அப்போஸ்தலர் 7:22-43

அப்போஸ்தலர் 7:22-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான். “மோசே நாற்பது வயதுடையவனான போது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்க உள்ளத்தில் தீர்மானித்தான். அவர்களில் ஒருவன், ஒரு எகிப்தியனால் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். அப்பொழுது மோசே அவனைப் பாதுகாக்கும்படி போய், எகிப்தியனைக் கொலைசெய்தான். தன்னுடைய சொந்த மக்களை இறைவன் தப்புவிப்பதற்காகத் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று மோசே நினைத்தான். ஆனால் அவர்களோ அப்படிப் புரிந்துகொள்ளவில்லை. மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நண்பர்களே, நீங்கள் சகோதரர் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றான். “ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவன், மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொல்லப்பார்க்கிறாயோ?’ என்று கேட்டான். இதை மோசே கேட்டபோது, அவன் மீதியானுக்கு ஓடிப்போய், அங்கே ஒரு வெளிநாட்டானாக குடியிருந்தபோது அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். “நாற்பது ஆண்டுகள் சென்றபின்பு, முட்செடி எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையில், இறைத்தூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைவனத்திலே நடந்தது. அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்: ‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’ என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினான். அதைப்பார்க்க அவன் துணியவில்லை. “அப்பொழுது கர்த்தர் அவனிடம், ‘நீ உனது பாதரட்சைகளை கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கிறது. எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய வேதனைக் குரலைக் கேட்டு, அவர்களை விடுதலைசெய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்பொழுது நீ வா; நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’ என்றார். “இந்த மோசேயைத்தான் இஸ்ரயேலர் பார்த்து, ‘எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ எனக் கேட்டுப் புறக்கணித்திருந்தார்கள். ஆனால், அவனே அவர்களின் அதிகாரியாகவும் மீட்பனாகவும் இருக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டான். முட்செடியில் அவனுக்குக் காட்சியளித்த இறைவன் தம் தூதர் மூலமாய் இதைச் செய்தார். மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தி, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைவனத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான். “இந்த மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘இறைவன் உங்கள் சொந்த மக்களிலிருந்தே, என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள்’ என்று சொன்னவன். பாலைவனத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைவனின் தூதனுடனும், நமது தந்தையருடனும் இருந்தவன் இவனே. நமக்குக் கொடுக்கும்படி, ஜீவ வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவனும் இந்த மோசேயே. “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள். அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்திவந்த மோசேயைப்பற்றியோ, அவனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’ என்றார்கள். அக்காலத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்தார்கள். அவர்கள் அதற்குப் பலிகளைக் கொண்டுவந்து, தாங்கள் கைகளினால் செய்த அந்தச் சிலையை கொண்டாடினார்கள். அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இது இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு ஒத்திருக்கின்றது: “இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது, எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ? நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும், உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித்திரிந்தீர்களே. இவைகளெல்லாம் நீங்கள் வணங்கும்படி செய்துகொண்ட விக்கிரகங்களே. எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தும்படி அனுப்புவேன்.

அப்போஸ்தலர் 7:22-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான். தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை. மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்? நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான். பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது. எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே. சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே. இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.

அப்போஸ்தலர் 7:22-43 பரிசுத்த பைபிள் (TAERV)

தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார். “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ என்றான். அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர். “மோசே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்தில் இருந்தார். எரிகின்ற புதரின் ஜூவாலையிலிருந்து ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றினான். அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது. தேவன் கூறினார், ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் முன்னோரின் தேவன் நானே’ என்றார். மோசே பயத்தால் நடுங்க ஆரம்பித்தார். அவர் புதரைப் பார்க்கவும் அஞ்சினார். “கர்த்தர் அவரிடம், ‘உன் மிதியடிகளைக் கழற்று. நீ நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் பரிசுத்த பூமி. எகிப்தில் எனது மக்கள் மிகவும் துன்புறுவதைக் கண்டிருக்கிறேன். என் மக்கள் அழுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்துள்ளேன். மோசே! இப்பொழுது வா, நான் எகிப்திற்கு உன்னைத் திரும்பவும் அனுப்புகிறேன்’ என்றார். “யூதர்கள் அவர்களுக்கு வேண்டாமெனக் கூறிய அதே மோசே அவர்தான். அவர்கள் அவரிடம், ‘நீ எங்களுக்கு அதிபதியாகவும், நீதிபதியாகவும் இருக்கமுடியுமென்று யாராவது கூறினார்களா? இல்லை!’ என்றனர். தேவன் அதிபதியாகவும் மீட்பராகவும் மோசேயாகிய அதே மனிதனை அனுப்பினார். தேவன் ஒரு தேவதூதனின் உதவியோடு மோசேயை அனுப்பினார். எரியும் புதரில் மோசே கண்ட தேவ தூதன் இவனே. அதனால் மோசே மக்களை வெளியே நடத்திச் சென்றார். அவர் வல்லமை வாய்ந்த செயல்களையும் அற்புதங்களையும் செய்தார். எகிப்திலும், செங்கடலிலும், வானந்தரத்திலும் 40 ஆண்டுகள் இவற்றை மோசே செய்தார். “‘தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுப்பார். உங்கள் மக்களிடமிருந்தே அந்தத் தீர்க்கதரிசி வருவார். அவர் என்னைப் போலவே இருப்பார்’ என்று கூறிய அதே மோசேதான் அவர். வனாந்தரத்தில் யூதர்களின் கூட்டத்தோடு இருந்தவர் இவரேதான். சீனாய் மலையில் தன்னோடு பேசிய தேவதூதனுடன் இருந்தார். நமது முன்னோரோடும் அவர் இருந்தார். மோசே தேவனிடமிருந்து ஜீவன் தரும் கட்டளைகளைப் பெற்றார். மோசே நமக்கு அந்தக் கட்டளைகளைக் கொடுத்தார். “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர். நம் தந்தையர் ஆரோனை நோக்கி, ‘மோசே நம்மை எகிப்து நாட்டிற்கு வெளியே வழி நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியோம். எனவே எங்களுக்கு முன்னே போகவும் எங்களுக்கு வழிகாட்டவும் சில தெய்வங்களை உண்டாக்கும்’ என்றனர். எனவே மக்கள் கன்றுக் குட்டியைப் போன்ற ஒரு சிலை உண்டாக்கினர். பின் அவர்கள் அதற்குப் படைப்பதற்காகப் பொருட்களைக் கொண்டு வந்தனர். தங்கள் கைகளால் உண்டாக்கிய அதனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர்! ஆனால் தேவன் அவர்களுக்கு எதிராகத் திரும்பினார். வானத்திலுள்ள பொய்யான தெய்வங்களின் கூட்டத்தை வழிபடுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதை தேவன் நிறுத்திக்கொண்டார். தீர்க்கதரிசிகளின் நூலிலும் இவைதான் எழுதப்பட்டுள்ளன. தேவன் சொல்கிறார், “‘யூத மக்களாகிய நீங்கள் எனக்கு இரத்தபடைப்புக்களையோ பலிகளையோ 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் கொண்டு வரவில்லை. உங்களோடு மோளேகிற்காக ஒரு கூடாரத்தையும் ரெம்பான் என்னும் நட்சத்திர உருவத்தையும் சுமந்து சென்றீர்கள். இந்த விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதற்காக உருவாக்கினீர்கள். எனவே நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்.’

அப்போஸ்தலர் 7:22-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான். தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை. மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்? நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான். இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான். பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே. சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே. இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே.