லூக்கா 1:57-66

லூக்கா 1:57-66 TCV

எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள். ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள். அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள். அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள். அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான். உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான். அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.