லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:57-66

லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:57-66 TAERV

குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர். குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர். ஆனால் அக்குழந்தையின் தாய், “இல்லை, அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்” என்றாள். மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர். பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர். சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, “அவன் பெயர் யோவான்” என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான். அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர். இச்செய்திகளைக் கேட்ட எல்லா மக்களும் அவற்றைக் குறித்து அதிசயப்பட்டார்கள். அவர்கள், “இக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோ?” என்று எண்ணினர். கர்த்தர் இந்தக் குழந்தையோடு இருந்தபடியால் அவர்கள் இதைக் கூறினர்.