“வெவ்வேறு மொழிகளைப் பேசும் மனிதர்களையும், வேற்று மக்களின் மொழிகளையும் பயன்படுத்தி இந்த மக்களோடு பேசுவேன். அப்போதும் இந்த மக்கள் எனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு கர்த்தர் சொல்கிறார். எனவே, வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் விசுவாசமற்ற மக்களுக்கு நிரூபணத்தின் ஒரு அடையாளமாகும், விசுவாசமுள்ள மக்களுக்கு அல்ல. தீர்க்கதரிசனம் விசுவாசமுள்ள மக்களுக்கேயொழிய, விசுவாசமற்ற மக்களுக்கல்ல. சபையினர் எல்லோரும் கூடி இருக்கையில் நீங்கள் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதாக வைத்துக்கொள்வோம். விசுவாசமற்றவர்களோ, உங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களோ அப்போது வந்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாகக் கருதுவர். ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான். அவன் உள்ளத்தின் இரகசியங்கள் அவனுக்குத் தெரிவிக்கப்படும். எனவே அந்த மனிதன் தலை குனிந்து வீழ்ந்து தேவனை வணங்குவான். “உண்மையாகவே, தேவன் உங்களோடு இருக்கிறார்” என்று அவன் கூறுவான். எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் சந்திக்கும்போது ஒருவரிடம் சங்கீதம் இருக்கிறது. மற்றொருவரிடம் போதனை இருக்கிறது. இன்னொருவரிடம் தேவனிடம் இருந்து பெற்ற புதிய செய்தி இருக்கிறது. ஒருவர் வேறு மொழியைப் பேசக்கூடும். இன்னொருவர் அதனை விளக்கியுரைக்கக் கூடும். இந்தக் காரியங்களின் நோக்கம் சபை வளருவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். நீங்கள் சந்திக்கும்போது வேறு மொழிகளில் ஒருவர் உங்களோடு பேசினால் இருவராக மட்டுமே இருக்க வேண்டும். மூன்று பேருக்குமேல் இதைச் செய்யக்கூடாது. அவர்கள் ஒருவருக்குப்பின் ஒருவர் பேசவேண்டும். இன்னொருவர் அவர்கள் பேசுவதை விளக்க வேண்டும். அவ்வாறு விளக்கக்கூடியவர் அங்கே இல்லையென்றால் சபையினர் சந்திக்கும்போது வேறு மொழியில் பேசுகின்றவர் அமைதியாக இருக்க வேண்டும். தன்னிடமும் தேவனிடமும் மட்டுமே பேசிக்கொண்டு அவர் இருத்தல் வேண்டும். இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் மட்டுமே பேசவேண்டும். அவர்கள் கூறுவதைப் பிறர் நிதானிக்கவேண்டும். சபையில் இருப்பவரில் ஒருவர் தேவனிடமிருந்து ஏதேனும் செய்தியைப் பெற்றால் முதலில் பேசுகிறவர் உடனே பேசுவதை நிறுத்த வேண்டும். இந்த முறையில் ஒருவருக்குப் பின் ஒருவராக நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும். அவ்வாறாக எல்லா மக்களும் பயிற்சியும், உற்சாகமும் பெறுவார்கள். தீர்க்கதரிசிகளின் ஆவிகளும்கூட தீர்க்கதரிசிகளால் கட்டுப்படுத்தப்பட முடியும். தேவன் குழப்பத்தின் தேவனல்ல. அவர் சமாதானத்தின் தேவனாவார். சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுடைய எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது. பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது. தேவனுடைய போதனை உங்களிடமிருந்து வந்ததா? இல்லை. அல்லது தேவனுடைய போதனையைப் பெற்றவர்கள் நீங்கள் மட்டுமா? இல்லை. உங்களில் ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியாகக் கருதினாலோ அல்லது ஆவியின் வரம் பெற்றிருப்பதாக எண்ணினாலோ, அவன் நான் உங்களுக்கு எழுதுவதை கர்த்தரின் கட்டளையாக அடையாளம் கண்டு கொள்ளட்டும். இதை அந்த மனிதன் அறியவில்லையென்றால் அவன் தேவனால் அறியப்படாதவன். எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் தீர்க்கதரிசனம் உரைப்பதை விரும்புங்கள். அதே சமயத்தில் மக்கள் வேறு மொழிகளில் பேசும் வரத்தைத் தடுக்காதீர்கள். ஆனால் தகுதியானதும் ஒழுங்கானதுமான வகையில் ஒவ்வொன்றும் செய்யப்பட வேண்டும்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 14
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 14:21-40
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்