஆகையால் அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும். பின்னர், தாங்கள் செய்த குற்றத்திற்காக முழு நஷ்டஈட்டையும், அத்துடன் அதின் ஐந்திலொரு பங்கையும் சேர்த்துத் தன்னால் தீங்கிழைக்கப்பட்ட நபருக்குக் கொடுக்கவேண்டும். ஆனால் தீங்கிழைக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்கக்கூடிய நெருங்கிய உறவினர்கள் இல்லாமலிருந்தால், செய்த குற்றத்திற்கான அந்த நஷ்டஈடு யெகோவாவுக்கே உரியது. அதை அவன் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். அத்துடன் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்கான செம்மறியாட்டுக் கடாவையும் கொடுக்கவேண்டும். இஸ்ரயேலர் ஆசாரியனிடம் கொண்டுவரும் பரிசுத்த அன்பளிப்புகள் எல்லாம் அவனுக்கே உரியன. ஒவ்வொருவனுடைய பரிசுத்த கொடைகளும் அவனுக்கே சொந்தம், ஆனால் அவன் ஆசாரியனிடம் கொடுப்பது ஆசாரியனுக்கு உரியதாகும்’ ” என்றார்.

எண்ணாகமம் 5:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா மோசேயை நோக்கி: “குஷ்டரோகிகள் யாவரையும், கசியும் புண்ணுள்ள யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் முகாமிலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிடு. ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்செய்கிற தங்களுடைய முகாம்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடி, நீங்கள் அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிடவேண்டும் என்றார். யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்கள் செய்து, அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள். மேலும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஆணோ பெண்ணோ, யெகோவாவுடைய கட்டளையை மீறி மனிதர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடவேண்டும்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினால் அபராதத்தின் முதலோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தவேண்டும். அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், யெகோவாவுக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும். இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப் படைக்கும்படி, ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாக இருக்கும். ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 5:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயிடம், “நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிடுவதாவது: அவர்கள் தங்கள் முகாம்களை நோய்கள் பரவாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தொழுநோய் இருந்தால், அவனை முகாமை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாருக்காவது (இரத்தப் போக்கான) விலக்கு தீட்டு இருந்தால் அவர்களையும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாராவது பிணத்தைத் தொட்டு அதனால் தீட்டாகியிருந்தால் அவனையும் வெளியே அனுப்பி விடவேண்டும். ஆணா, பெண்ணா என்பது பற்றிக் கவலைப்படாமல் அந்த நபரை வெளியேற்ற வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு அந்த நோயும், தீட்டும் ஏற்படாமல் இருக்கும். நானும் உங்கள் முகாமில் உங்களோடு வாழ்வேன்” என்றார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் இத்தகையவர்களை முகாமைவிட்டு வெளியேற்றினர். கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தனர். கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்திருந்தால் (ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்வது என்பது உண்மையில் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும்) அவன் தண்டனைக்கு உரியவன். எனவே அவன் தான் செய்த பாவத்தைப் பற்றி ஜனங்களிடம் சொல்ல வேண்டும். பின் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும். அதில் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக்கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும். “இஸ்ரவேலனாக இருக்கும் ஒருவன் தேவனுக்கு இதுபோல் சிறப்பான அன்பளிப்புகளைச் செலுத்தினால் ஆசாரியன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு உரியது. ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.