அப்பொழுது சிலர், பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், ஊமையுமாய் இருந்தான். இயேசு அவனை குணமாக்கினார்; அவனால் பேசவும் பார்க்கவும் முடிந்தது. மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர் தாவீதின் மகனாய் இருப்பாரோ?” என்றார்கள். ஆனால் பரிசேயர் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே பிசாசுகளை விரட்டுகிறான்” என்றார்கள். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம், “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுகிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது. சாத்தானை சாத்தான் விரட்டினால், அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான். அப்படியானால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? எனவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள். ஆனால் நானோ, பிசாசுகளை இறைவனின் ஆவியானவரால் விரட்டுகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது. “மேலும் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், எப்படி ஒருவனால் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டுபோக முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும். “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒவ்வொரு பாவமும், நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பது மன்னிக்கப்படாது. மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. “ஒரு நல்ல மரத்தை நடுங்கள், அப்பொழுது அதன் கனிகளும் நல்லதாய் இருக்கும். ஒரு கெட்ட மரத்தை நீங்கள் நட்டால், அதன் கனிகளும் கெட்டதாய் இருக்கும். ஏனெனில் ஒரு மரம், அதன் கனிகளினாலேயே இனங்காணப்படுகிறது. விரியன் பாம்புக் குட்டிகளே! தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள்? ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். நல்ல மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் நன்மையிலிருந்து நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான். தீய மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் தீமையிலிருந்து தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதர் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாய்த் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.”
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் மத்தேயு 12
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத்தேயு 12:22-37
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்