மாற் 15:16-41

மாற் 15:16-41 IRVTAM

அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள். அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள். அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள். இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள். அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை. நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள். நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது. மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான். இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான். சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

மாற் 15:16-41 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்