லூக்கா 1:57-66

லூக்கா 1:57-66 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள். ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள். அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள். அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள். அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான். உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான். அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.

லூக்கா 1:57-66 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள். எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள். அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி, சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான். அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது. இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.

லூக்கா 1:57-66 பரிசுத்த பைபிள் (TAERV)

குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர். குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர். ஆனால் அக்குழந்தையின் தாய், “இல்லை, அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்” என்றாள். மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர். பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர். சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, “அவன் பெயர் யோவான்” என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான். அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர். இச்செய்திகளைக் கேட்ட எல்லா மக்களும் அவற்றைக் குறித்து அதிசயப்பட்டார்கள். அவர்கள், “இக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோ?” என்று எண்ணினர். கர்த்தர் இந்தக் குழந்தையோடு இருந்தபடியால் அவர்கள் இதைக் கூறினர்.

லூக்கா 1:57-66 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான். அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்