எண்ணாகமம் 5:1-10

எண்ணாகமம் 5:1-10 TCV

மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ இஸ்ரயேலரிடம், முகாமில் தொற்றும் தோல்வியாதி உள்ளவர்களோ, உடலில் கசிவு உள்ளவர்களோ அல்லது பிணத்தைத் தொட்டதினால் சம்பிரதாய முறைப்படி அசுத்தமுள்ளவர்களோ இருந்தால், அவர்களை முகாமுக்கு வெளியே அனுப்பிவிடும்படி கட்டளையிடு. அவர்கள் ஆண்களோ பெண்களோ யாராயிருந்தாலும், அவர்கள் மத்தியில் நான் வாழும் முகாமை அவர்கள் அசுத்தப்படுத்தாதபடி, அவர்களை வெளியே அனுப்பிவிடும்படி கட்டளையிடு” என்றார். இஸ்ரயேலர் அவ்வாறே அவர்களை முகாமைவிட்டு வெளியே அனுப்பினார்கள். யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா மோசேயிடம் பேசி, “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஒரு ஆணோ, பெண்ணோ வேறொருவனுக்கு எந்த வழியிலாவது குற்றம் செய்து யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருந்தால், அந்த நபர் குற்றவாளி. ஆகையால் அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும். பின்னர், தாங்கள் செய்த குற்றத்திற்காக முழு நஷ்டஈட்டையும், அத்துடன் அதின் ஐந்திலொரு பங்கையும் சேர்த்துத் தன்னால் தீங்கிழைக்கப்பட்ட நபருக்குக் கொடுக்கவேண்டும். ஆனால் தீங்கிழைக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்கக்கூடிய நெருங்கிய உறவினர்கள் இல்லாமலிருந்தால், செய்த குற்றத்திற்கான அந்த நஷ்டஈடு யெகோவாவுக்கே உரியது. அதை அவன் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். அத்துடன் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்கான செம்மறியாட்டுக் கடாவையும் கொடுக்கவேண்டும். இஸ்ரயேலர் ஆசாரியனிடம் கொண்டுவரும் பரிசுத்த அன்பளிப்புகள் எல்லாம் அவனுக்கே உரியன. ஒவ்வொருவனுடைய பரிசுத்த கொடைகளும் அவனுக்கே சொந்தம், ஆனால் அவன் ஆசாரியனிடம் கொடுப்பது ஆசாரியனுக்கு உரியதாகும்’ ” என்றார்.