மத்தேயு 12:22-37

மத்தேயு 12:22-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது சிலர், பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், ஊமையுமாய் இருந்தான். இயேசு அவனை குணமாக்கினார்; அவனால் பேசவும் பார்க்கவும் முடிந்தது. மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர் தாவீதின் மகனாய் இருப்பாரோ?” என்றார்கள். ஆனால் பரிசேயர் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே பிசாசுகளை விரட்டுகிறான்” என்றார்கள். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம், “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுகிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது. சாத்தானை சாத்தான் விரட்டினால், அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான். அப்படியானால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? எனவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள். ஆனால் நானோ, பிசாசுகளை இறைவனின் ஆவியானவரால் விரட்டுகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது. “மேலும் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், எப்படி ஒருவனால் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டுபோக முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும். “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒவ்வொரு பாவமும், நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பது மன்னிக்கப்படாது. மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. “ஒரு நல்ல மரத்தை நடுங்கள், அப்பொழுது அதன் கனிகளும் நல்லதாய் இருக்கும். ஒரு கெட்ட மரத்தை நீங்கள் நட்டால், அதன் கனிகளும் கெட்டதாய் இருக்கும். ஏனெனில் ஒரு மரம், அதன் கனிகளினாலேயே இனங்காணப்படுகிறது. விரியன் பாம்புக் குட்டிகளே! தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள்? ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். நல்ல மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் நன்மையிலிருந்து நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான். தீய மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் தீமையிலிருந்து தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதர் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாய்த் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.”

மத்தேயு 12:22-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார். மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள். இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள். நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான். ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

மத்தேயு 12:22-37 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர், சிலர் இயேசுவிடம் ஒரு மனிதனை அழைத்து வந்தனர். குருடனான அவனால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு பிசாசு இருந்தது. இயேசு அவனைக் குணப்படுத்தினார். அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. வியப்புற்ற மக்கள், “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்!” என்றனர். மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள், “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன். இயேசு பரிசேயர்களின் எண்ணங்களை அறிந்தார். எனவே இயேசு, “தனக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவுகளைக்கொண்ட எந்த இராஜ்யமும் அழிந்துவிடும். பிரிவுகொள்ளுகின்ற எந்த நகரமும் நிலைக்காது. பிரிகின்ற எந்தக் குடும்பமும் முன்னேற்றம் அடையாது. எனவே சாத்தான் தன்னுடைய பிசாசுகளையே துரத்தினால், சாத்தான் பிரிந்திருக்கிறான். எனவே சாத்தானின் இராஜ்யம் நிலைத்திருக்காது. நான் பிசாசுகளை விரட்டும்பொழுது சாத்தானின் வல்லமையை நான் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மையெனில், உங்கள் மனிதர்கள் பிசாசுகளை விரட்ட எந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்கள் மக்களே நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கிறார்கள். ஆனால், பிசாசுகளை விரட்ட நான் தேவ ஆவியின் வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. ஒருவன் வலிமையான மனிதனின் வீட்டுக்குள் புகுந்து திருட நினைத்தால், முதலில் அவ்வலிமையான மனிதனைக் கட்டிப்போட வேண்டும். பின்னரே, அவன் அவ்வலிமையான மனிதனின் வீட்டிலிருந்து பொருட்களைத் திருட முடியும். என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன். “அதனால் நான் சொல்லுகிறேன், மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்படமாட்டான். “நல்ல பழங்கள் தேவையெனில், நல்ல மரத்தை வளர்க்க வேண்டும். மரம் தீயதானால், பழங்களும் தீயனவாகும். ஒரு மரத்தின் தரம் அதன் பழங்களைக்கொண்டே அறியப்படும். பாம்புகள் நீங்கள்! பொல்லாதவர்கள் நீங்கள்! நீங்கள் எப்படி நல்லவற்றைக் கூற முடியும். உள்ளத்திலுள்ளதையே வாய் பேசுகிறது. ஒரு நல்லவன் தன் உள்ளத்தில் நல்லவைகளை வைத்திருக்கிறான். எனவே அவன் நல்லவைகளை உள்ளத்திலிருந்து பேசுகிறான். ஆனால் பொல்லாத மனிதன் தன் உள்ளத்தில் பொல்லாதவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறான். எனவே அவன் பொல்லாதவைகளைத் தன் உள்ளத்திலிருந்து பேசுகிறான். மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளில் நடக்கும். உங்களது வார்த்தைகளே உங்களுக்கு நியாயம் வழங்க பயன்படுத்தப்படும். உங்களது வார்த்தைகளே உங்களை நல்லவரென்றும் உங்கள் வார்த்தைகளே உங்களைத் தீயோர் என்றும் நியாயம் தீர்க்கும்” என்று சொன்னார்.

மத்தேயு 12:22-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார். ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.