யோசுவா 10:1-9

யோசுவா 10:1-9 TCV

யோசுவா ஆயி நகரத்தைக் கைப்பற்றி அதை முழுவதும் அழித்துப்போட்டான் என, எருசலேமின் அரசன் அதோனி-சேதேக் இப்பொழுது கேள்விப்பட்டான். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் செய்தான் என்றும், அத்துடன் கிபியோன் மக்களும் இஸ்ரயேலருடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களருகே வாழ்கிறார்களென்றும் கேள்விப்பட்டான். இதனால் அவனும் அவனுடைய குடிமக்களும் மிகவும் கலக்கமடைந்தார்கள். ஏனெனில் கிபியோன் நகரமும், அரசர்கள் வாழும் பட்டணங்களில் ஒன்றைப்போல ஒரு பிரதான முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. அது ஆயிபட்டணத்தைவிட பெரிதாகவும் இருந்தது. மனிதர் எல்லோரும் திறமையான வீரர்களாய் இருந்தனர். எனவே எருசலேம் அரசன் அதோனி-சேதேக் எப்ரோன் அரசன் ஓகாமுக்கும், யர்மூத் அரசன் பீராமுக்கும், லாகீசின் அரசன் யப்பியாவுக்கும், எக்லோனின் அரசன் தெபீருக்கும் ஒரு செய்தி அனுப்பினான்: “நான் கிபியோன் நகரைத் தாக்குவதற்கு நீங்கள் வந்து எனக்கு உதவுங்கள். ஏனெனில் கிபியோனியர் யோசுவாவோடும் இஸ்ரயேலரோடும் சமாதான ஒப்பந்தம் செய்துள்ளார்கள்” என வேண்டுகோள் விடுத்தான். அப்பொழுது எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய பட்டணங்களின் அரசர்களான, எமோரியரின் அரசர்கள் ஐவரும் போருக்கு ஒன்றுசேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் படைகளோடு கிபியோனுக்கு விரோதமாக நிலைகொண்டு போர்தொடுத்தார்கள். கிபியோனியர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவுக்கு உடனே ஒரு செய்தி அனுப்பி: “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிடாதேயும். உடனடியாக வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் மலைநாட்டிலுள்ள எமோரிய அரசர்கள் அனைவரும் எங்களுக்கெதிராகப் போர் செய்ய ஒன்றுகூடியிருக்கிறார்கள்” என்றார்கள். எனவே யோசுவா தனது மிகச்சிறந்த படைவீரர்கள் உட்பட, மற்ற முழு படையுடனும் கில்காலிலிருந்து அணிவகுத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நான் அவர்களை உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். அவர்களில் ஒருவனாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடியாது” என்றார். கில்காலிலிருந்து யோசுவா இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, எமோரியர்கள் எதிர்பாராத வேளையில் அவர்களைத் தாக்கினான்.