அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:22-43

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:22-43 TAERV

தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார். “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ என்றான். அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர். “மோசே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்தில் இருந்தார். எரிகின்ற புதரின் ஜூவாலையிலிருந்து ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றினான். அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது. தேவன் கூறினார், ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் முன்னோரின் தேவன் நானே’ என்றார். மோசே பயத்தால் நடுங்க ஆரம்பித்தார். அவர் புதரைப் பார்க்கவும் அஞ்சினார். “கர்த்தர் அவரிடம், ‘உன் மிதியடிகளைக் கழற்று. நீ நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் பரிசுத்த பூமி. எகிப்தில் எனது மக்கள் மிகவும் துன்புறுவதைக் கண்டிருக்கிறேன். என் மக்கள் அழுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்துள்ளேன். மோசே! இப்பொழுது வா, நான் எகிப்திற்கு உன்னைத் திரும்பவும் அனுப்புகிறேன்’ என்றார். “யூதர்கள் அவர்களுக்கு வேண்டாமெனக் கூறிய அதே மோசே அவர்தான். அவர்கள் அவரிடம், ‘நீ எங்களுக்கு அதிபதியாகவும், நீதிபதியாகவும் இருக்கமுடியுமென்று யாராவது கூறினார்களா? இல்லை!’ என்றனர். தேவன் அதிபதியாகவும் மீட்பராகவும் மோசேயாகிய அதே மனிதனை அனுப்பினார். தேவன் ஒரு தேவதூதனின் உதவியோடு மோசேயை அனுப்பினார். எரியும் புதரில் மோசே கண்ட தேவ தூதன் இவனே. அதனால் மோசே மக்களை வெளியே நடத்திச் சென்றார். அவர் வல்லமை வாய்ந்த செயல்களையும் அற்புதங்களையும் செய்தார். எகிப்திலும், செங்கடலிலும், வானந்தரத்திலும் 40 ஆண்டுகள் இவற்றை மோசே செய்தார். “‘தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுப்பார். உங்கள் மக்களிடமிருந்தே அந்தத் தீர்க்கதரிசி வருவார். அவர் என்னைப் போலவே இருப்பார்’ என்று கூறிய அதே மோசேதான் அவர். வனாந்தரத்தில் யூதர்களின் கூட்டத்தோடு இருந்தவர் இவரேதான். சீனாய் மலையில் தன்னோடு பேசிய தேவதூதனுடன் இருந்தார். நமது முன்னோரோடும் அவர் இருந்தார். மோசே தேவனிடமிருந்து ஜீவன் தரும் கட்டளைகளைப் பெற்றார். மோசே நமக்கு அந்தக் கட்டளைகளைக் கொடுத்தார். “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர். நம் தந்தையர் ஆரோனை நோக்கி, ‘மோசே நம்மை எகிப்து நாட்டிற்கு வெளியே வழி நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியோம். எனவே எங்களுக்கு முன்னே போகவும் எங்களுக்கு வழிகாட்டவும் சில தெய்வங்களை உண்டாக்கும்’ என்றனர். எனவே மக்கள் கன்றுக் குட்டியைப் போன்ற ஒரு சிலை உண்டாக்கினர். பின் அவர்கள் அதற்குப் படைப்பதற்காகப் பொருட்களைக் கொண்டு வந்தனர். தங்கள் கைகளால் உண்டாக்கிய அதனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர்! ஆனால் தேவன் அவர்களுக்கு எதிராகத் திரும்பினார். வானத்திலுள்ள பொய்யான தெய்வங்களின் கூட்டத்தை வழிபடுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதை தேவன் நிறுத்திக்கொண்டார். தீர்க்கதரிசிகளின் நூலிலும் இவைதான் எழுதப்பட்டுள்ளன. தேவன் சொல்கிறார், “‘யூத மக்களாகிய நீங்கள் எனக்கு இரத்தபடைப்புக்களையோ பலிகளையோ 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் கொண்டு வரவில்லை. உங்களோடு மோளேகிற்காக ஒரு கூடாரத்தையும் ரெம்பான் என்னும் நட்சத்திர உருவத்தையும் சுமந்து சென்றீர்கள். இந்த விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதற்காக உருவாக்கினீர்கள். எனவே நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்.’