அப்போஸ்தலர் 7
7
ஆலோசனைச் சங்கத்தின்முன் ஸ்தேவானின் உரை
1அப்பொழுது பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா?” என்று கேட்டான்.
2அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே#7:2 ஆரானிலே அல்லது காரான் வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார். 3இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உன் நாட்டையும் உன் உறவினரையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’#7:3 ஆதி. 12:1 என்றார்.
4“அப்படியே ஆபிரகாம் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தான். ஆபிரகாமுடைய தகப்பன் இறந்தபின், நீங்கள் இப்பொழுது வாழுகிற இந்த நாட்டிற்கு இறைவன் அவனை அனுப்பினார். 5இறைவன் இங்கே ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச்சொத்தாகக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அவனுக்குப் பிள்ளை இல்லாதிருந்தும்கூட, அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறையினரும் இந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இறைவன் வாக்குப்பண்ணினார். 6இறைவன் ஆபிரகாமுடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். 7ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்.’ இறைவன் தொடர்ந்து, ‘அதற்குப் பின்பு அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்து, இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’#7:7 ஆதி. 15:13,14 என்றார். 8பின்பு இறைவன், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, அவன் பிறந்து எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்தான். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானான், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரத் தந்தையருக்குத் தகப்பனானான்.
9“கோத்திரத் தந்தையர் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால், அவர்கள் அவனை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, அவனோடுகூட இருந்தார். 10அவனுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்து, அவனைத் தப்புவித்தார். இறைவன் யோசேப்பிற்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நல்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே அவன் யோசேப்பை எகிப்திலும் தனது அரண்மனை முழுவதிலும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
11“பின்பு முழு எகிப்தையும் கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது; நமது தந்தையருக்கும் உணவு கிடைக்கவில்லை. 12எகிப்திலே தானியம் இருக்கிறது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் நமது தந்தையரை முதலாவது பயணமாக, அங்கே போகும்படி அனுப்பினான். 13அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு அறிவித்தான். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான். 14இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். 15அப்பொழுது யாக்கோபு எகிப்திற்குச் சென்றான். அங்கே அவனும், நமது தந்தையரும் காலமானார்கள். 16அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையைச் சீகேமில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தான்.
17“இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது. 18பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான்.#7:18 யாத். 1:8 19அந்த அரசன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். நமது முற்பிதாக்களைத் தங்கள் குழந்தைகளைச் சாகும்படி எறிந்துவிட வேண்டுமென்று பலவந்தப்படுத்தி, அவர்களை ஒடுக்கினான்.
20“இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தான். அவன் ஒரு சாதாரண குழந்தை அல்ல. மூன்று மாதங்களாக, அவன் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டான். 21பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள். 22எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான்.
23“மோசே நாற்பது வயதுடையவனான போது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்க உள்ளத்தில் தீர்மானித்தான். 24அவர்களில் ஒருவன், ஒரு எகிப்தியனால் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். அப்பொழுது மோசே அவனைப் பாதுகாக்கும்படி போய், எகிப்தியனைக் கொலைசெய்தான். 25தன்னுடைய சொந்த மக்களை இறைவன் தப்புவிப்பதற்காகத் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று மோசே நினைத்தான். ஆனால் அவர்களோ அப்படிப் புரிந்துகொள்ளவில்லை. 26மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நண்பர்களே, நீங்கள் சகோதரர் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றான்.
27“ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவன், மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? 28நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொல்லப்பார்க்கிறாயோ?’#7:28 யாத். 2:14 என்று கேட்டான். 29இதை மோசே கேட்டபோது, அவன் மீதியானுக்கு ஓடிப்போய், அங்கே ஒரு வெளிநாட்டானாக குடியிருந்தபோது அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.
30“நாற்பது ஆண்டுகள் சென்றபின்பு, முட்செடி எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையில், இறைத்தூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைவனத்திலே நடந்தது. 31அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்: 32‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’#7:32 யாத். 3:6 என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினான். அதைப்பார்க்க அவன் துணியவில்லை.
33“அப்பொழுது கர்த்தர் அவனிடம், ‘நீ உனது பாதரட்சைகளை கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கிறது. 34எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய வேதனைக் குரலைக் கேட்டு, அவர்களை விடுதலைசெய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்பொழுது நீ வா; நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’#7:34 யாத். 3:5,7,8,10 என்றார்.
35“இந்த மோசேயைத்தான் இஸ்ரயேலர் பார்த்து, ‘எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ எனக் கேட்டுப் புறக்கணித்திருந்தார்கள். ஆனால், அவனே அவர்களின் அதிகாரியாகவும் மீட்பனாகவும் இருக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டான். முட்செடியில் அவனுக்குக் காட்சியளித்த இறைவன் தம் தூதர் மூலமாய் இதைச் செய்தார். 36மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தி, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைவனத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான்.
37“இந்த மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘இறைவன் உங்கள் சொந்த மக்களிலிருந்தே, என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள்’#7:37 உபா. 18:15 என்று சொன்னவன். 38பாலைவனத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைவனின் தூதனுடனும், நமது தந்தையருடனும் இருந்தவன் இவனே. நமக்குக் கொடுக்கும்படி, ஜீவ வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவனும் இந்த மோசேயே.
39“ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள். 40அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்திவந்த மோசேயைப்பற்றியோ, அவனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’#7:40 யாத். 32:1 என்றார்கள். 41அக்காலத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்தார்கள். அவர்கள் அதற்குப் பலிகளைக் கொண்டுவந்து, தாங்கள் கைகளினால் செய்த அந்தச் சிலையை கொண்டாடினார்கள். 42அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இது இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு ஒத்திருக்கின்றது:
“இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது,
எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
43நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும்,
உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித்திரிந்தீர்களே.
இவைகளெல்லாம் நீங்கள் வணங்கும்படி செய்துகொண்ட விக்கிரகங்களே.
எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தும்படி#7:43 ஆமோ. 5:25‑27 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) அனுப்புவேன்.
44“நமது முற்பிதாக்கள் பாலைவனத்தில், தங்களுடன் சாட்சியின் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவன் கண்ட மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது. 45நமது தந்தையர் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின்கீழ் யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தார்கள். அந்த மக்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம் நமது நாட்டில் தாவீதின் காலம்வரைக்கும் இருந்தது. 46தாவீது இறைவனின் தயவைப் பெற்றவனாய், தான் யாக்கோபின் இறைவனுக்கு ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டான். 47ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான்.
48“எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்:
49“ ‘வானம் எனது அரியணை,
பூமி எனது பாதபீடம்.
நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்?
நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?
50இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’#7:50 ஏசா. 66:1,2
என்று கர்த்தர் கேட்கிறார்.
51“அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் தந்தையரைப் போலவே இருக்கிறீர்கள்: நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கிறீர்கள்! 52உங்கள் தந்தையர் துன்பப்படுத்தாத இறைவாக்கினர் எப்போதாவது இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்தவர்களைக்கூட, அவர்கள் கொலைசெய்தார்களே. இப்பொழுது நீங்களே அவரைக் காட்டிக்கொடுத்துக் கொலைசெய்தீர்கள். 53இறைத்தூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட மோசேயின் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை” என்றான்.
ஸ்தேவான் மீது கல்லெறிதல்
54அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள். 55ஆனால் ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கிறதையும் அவன் கண்டான். 56“இதோ பாருங்கள், நான் பரலோகம் திறந்திருப்பதையும், மானிடமகன் இறைவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான்.
57இதைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப்போய்த் தாக்கினார்கள். 58பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுபோய், அவன்மேல் கல்லெறியத் தொடங்கினார்கள். அப்பொழுது சாட்சிக்காரர்கள் தங்கள் மேலுடைகளைக் கழற்றி, சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்தார்கள்.
59அவர்கள் ஸ்தேவானின்மேல் கல்லெறிந்து கொண்டிருக்கையிலே அவன், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினான். 60பின்பு அவன் முழங்காற்படியிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்னபின்பு, விழுந்து நித்திரையடைந்தான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
அப்போஸ்தலர் 7: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.