அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார். மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள். இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள். நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான். ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் மத் 12
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத் 12:22-37
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்