1 கொரிந்தியர் 14:21-40
1 கொரிந்தியர் 14:21-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களைக்கொண்டும், புரியாத உதடுகளைக்கொண்டும் இந்த மக்களுடன் நான் பேசுவேன். அப்பொழுதும் இவர்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள், என்று கர்த்தர் சொல்கிறார்” என மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறதே. எனவே, வேற்று மொழிகளைப் பேசுவது, அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறதேயன்றி, விசுவாசிகளுக்கு அல்ல. இறைவாக்குரைப்பதோ விசுவாசிகளுக்கே அன்றி, அது அவிசுவாசிகளுக்கு அல்ல. எனவே திருச்சபையோர் எல்லோரும் கூடிவரும்போது, எல்லோரும் வேற்று மொழிகளைப் பேசினால், அங்கு வருகின்ற ஆவிக்குரிய வரங்களைப் பற்றி விளக்கமில்லாதவர்களும், அவிசுவாசிகளும் உங்களைப் பார்த்து, நீங்கள் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டார்களா? ஆனால் எல்லோரும் இறைவாக்கு உரைத்தால், அப்பொழுது அங்கு வருகின்ற அவிசுவாசியோ, அல்லது அந்த விளக்கமில்லாதவனோ, நீங்கள் எல்லோரும் சொல்லும் இறைவாக்கின் வார்த்தைகளைக் கேட்டு, தான் பாவி என்று எடுத்துக்காட்டும். அவன் கேட்கும் வார்த்தைகளெல்லாம், அவனை நியாயந்தீர்க்கும். அப்பொழுது அவனுடைய இருதயத்தின் இரகசியம் எல்லாம் வெளியாகும். எனவே அவன், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு, “உண்மையாகவே இறைவன் உங்கள் மத்தியில் இருக்கிறார்!” என்று அறிக்கையிடுவான். ஆகையால் பிரியமானவர்களே, நாங்கள் என்னத்தைச் சொல்வோம்? நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, ஒருவன் ஒரு பாட்டைப் பாடுகிறான்; மற்றொருவன், ஒரு அறிவுறுத்தும் வார்த்தையைக் கொடுக்கிறான்; இன்னொருவன் தான் பெற்ற வெளிப்பாட்டைத் தெரியப்படுத்துகிறான்; வேறொருவன், வேற்று மொழியில் பேசுகிறான்; இன்னொருவன், அதை மொழிபெயர்க்கிறான். இவை எல்லாம் திருச்சபையின் வளர்ச்சிக்காகவே செய்யப்படவேண்டும். எவராவது வேறொரு மொழியில் பேசுவதாயிருந்தால், இரண்டு பேரோ, அல்லது மூன்று பேரோ மட்டும் அப்படிப் பேசட்டும். அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவேண்டும். யாராவது ஒருவர் அதை மொழிபெயர்த்துச் சொல்லவேண்டும். ஆனால், அதை மொழி பெயர்க்கக்கூடிய ஒருவன் திருச்சபையில் இல்லாதிருந்தால், அப்படிப்பேசுகிறவன் திருச்சபையில் மவுனமாய் இருக்கவேண்டும். அவன் உள்ளத்தில் தனக்குள்ளேயே இறைவனிடம் பேசிக்கொள்ளட்டும். இறைவாக்குரைப்போரும், இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ பேசலாம். மற்றவர்களோ, சொல்லப்பட்ட செய்தியைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். பேசிக்கொண்டிருக்கிறவனுக்கு அருகே உட்கார்ந்திருக்கிறவன், இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டால், பேசிக்கொண்டிருக்கிறவன் தான் பேசுவதை நிறுத்தவேண்டும். இப்படி நீங்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்கு உரைக்கலாம். இதனால், நீங்கள் எல்லோரும் அறிவுறுத்தப்பட்டு ஊக்கம் பெறலாம். இறைவாக்குரைப்போரின் ஆவிகள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியவையாக இருக்கின்றன. ஏனெனில், இறைவன் ஒழுங்கின்மையை ஏற்படுத்தும் இறைவன் அல்ல. பரிசுத்தவான்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருப்பதுபோலவே, அவர் அமைதியையே ஏற்படுத்துகிறவர். திருச்சபைக் கூட்டங்களில் பெண்கள் மவுனமாக இருக்கவேண்டும். பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறதில்லை. யூதச்சட்டத்தில் சொல்லியிருக்கிறபடி, அவர்கள் தலைமைத்துவத்தில் இருக்கக்கூடாது. பெண்கள் எதைப்பற்றியாவது அறிந்துகொள்ள விரும்பினால், அதை வீட்டில் தங்கள் சொந்த கணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்; ஏனெனில் திருச்சபையிலே பெண்கள் பேசுவது அவர்களுக்கு அவமானமாயிருக்கும். இறைவனுடைய வார்த்தை உங்களுடன்தான் ஆரம்பமாயிற்றோ? அல்லது உங்களிடம் மட்டும்தான் அது வந்து சேர்ந்ததோ? உங்களில் யாராவது தன்னை ஒரு இறைவாக்கினன் என்றோ, அல்லது ஆவிக்குரிய வரம் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது கர்த்தருடைய கட்டளைகள் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆகவே பிரியமானவர்களே, இறைவாக்கு உரைப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருங்கள். ஆனால், வேற்று மொழிகளைப் பேசுவதையோ தடுக்கவேண்டாம். எல்லாக் காரியங்களும் ஏற்றவிதத்திலும், ஒழுங்காகவும் செய்யப்படவேண்டும்.
1 கொரிந்தியர் 14:21-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது. ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா? எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான். நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நிய மொழியைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் விளக்கம் சொல்லுகிறான். சகோதரர்களே, இது என்ன? அனைத்தும் பக்திவளர்ச்சிக்கேதுவாகச் செய்யப்படவேண்டும். யாராவது அந்நிய மொழியிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டும் அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டும் பேசவும், அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவும், இன்னொருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்பேசவேண்டும். தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கவேண்டும். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால், முதலில் பேசினவன் பேசாமலிருக்கவேண்டும். எல்லோரும் கற்கிறதற்கும் எல்லோரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனம் சொல்லலாம். தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே. தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும். இப்படியிருக்க, சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள், அந்நிய மொழிகளைப் பேசுகிறதற்கும் தடைசெய்யாமலிருங்கள். அனைத்து காரியங்களும் நல்லொழுக்கமாகவும், முறையாகவும் செய்யப்படவேண்டும்.
1 கொரிந்தியர் 14:21-40 பரிசுத்த பைபிள் (TAERV)
“வெவ்வேறு மொழிகளைப் பேசும் மனிதர்களையும், வேற்று மக்களின் மொழிகளையும் பயன்படுத்தி இந்த மக்களோடு பேசுவேன். அப்போதும் இந்த மக்கள் எனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு கர்த்தர் சொல்கிறார். எனவே, வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் விசுவாசமற்ற மக்களுக்கு நிரூபணத்தின் ஒரு அடையாளமாகும், விசுவாசமுள்ள மக்களுக்கு அல்ல. தீர்க்கதரிசனம் விசுவாசமுள்ள மக்களுக்கேயொழிய, விசுவாசமற்ற மக்களுக்கல்ல. சபையினர் எல்லோரும் கூடி இருக்கையில் நீங்கள் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதாக வைத்துக்கொள்வோம். விசுவாசமற்றவர்களோ, உங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களோ அப்போது வந்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாகக் கருதுவர். ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான். அவன் உள்ளத்தின் இரகசியங்கள் அவனுக்குத் தெரிவிக்கப்படும். எனவே அந்த மனிதன் தலை குனிந்து வீழ்ந்து தேவனை வணங்குவான். “உண்மையாகவே, தேவன் உங்களோடு இருக்கிறார்” என்று அவன் கூறுவான். எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் சந்திக்கும்போது ஒருவரிடம் சங்கீதம் இருக்கிறது. மற்றொருவரிடம் போதனை இருக்கிறது. இன்னொருவரிடம் தேவனிடம் இருந்து பெற்ற புதிய செய்தி இருக்கிறது. ஒருவர் வேறு மொழியைப் பேசக்கூடும். இன்னொருவர் அதனை விளக்கியுரைக்கக் கூடும். இந்தக் காரியங்களின் நோக்கம் சபை வளருவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். நீங்கள் சந்திக்கும்போது வேறு மொழிகளில் ஒருவர் உங்களோடு பேசினால் இருவராக மட்டுமே இருக்க வேண்டும். மூன்று பேருக்குமேல் இதைச் செய்யக்கூடாது. அவர்கள் ஒருவருக்குப்பின் ஒருவர் பேசவேண்டும். இன்னொருவர் அவர்கள் பேசுவதை விளக்க வேண்டும். அவ்வாறு விளக்கக்கூடியவர் அங்கே இல்லையென்றால் சபையினர் சந்திக்கும்போது வேறு மொழியில் பேசுகின்றவர் அமைதியாக இருக்க வேண்டும். தன்னிடமும் தேவனிடமும் மட்டுமே பேசிக்கொண்டு அவர் இருத்தல் வேண்டும். இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் மட்டுமே பேசவேண்டும். அவர்கள் கூறுவதைப் பிறர் நிதானிக்கவேண்டும். சபையில் இருப்பவரில் ஒருவர் தேவனிடமிருந்து ஏதேனும் செய்தியைப் பெற்றால் முதலில் பேசுகிறவர் உடனே பேசுவதை நிறுத்த வேண்டும். இந்த முறையில் ஒருவருக்குப் பின் ஒருவராக நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும். அவ்வாறாக எல்லா மக்களும் பயிற்சியும், உற்சாகமும் பெறுவார்கள். தீர்க்கதரிசிகளின் ஆவிகளும்கூட தீர்க்கதரிசிகளால் கட்டுப்படுத்தப்பட முடியும். தேவன் குழப்பத்தின் தேவனல்ல. அவர் சமாதானத்தின் தேவனாவார். சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுடைய எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது. பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது. தேவனுடைய போதனை உங்களிடமிருந்து வந்ததா? இல்லை. அல்லது தேவனுடைய போதனையைப் பெற்றவர்கள் நீங்கள் மட்டுமா? இல்லை. உங்களில் ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியாகக் கருதினாலோ அல்லது ஆவியின் வரம் பெற்றிருப்பதாக எண்ணினாலோ, அவன் நான் உங்களுக்கு எழுதுவதை கர்த்தரின் கட்டளையாக அடையாளம் கண்டு கொள்ளட்டும். இதை அந்த மனிதன் அறியவில்லையென்றால் அவன் தேவனால் அறியப்படாதவன். எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் தீர்க்கதரிசனம் உரைப்பதை விரும்புங்கள். அதே சமயத்தில் மக்கள் வேறு மொழிகளில் பேசும் வரத்தைத் தடுக்காதீர்கள். ஆனால் தகுதியானதும் ஒழுங்கானதுமான வகையில் ஒவ்வொன்றும் செய்யப்பட வேண்டும்.
1 கொரிந்தியர் 14:21-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மறுபாஷைக்காரராலும், மறு உதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான். நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன். தீர்க்கதரிசிகள் இரண்டு பேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.