யோசு 10:1-9

யோசு 10:1-9 IRVTAM

யோசுவா ஆயீயைப் பிடித்து, முழுவதும் அழித்து, எரிகோவிற்கும் அதின் ராஜாவிற்கும் செய்தபடி, ஆயீக்கும் அதின் ராஜாவிற்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து அவர்களுக்குள் குடியிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயீயைவிட பெரியதுமாக இருந்தபடியினாலும், அதின் மனிதர்கள் எல்லோரும் பலசாலிகளாக இருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள். ஆகவே, எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி: நாங்கள் கிபியோனைத் தாக்கும்படி, நீங்கள் என்னிடம் வந்து, எனக்கு உதவிசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் மக்களோடும் சமாதானம் செய்தார்கள் என்று சொல்லியனுப்பினான். அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியர்களின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லா சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாக முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தார்கள். அப்பொழுது கிபியோனின் மனிதர்கள் கில்காலில் இருக்கிற முகாமிற்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி: உமது அடியார்களைக் கைவிடாமல், சீக்கிரமாக எங்களிடம் வந்து, எங்களைக் காப்பாற்றி, எங்களுக்கு உதவிசெய்யும்; மலை தேசங்களிலே குடியிருக்கிற எமோரியர்களின் ராஜாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள். உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள். யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். யோசுவா கில்காலிலிருந்து இரவுமுழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.