மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான். தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை. மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்? நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான். பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது. எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே. சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே. இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து:
இஸ்ரவேல் வம்சத்தாரே,
நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
பணிந்துகொள்ளும்படி
நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும்,
உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே;
ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.