யோசுவா 10:1-9

யோசுவா 10:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசுவா ஆயி நகரத்தைக் கைப்பற்றி அதை முழுவதும் அழித்துப்போட்டான் என, எருசலேமின் அரசன் அதோனி-சேதேக் இப்பொழுது கேள்விப்பட்டான். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் செய்தான் என்றும், அத்துடன் கிபியோன் மக்களும் இஸ்ரயேலருடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களருகே வாழ்கிறார்களென்றும் கேள்விப்பட்டான். இதனால் அவனும் அவனுடைய குடிமக்களும் மிகவும் கலக்கமடைந்தார்கள். ஏனெனில் கிபியோன் நகரமும், அரசர்கள் வாழும் பட்டணங்களில் ஒன்றைப்போல ஒரு பிரதான முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. அது ஆயிபட்டணத்தைவிட பெரிதாகவும் இருந்தது. மனிதர் எல்லோரும் திறமையான வீரர்களாய் இருந்தனர். எனவே எருசலேம் அரசன் அதோனி-சேதேக் எப்ரோன் அரசன் ஓகாமுக்கும், யர்மூத் அரசன் பீராமுக்கும், லாகீசின் அரசன் யப்பியாவுக்கும், எக்லோனின் அரசன் தெபீருக்கும் ஒரு செய்தி அனுப்பினான்: “நான் கிபியோன் நகரைத் தாக்குவதற்கு நீங்கள் வந்து எனக்கு உதவுங்கள். ஏனெனில் கிபியோனியர் யோசுவாவோடும் இஸ்ரயேலரோடும் சமாதான ஒப்பந்தம் செய்துள்ளார்கள்” என வேண்டுகோள் விடுத்தான். அப்பொழுது எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய பட்டணங்களின் அரசர்களான, எமோரியரின் அரசர்கள் ஐவரும் போருக்கு ஒன்றுசேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் படைகளோடு கிபியோனுக்கு விரோதமாக நிலைகொண்டு போர்தொடுத்தார்கள். கிபியோனியர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவுக்கு உடனே ஒரு செய்தி அனுப்பி: “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிடாதேயும். உடனடியாக வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் மலைநாட்டிலுள்ள எமோரிய அரசர்கள் அனைவரும் எங்களுக்கெதிராகப் போர் செய்ய ஒன்றுகூடியிருக்கிறார்கள்” என்றார்கள். எனவே யோசுவா தனது மிகச்சிறந்த படைவீரர்கள் உட்பட, மற்ற முழு படையுடனும் கில்காலிலிருந்து அணிவகுத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நான் அவர்களை உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். அவர்களில் ஒருவனாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடியாது” என்றார். கில்காலிலிருந்து யோசுவா இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, எமோரியர்கள் எதிர்பாராத வேளையில் அவர்களைத் தாக்கினான்.

யோசுவா 10:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசுவா ஆயீயைப் பிடித்து, முழுவதும் அழித்து, எரிகோவிற்கும் அதின் ராஜாவிற்கும் செய்தபடி, ஆயீக்கும் அதின் ராஜாவிற்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து அவர்களுக்குள் குடியிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயீயைவிட பெரியதுமாக இருந்தபடியினாலும், அதின் மனிதர்கள் எல்லோரும் பலசாலிகளாக இருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள். ஆகவே, எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி: நாங்கள் கிபியோனைத் தாக்கும்படி, நீங்கள் என்னிடம் வந்து, எனக்கு உதவிசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் மக்களோடும் சமாதானம் செய்தார்கள் என்று சொல்லியனுப்பினான். அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியர்களின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லா சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாக முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தார்கள். அப்பொழுது கிபியோனின் மனிதர்கள் கில்காலில் இருக்கிற முகாமிற்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி: உமது அடியார்களைக் கைவிடாமல், சீக்கிரமாக எங்களிடம் வந்து, எங்களைக் காப்பாற்றி, எங்களுக்கு உதவிசெய்யும்; மலை தேசங்களிலே குடியிருக்கிற எமோரியர்களின் ராஜாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள். உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள். யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். யோசுவா கில்காலிலிருந்து இரவுமுழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.

யோசுவா 10:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் ராஜாவாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த ராஜா அறிந்தான். எரிகோவிற்கும் அதன் ராஜாவுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எருசலேமின் ராஜாவாகிய, அதோனிசேதேக், எபிரோனின் ராஜாவாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுடனும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுடனும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் ராஜா இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். இந்த ஐந்து எமோரிய ராஜாக்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன. கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய ராஜாக்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது. எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார். யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

யோசுவா 10:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள். ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி: நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான். அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள். உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.