சாமுவேலின் முதலாம் புத்தகம் 18:1-16

சாமுவேலின் முதலாம் புத்தகம் 18:1-16 TAERV

சவுல் தாவீதோடு பேசி முடிந்ததும், யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களானார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான். சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக்கொண்டான். அவனைத் தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். யோனத்தான் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். அவன் தன் சீருடையையும் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். மேலும் தனது வில், பட்டயம் மற்றும் கச்சையையும் கூட தாவீதுக்கே கொடுத்தான். பல யுத்தங்களுக்கு தாவீதை சவுல் அனுப்பினான். தாவீதும் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தான். பின்பு அவனை படைவீரருக்கு தலைவன் ஆக்கினான். சவுலின் தளபதிகள் உட்பட அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர்! தாவீது பெலிஸ்தியர்களோடு சண்டையிட வெளியேறினான். போரிலிருந்து வெற்றிபெற்று திரும்பியபோது, இஸ்ரவேலின் ஒவ்வொரு நகரப் பெண்மணிகளும் தாவீதைப் பாராட்ட வந்தனர். சிரித்து நடனமாடி மேளமும் யாழும் வாசித்தனர். சவுல் எதிரில் இதனைச் செய்தனர். பெண்கள், “சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான். ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!” என்று பாடினார்கள். இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான். அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான். மறுநாள், தேவனிடமிருந்து ஒரு கெட்ட ஆவி சவுலை ஆட்கொண்டது. தாவீது வழக்கம்போல் சுரமண்டலத்தை எடுத்து மீட்டிக்கொண்டிருக்கும்போது, சவுல் தன் வீட்டில் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தான். சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், “சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்” என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீது தப்பிவிட்டான். தாவீதோடு கர்த்தர் இருந்தார். சவுலிடமிருந்து கர்த்தர் விலகிவிட்டார். எனவே சவுல் தாவீதைக் கண்டு பயந்தான். தன்னிடமிருந்து வெகுதொலைவான இடத்துக்குத் தாவீதை சவுல் அனுப்பினான். 1,000 வீரர்களுக்கு அதிகாரியாக தாவீதை ஆக்கினான். வீரர்களை போருக்கு வழி நடத்துகிறவனாயிருந்தான். கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான். சவுல் தாவீதின் வெற்றிகளைக் கண்டபோது அவனுக்கு மேலும், மேலும் பயம் வந்தது. ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர்.