மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:16-41

மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:16-41 TAERV

பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர். சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர். “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்) அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார். வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி. அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர். அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே. ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர். வேதபாரகர்களும் தலைமை ஆசாரியர்களும் அங்கே அவர்களோடு இருந்தனர். அவர்களும் இயேசுவை மற்ற மக்கள் செய்த விதத்திலேயே கேலி செய்தனர். “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான். ஆனால் தன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே” என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசுவைப்பற்றி அவதூறாகப் பேசினர். மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ ஏலி! ஏலி! லாமா சபக்தானி ” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று பொருள். அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர். ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான். இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார். இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது. இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார். சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய குமாரன்.) இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

மாற்கு எழுதிய சுவிசேஷம் 15:16-41 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்