மாற்கு 15:16-41

மாற்கு 15:16-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

போர்வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டுசென்று, மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள். அவர்கள் இயேசுவுக்கு கருஞ்சிவப்பு உடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள். அவர்கள் ஒரு தடியினால் திரும்பத்திரும்ப அவரைத் தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு, அவரை வணங்கினார்கள். இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். போகும் வழியில், சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதன் நாட்டுப் புறத்திலிருந்து வந்து, அவனும் அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்தான். இந்த சீமோன் அலெக்சாந்தருக்கும், ரூபுவுக்கும் தகப்பன். அவனைச் சிலுவையைத் தூக்கிச்செல்லும்படி படைவீரர் வற்புறுத்தினார்கள். பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார். பின்பு அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். உடையில் எதை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காகச் சீட்டுப்போட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது, காலை ஒன்பது மணியாய் இருந்தது. அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன். அவர்கள் இயேசுவுடன் இரண்டு கள்வர்களை, ஒருவனை வலதுபக்கத்திலும், மற்றவனை இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவசனம் இதன் மூலமாய் நிறைவேறிற்று. அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே, நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள். அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், ஒருவரோடொருவர் அவரைக்குறித்து ஏளனமாய் பேசினார்கள். அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இஸ்ரயேலின் அரசனான இந்த கிறிஸ்து, இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது அதைக்கண்டு, நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்டவர்களுங்கூட அவரை ஏளனம் செய்தார்கள். மத்தியான வேளையில், பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. மாலை மூன்றுமணியானபோது, இயேசு உரத்த குரலில், “ஏலோயீ, ஏலோயீ, லாமா சபக்தானி?” என்று அதிக சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும். அருகே நின்றவர்களில் சிலர், இதைக் கேட்டபோது, “கேளுங்கள், இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள். அப்பொழுது ஒருவன் ஓடிப்போய், கடற்காளானை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு தடியில் கட்டி, அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன், “இப்பொழுது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகிறானோ என்று பார்ப்போம்” என்றான். அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார். அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்றுகொண்டிருந்த நூற்றுக்குத் தலைவன் அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டான். அப்பொழுது அவன், “நிச்சயமாகவே இந்த மனிதன் இறைவனுடைய மகனே தான்” என்றான். சில பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேகம் பெண்களுங்கூட அங்கிருந்தார்கள்.

மாற்கு 15:16-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள். அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள். அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள். இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை. நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள். நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது. மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான். இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான். சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

மாற்கு 15:16-41 பரிசுத்த பைபிள் (TAERV)

பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர். சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார். வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி. அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர். அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே. ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர். வேதபாரகர்களும் தலைமை ஆசாரியர்களும் அங்கே அவர்களோடு இருந்தனர். அவர்களும் இயேசுவை மற்ற மக்கள் செய்த விதத்திலேயே கேலி செய்தனர். “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான். ஆனால் தன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே” என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசுவைப்பற்றி அவதூறாகப் பேசினர். மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ ஏலி! ஏலி! லாமா சபக்தானி ” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று பொருள். அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர். ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான். இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார். இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது. இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார். சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய குமாரன்.) இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

மாற்கு 15:16-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள். அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை. நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள். ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான். இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்