லூக் 1:57-66

லூக் 1:57-66 IRVTAM

எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள். எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள். அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி, சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான். அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது. இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.