எண்ணாகமம் 5:1-10

எண்ணாகமம் 5:1-10 TAERV

கர்த்தர் மோசேயிடம், “நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிடுவதாவது: அவர்கள் தங்கள் முகாம்களை நோய்கள் பரவாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தொழுநோய் இருந்தால், அவனை முகாமை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாருக்காவது (இரத்தப் போக்கான) விலக்கு தீட்டு இருந்தால் அவர்களையும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாராவது பிணத்தைத் தொட்டு அதனால் தீட்டாகியிருந்தால் அவனையும் வெளியே அனுப்பி விடவேண்டும். ஆணா, பெண்ணா என்பது பற்றிக் கவலைப்படாமல் அந்த நபரை வெளியேற்ற வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு அந்த நோயும், தீட்டும் ஏற்படாமல் இருக்கும். நானும் உங்கள் முகாமில் உங்களோடு வாழ்வேன்” என்றார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் இத்தகையவர்களை முகாமைவிட்டு வெளியேற்றினர். கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தனர். கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்திருந்தால் (ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்வது என்பது உண்மையில் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும்) அவன் தண்டனைக்கு உரியவன். எனவே அவன் தான் செய்த பாவத்தைப் பற்றி ஜனங்களிடம் சொல்ல வேண்டும். பின் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும். அதில் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக்கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும். “இஸ்ரவேலனாக இருக்கும் ஒருவன் தேவனுக்கு இதுபோல் சிறப்பான அன்பளிப்புகளைச் செலுத்தினால் ஆசாரியன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு உரியது. ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.