எண் 5:1-10

எண் 5:1-10 IRVTAM

யெகோவா மோசேயை நோக்கி: “குஷ்டரோகிகள் யாவரையும், கசியும் புண்ணுள்ள யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் முகாமிலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிடு. ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்செய்கிற தங்களுடைய முகாம்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடி, நீங்கள் அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிடவேண்டும் என்றார். யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்கள் செய்து, அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள். மேலும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஆணோ பெண்ணோ, யெகோவாவுடைய கட்டளையை மீறி மனிதர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடவேண்டும்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினால் அபராதத்தின் முதலோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தவேண்டும். அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், யெகோவாவுக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும். இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப் படைக்கும்படி, ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாக இருக்கும். ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.