1 சாமுவேல் 18:1-16

1 சாமுவேல் 18:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சவுல் தாவீதுடன் பேசி முடித்தபின், யோனத்தான் தாவீதுடன் ஆவியில் ஒன்றிணைந்தான். யோனத்தான் தாவீதைத் தன்னைப்போல் நேசித்தான். அன்றிலிருந்து சவுல் தாவீதை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப் போகவிடாமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டான். யோனத்தான் தன்னைப்போல் தாவீதில் அன்பு செலுத்தியபடியால், அவன் தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். யோனத்தான் தான் உடுத்தியிருந்த மேலங்கியைக் கழற்றி, அதனுடன் தனது உடைகளையும் தாவீதுக்குக் கொடுத்தான். அத்துடன் தனது வாள், வில், இடைக்கச்சை முதலியவற்றையும் அவனுக்குக் கொடுத்தான். சவுல் செய்யச் சொல்லி அனுப்பிய எந்த வேலையையும் தாவீது திறமையாகச் செய்தான். இதனால் சவுல் அவனுக்கு படையில் ஒரு உயர்பதவி கொடுத்தான். இது மக்களுக்கும், சவுலின் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தாவீது பெலிஸ்தியனைக் கொலைசெய்தபின், இஸ்ரயேலின் மனிதர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வந்தார்கள். அப்பொழுது இஸ்ரயேலின் எல்லா பட்டணங்களிலுமிருந்தும் பெண்கள் பாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பாடல்களோடும், தம்புராக்களோடும், வீணைகளோடும் அரசன் சவுலைச் சந்திக்கும்படி வந்தார்கள். அவர்கள் ஆடிப்பாடுகையில் சொன்னதாவது: “சவுல் ஆயிரக் கணக்கில் கொன்றான். தாவீது பத்தாயிரக் கணக்கில் கொன்றான்.” அதைக்கேட்ட சவுல் அதிக கோபமடைந்தான். அந்தப் பாட்டு அவனுக்கு கசப்பாயிருந்தது. “தாவீதுக்கு பத்தாயிரமும், எனக்கு ஆயிரமும் என்று சொல்லியல்லவா மதிப்புக் கொடுக்கிறார்கள். மேலும் அவனுக்கு அரசாட்சியைவிட வேறு எதை அதிகமாய் கொடுப்பார்கள்” என்று நினைத்தான். அந்த நேரம் முதல் சவுல் பொறாமைக் கண் கொண்டே தாவீதைப் பார்த்தான். மறுநாள் இறைவனிடமிருந்து வந்த பொல்லாத ஆவி சவுலின்மேல் வல்லமையாய் இறங்கியது. அவன் வீட்டுக்குள்ளே பிதற்றிக்கொண்டிருந்தான்; தாவீது தினந்தோறும் வாசிக்கிறதுபோல் யாழ் வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது சவுலின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. சவுல், “தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்துவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ஈட்டியை அவன்மேல் எறிந்தான். ஆனால் தாவீது இருமுறை விலகித் தப்பினான். யெகோவா தன்னைவிட்டு விலகித் தாவீதுடன் இருப்பதினால் சவுல் தாவீதுக்குப் பயப்பட்டான். எனவே தாவீதைத் தன்னிடமிருந்து அனுப்பிவிட்டு, ஆயிரம் படைவீரருக்கு அவனைத் தலைவனாக்கினான். தாவீது தன் போர் வீரர்களைத் தலைமைதாங்கி நடத்தினான். தாவீது தான் செய்தவைகள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; ஏனெனில் யெகோவா அவனோடுகூட இருந்தார். தாவீது இவ்வாறு பெரும் வெற்றியீட்டியதைக் கண்ட சவுல் அவனுக்குப் பயந்தான். எல்லா இஸ்ரயேலர்களும் யூதாவின் மக்களும் தாவீதிடம் அன்பு செலுத்தினார்கள். ஏனெனில் அவன் எல்லா யுத்தங்களையும் தலைமை வகுத்து நடத்தினான்.

1 சாமுவேல் 18:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாக இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போல நேசித்தான். சவுல் அவனை அவனுடைய தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக விடாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். யோனத்தான் தாவீதைத் தன்னுடைய ஆத்துமாவைப்போல நேசித்ததால், அவனும் இவனும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் உடைகளையும், தன் பட்டயத்தையும், தன்னுடைய வில்லையும், தன்னுடைய கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான். தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடத்தியதால், சவுல் அவனை யுத்தமனிதர்களின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா மக்களின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரர்களின் கண்களுக்கும் பிரியமாயிருந்தான். தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, மக்கள் திரும்ப வரும்போதும், பெண்கள் இஸ்ரவேலின் எல்லா பட்டணங்களிலும் இருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அந்த பெண்கள் ஆடிப்பாடும்போது: “சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு ஆழ்ந்த துக்கமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் 10,000, எனக்கோ 1,000 கொடுத்தார்கள்; இன்னும் ஆட்சி மட்டும் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்த நாள் முதற்கொண்டு சவுல் தாவீதை சந்தேகத்தோடு பார்த்தான். மறுநாளிலே தேவனால் விடப்பட்ட தீயஆவி சவுலின்மேல் இறங்கினது; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன்னுடைய கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான். யெகோவா தாவீதோடு இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து, அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம் பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான். தாவீது தன்னுடைய செயல்களில் எல்லாம் புத்திமானாக நடந்தான்; யெகோவா அவனோடு இருந்தார். அவன் மகா புத்திமானாக நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்தான். இஸ்ரவேலர்களும் யூதா மக்களுமாகிய யாவரும் தாவீதை நேசித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.

1 சாமுவேல் 18:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

சவுல் தாவீதோடு பேசி முடிந்ததும், யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களானார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான். சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக்கொண்டான். அவனைத் தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். யோனத்தான் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். அவன் தன் சீருடையையும் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். மேலும் தனது வில், பட்டயம் மற்றும் கச்சையையும் கூட தாவீதுக்கே கொடுத்தான். பல யுத்தங்களுக்கு தாவீதை சவுல் அனுப்பினான். தாவீதும் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தான். பின்பு அவனை படைவீரருக்கு தலைவன் ஆக்கினான். சவுலின் தளபதிகள் உட்பட அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர்! தாவீது பெலிஸ்தியர்களோடு சண்டையிட வெளியேறினான். போரிலிருந்து வெற்றிபெற்று திரும்பியபோது, இஸ்ரவேலின் ஒவ்வொரு நகரப் பெண்மணிகளும் தாவீதைப் பாராட்ட வந்தனர். சிரித்து நடனமாடி மேளமும் யாழும் வாசித்தனர். சவுல் எதிரில் இதனைச் செய்தனர். பெண்கள், “சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான். ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!” என்று பாடினார்கள். இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான். அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான். மறுநாள், தேவனிடமிருந்து ஒரு கெட்ட ஆவி சவுலை ஆட்கொண்டது. தாவீது வழக்கம்போல் சுரமண்டலத்தை எடுத்து மீட்டிக்கொண்டிருக்கும்போது, சவுல் தன் வீட்டில் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தான். சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், “சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்” என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீது தப்பிவிட்டான். தாவீதோடு கர்த்தர் இருந்தார். சவுலிடமிருந்து கர்த்தர் விலகிவிட்டார். எனவே சவுல் தாவீதைக் கண்டு பயந்தான். தன்னிடமிருந்து வெகுதொலைவான இடத்துக்குத் தாவீதை சவுல் அனுப்பினான். 1,000 வீரர்களுக்கு அதிகாரியாக தாவீதை ஆக்கினான். வீரர்களை போருக்கு வழி நடத்துகிறவனாயிருந்தான். கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான். சவுல் தாவீதின் வெற்றிகளைக் கண்டபோது அவனுக்கு மேலும், மேலும் பயம் வந்தது. ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர்.

1 சாமுவேல் 18:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள். யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான். தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு தரம் அவனுக்குத் தப்பினான். கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து, அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான். தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார். அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்