யோசுவாவின் புத்தகம் 10

10
சூரியன் அசையாது நின்ற நாள்
1அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் ராஜாவாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த ராஜா அறிந்தான். எரிகோவிற்கும் அதன் ராஜாவுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். 2எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். 3எருசலேமின் ராஜாவாகிய, அதோனிசேதேக், எபிரோனின் ராஜாவாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுடனும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுடனும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் ராஜா இவர்களிடம், 4“என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
5இந்த ஐந்து எமோரிய ராஜாக்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன.
6கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய ராஜாக்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது.
7எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். 8கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார்.
9யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
10இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். 11அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.
12கர்த்தர் அன்று இஸ்ரவேலர் எமோரியரை வெற்றிக்கொள்ளச் செய்தார். அந்த நாளில் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று, கர்த்தரை நோக்கி:
“சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும்.
ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல், சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான்.
13எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை. 14அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்!
15அதன்பிறகு, யோசுவாவும் அவனது படையினரும் கில்காலில் முகாமிட்டிருந்த இடத்துக்கு திரும்பிப் போனார்கள். 16ஆனால் போரின்போது, ஐந்து ராஜாக்களும் ஓடிப் போய் மக்கெதாவிற்கு அருகிலுள்ள ஒரு குகையில் ஒளித்திருந்தனர். 17அவர்கள் குகைகளில் ஒளிந்திருந்ததைச் சிலர் பார்த்து யோசுவாவிற்கு தெரிவித்தார்கள். 18யோசுவா, “குகையின் நுழை வாசலைப் பெரிய கற்களைப் புரட்டி மூடிவிடுங்கள். அக்குகையைக் காவல் செய்வதற்குச் சிலரை நியமியுங்கள். 19ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டாம். பின் தொடர்ந்து உங்கள் பகைவர்களைத் தாக்குங்கள். அவர்கள் தங்கள் நகரத்திற்குச் செல்லவிடாதீர்கள். அவர்கள் மீது வெற்றியை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்துள்ளார்” என்றான்.
20யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் பகைவர்களை வென்றனர். ஆனால் சில பகைவர்கள் அவர்கள் நகரங்களுக்குப் போய் ஒளிந்துகொண்டனர். அவர்கள் கொல்லப்படவில்லை. 21போர் முடிந்தபின், மக்கெதாவிற்கு யோசுவாவின் ஆட்கள் திரும்பி வந்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்கெதிராக எதையும் கூறும் துணிவு அந்நாட்டு ஜனங்களுக்கு இருக்கவில்லை.
22யோசுவா, “குகையின் வாசலை மூடியுள்ள கற்களை அகற்றி, ஐந்து ராஜாக்களையும் என்முன் கொண்டு வாருங்கள்” என்றான். 23யோசுவாவின் ஆட்கள் அப்படியே செய்தனர். அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகியவற்றின் ராஜாக்களாவார்கள். 24அவர்கள் அந்த ஐந்து ராஜாக்களையும் யோசுவாவிடம் அழைத்து வந்தனர். அவ்விடத்திற்கு வருமாறு யோசுவா தன் எல்லா ஆட்களையும் அழைத்தான். யோசுவா படையதிகாரிகளை நோக்கி, “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த ராஜாக்களின் கழுத்தின் மீது வையுங்கள்” என்றான். அவ்வாறே யோசுவாவின் படை அதிகாரிகள் நெருங்கி வந்து அந்த ராஜாக்களின் கழுத்துக்களின் மீது தங்கள் பாதங்களை வைத்தனர்.
25அப்போது யோசுவா தன் ஆட்களை நோக்கி, “வலிமையும் துணிவும் உடையவர்களாயிருங்கள், அஞ்சாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிற பகைவர்கள் எல்லோருக்கும் கர்த்தர் செய்யவிருப்பதை உங்களுக்குக் காட்டுவேன்” என்றான்.
26யோசுவா அந்த ஐந்து ராஜாக்களையும் கொன்று, அவர்களின் உடல்களை ஐந்து மரங்களில் தொங்கவிட்டான். மாலைவரை யோசுவா அவர்களை மரத்திலேயே தொங்கவிட்டான். 27சூரியன் மறையும் வேளையில் யோசுவா அவனது ஆட்களிடம் அந்த உடல்களை மரங்களிலிருந்து கீழே இறக்குமாறு கூறினான். அவர்கள் அந்த உடல்களை இறக்கி முன்பு அந்த ராஜாக்கள் ஒளித்திருந்த குகைளில் போட்டு மூடி, அவற்றின் வாசல்களைப் பெரிய பாறைகளால் மூடினார்கள். அந்தப் பாறைகள் இன்றைக்கும் உள்ளன.
28அன்று யோசுவா மக்கெதா என்னும் நகரத்தை வென்றான். அந்நகரின் ராஜாவையும் ஜனங்களையும் கொன்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை. எரிகோவின் ராஜாவுக்குச் செய்தபடியே மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.
தெற்குப் பகுதியின் நகரங்களைக் கைப்பற்றுதல்
29பின் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மக்கெதாவிலிருந்து பயணம் செய்தனர். அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள். 30அந்நகரத்தையும் அதன் ராஜாவையும் தோற்கடிப்பதற்கு கர்த்தர் இஸ்ரவேலரை அனுமதித்தார். அந்நகரில் இருந்த ஒவ்வொருவரையும் இஸ்ரவேல் ஜனங்கள் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவின் ராஜாவுக்குச் செய்தபடியே லிப்னாவின் ராஜாவுக்கும் செய்தனர்.
31பிறகு யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் லிப்னா நகரிலிருந்து லாகீசை நோக்கிச் சென்றனர். யோசுவாவும் அவனது படையும் லாகீசைச் சுற்றிலும் முகாமிட்டு அந்நகரத்தைத் தாக்கினார்கள். 32லாகீசு நகரத்தைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவர்களை அனுமதித்தார். இரண்டாம் நாளில் அந்நகரைத் தோற்கடித்தார்கள். லிப்னாவில் செய்தபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரிலிருந்த அனைவரையும் கொன்றார்கள். 33அப்போது கேசேரின் ராஜாவாகிய ஓராம், லாகீசுக்கு உதவியாக வந்தான். யோசுவா அவனையும் அவனது படையையும் கூட வென்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை.
34பிறகு, யோசுவாவும் எல்லா இஸ்ரவேல் ஜனங்களும் லாகீஸ் நகரிலிருந்து எக்லோன் நகரை நோக்கிப் பயணம் செய்தார்கள். அவர்கள் எக்லோன் நகரைச் சூழ்ந்து அதைத் தாக்கினார்கள். 35அவர்கள் அன்றைக்கு அந்நகரைக் கைப்பற்றியதோடு அங்கு வசித்து வந்த ஜனங்களையும் கொன்றனர். லாகீஸ் நகரில் செய்தபடியே இந்த நகரிலும் செய்தனர்.
36பின்பு யோசுவாவும் இஸ்ரவேலரும் எக்லோன் நகரத்திலிருந்து எபிரோன் என்னும் நகருக்குச் சென்று அதைத் தாக்கினார்கள். 37அவர்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியிருந்த ஊர்களையும் கைப்பற்றினர். நகரத்தில் வாழ்ந்தவர்களை எல்லாம் இஸ்ரவேலர் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. அவர்கள் எக்லோனிலும் அவ்வாறே செய்திருந்தனர். அவர்கள் நகரத்தை அழித்து, எல்லா ஜனங்களையும் கொன்றனர்.
38பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லோரும் தெபீருக்குத் திரும்பிச்சென்று, அந்நகரைத் தாக்கினார்கள். 39அவர்கள் நகரத்தையும், அதன் ராஜாவையும், நகரைச் சுற்றிலுமிருந்த சிறிய ஊர்களையும், கைப்பற்றினார்கள். அந்நகரில் வாழ்ந்த அனைவரையும் கொன்றனர். யாரும் உயிரோடுவிடப்படவில்லை. எபிரோனுக்கும் அதன் ராஜாவுக்கும் செய்ததையே இஸ்ரவேலர் தெபீருக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தனர். அவ்வாறே லிப்னாவிற்கும் அதன் ராஜாவுக்கும் செய்திருந்தனர்.
40மலை நாடுகளிலும், பாலைவனங்களிலும், மேற்கு மற்றும் கிழக்கு மலையடிவாரங்களிலும், இருக்கிற நகரங்களையெல்லாம் ஆட்சி செய்த எல்லா ராஜாக்களையும் யோசுவா தோற்கடித்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எல்லா ஜனங்களையும் கொல்லும்படியாக யோசுவாவிற்குக் கூறினார். எனவே யோசுவா அந்த இடங்களில் யாரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை.
41காதேஸ் பர்னேயாவிலிருந்து காத்சா வரைக்கும் இருந்த எல்லா நகரங்களையும் யோசுவா கைப்பற்றினான். எகிப்திலிருந்த கோசேன் நிலப் பகுதியிலிருந்து கிபியோன் வரையிலிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். 42யோசுவா அந்த நகரங்கள் அனைத்தையும் அவற்றின் ராஜாக்களையும் ஒரே ராணுவ நடவடிக்கையில் கைப்பற்றினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் போராடியதால் யோசுவா இதை சாதித்தான். 43பின்பு யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கில்கால் என்னும் நகரிலிருந்த தங்கள் முகாமிற்குத் திரும்பினார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோசுவாவின் புத்தகம் 10: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்