பின்னர், சிலர் இயேசுவிடம் ஒரு மனிதனை அழைத்து வந்தனர். குருடனான அவனால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு பிசாசு இருந்தது. இயேசு அவனைக் குணப்படுத்தினார். அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. வியப்புற்ற மக்கள், “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்!” என்றனர். மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள், “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன். இயேசு பரிசேயர்களின் எண்ணங்களை அறிந்தார். எனவே இயேசு, “தனக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவுகளைக்கொண்ட எந்த இராஜ்யமும் அழிந்துவிடும். பிரிவுகொள்ளுகின்ற எந்த நகரமும் நிலைக்காது. பிரிகின்ற எந்தக் குடும்பமும் முன்னேற்றம் அடையாது. எனவே சாத்தான் தன்னுடைய பிசாசுகளையே துரத்தினால், சாத்தான் பிரிந்திருக்கிறான். எனவே சாத்தானின் இராஜ்யம் நிலைத்திருக்காது. நான் பிசாசுகளை விரட்டும்பொழுது சாத்தானின் வல்லமையை நான் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மையெனில், உங்கள் மனிதர்கள் பிசாசுகளை விரட்ட எந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்கள் மக்களே நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கிறார்கள். ஆனால், பிசாசுகளை விரட்ட நான் தேவ ஆவியின் வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. ஒருவன் வலிமையான மனிதனின் வீட்டுக்குள் புகுந்து திருட நினைத்தால், முதலில் அவ்வலிமையான மனிதனைக் கட்டிப்போட வேண்டும். பின்னரே, அவன் அவ்வலிமையான மனிதனின் வீட்டிலிருந்து பொருட்களைத் திருட முடியும். என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன். “அதனால் நான் சொல்லுகிறேன், மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்படமாட்டான். “நல்ல பழங்கள் தேவையெனில், நல்ல மரத்தை வளர்க்க வேண்டும். மரம் தீயதானால், பழங்களும் தீயனவாகும். ஒரு மரத்தின் தரம் அதன் பழங்களைக்கொண்டே அறியப்படும். பாம்புகள் நீங்கள்! பொல்லாதவர்கள் நீங்கள்! நீங்கள் எப்படி நல்லவற்றைக் கூற முடியும். உள்ளத்திலுள்ளதையே வாய் பேசுகிறது. ஒரு நல்லவன் தன் உள்ளத்தில் நல்லவைகளை வைத்திருக்கிறான். எனவே அவன் நல்லவைகளை உள்ளத்திலிருந்து பேசுகிறான். ஆனால் பொல்லாத மனிதன் தன் உள்ளத்தில் பொல்லாதவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறான். எனவே அவன் பொல்லாதவைகளைத் தன் உள்ளத்திலிருந்து பேசுகிறான். மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளில் நடக்கும். உங்களது வார்த்தைகளே உங்களுக்கு நியாயம் வழங்க பயன்படுத்தப்படும். உங்களது வார்த்தைகளே உங்களை நல்லவரென்றும் உங்கள் வார்த்தைகளே உங்களைத் தீயோர் என்றும் நியாயம் தீர்க்கும்” என்று சொன்னார்.
வாசிக்கவும் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 12
கேளுங்கள் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 12
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: மத்தேயு எழுதிய சுவிசேஷம் 12:22-37
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்