1 சாமுயேல் 18:1-16

1 சாமுயேல் 18:1-16 TCV

சவுல் தாவீதுடன் பேசி முடித்தபின், யோனத்தான் தாவீதுடன் ஆவியில் ஒன்றிணைந்தான். யோனத்தான் தாவீதைத் தன்னைப்போல் நேசித்தான். அன்றிலிருந்து சவுல் தாவீதை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப் போகவிடாமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டான். யோனத்தான் தன்னைப்போல் தாவீதில் அன்பு செலுத்தியபடியால், அவன் தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். யோனத்தான் தான் உடுத்தியிருந்த மேலங்கியைக் கழற்றி, அதனுடன் தனது உடைகளையும் தாவீதுக்குக் கொடுத்தான். அத்துடன் தனது வாள், வில், இடைக்கச்சை முதலியவற்றையும் அவனுக்குக் கொடுத்தான். சவுல் செய்யச் சொல்லி அனுப்பிய எந்த வேலையையும் தாவீது திறமையாகச் செய்தான். இதனால் சவுல் அவனுக்கு படையில் ஒரு உயர்பதவி கொடுத்தான். இது மக்களுக்கும், சவுலின் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தாவீது பெலிஸ்தியனைக் கொலைசெய்தபின், இஸ்ரயேலின் மனிதர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வந்தார்கள். அப்பொழுது இஸ்ரயேலின் எல்லா பட்டணங்களிலுமிருந்தும் பெண்கள் பாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பாடல்களோடும், தம்புராக்களோடும், வீணைகளோடும் அரசன் சவுலைச் சந்திக்கும்படி வந்தார்கள். அவர்கள் ஆடிப்பாடுகையில் சொன்னதாவது: “சவுல் ஆயிரக் கணக்கில் கொன்றான். தாவீது பத்தாயிரக் கணக்கில் கொன்றான்.” அதைக்கேட்ட சவுல் அதிக கோபமடைந்தான். அந்தப் பாட்டு அவனுக்கு கசப்பாயிருந்தது. “தாவீதுக்கு பத்தாயிரமும், எனக்கு ஆயிரமும் என்று சொல்லியல்லவா மதிப்புக் கொடுக்கிறார்கள். மேலும் அவனுக்கு அரசாட்சியைவிட வேறு எதை அதிகமாய் கொடுப்பார்கள்” என்று நினைத்தான். அந்த நேரம் முதல் சவுல் பொறாமைக் கண் கொண்டே தாவீதைப் பார்த்தான். மறுநாள் இறைவனிடமிருந்து வந்த பொல்லாத ஆவி சவுலின்மேல் வல்லமையாய் இறங்கியது. அவன் வீட்டுக்குள்ளே பிதற்றிக்கொண்டிருந்தான்; தாவீது தினந்தோறும் வாசிக்கிறதுபோல் யாழ் வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது சவுலின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. சவுல், “தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்துவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ஈட்டியை அவன்மேல் எறிந்தான். ஆனால் தாவீது இருமுறை விலகித் தப்பினான். யெகோவா தன்னைவிட்டு விலகித் தாவீதுடன் இருப்பதினால் சவுல் தாவீதுக்குப் பயப்பட்டான். எனவே தாவீதைத் தன்னிடமிருந்து அனுப்பிவிட்டு, ஆயிரம் படைவீரருக்கு அவனைத் தலைவனாக்கினான். தாவீது தன் போர் வீரர்களைத் தலைமைதாங்கி நடத்தினான். தாவீது தான் செய்தவைகள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; ஏனெனில் யெகோவா அவனோடுகூட இருந்தார். தாவீது இவ்வாறு பெரும் வெற்றியீட்டியதைக் கண்ட சவுல் அவனுக்குப் பயந்தான். எல்லா இஸ்ரயேலர்களும் யூதாவின் மக்களும் தாவீதிடம் அன்பு செலுத்தினார்கள். ஏனெனில் அவன் எல்லா யுத்தங்களையும் தலைமை வகுத்து நடத்தினான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்