1 கொரிந்தியர் 14:21-40

1 கொரிந்தியர் 14:21-40 TCV

“வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களைக்கொண்டும், புரியாத உதடுகளைக்கொண்டும் இந்த மக்களுடன் நான் பேசுவேன். அப்பொழுதும் இவர்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள், என்று கர்த்தர் சொல்கிறார்” என மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறதே. எனவே, வேற்று மொழிகளைப் பேசுவது, அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறதேயன்றி, விசுவாசிகளுக்கு அல்ல. இறைவாக்குரைப்பதோ விசுவாசிகளுக்கே அன்றி, அது அவிசுவாசிகளுக்கு அல்ல. எனவே திருச்சபையோர் எல்லோரும் கூடிவரும்போது, எல்லோரும் வேற்று மொழிகளைப் பேசினால், அங்கு வருகின்ற ஆவிக்குரிய வரங்களைப் பற்றி விளக்கமில்லாதவர்களும், அவிசுவாசிகளும் உங்களைப் பார்த்து, நீங்கள் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டார்களா? ஆனால் எல்லோரும் இறைவாக்கு உரைத்தால், அப்பொழுது அங்கு வருகின்ற அவிசுவாசியோ, அல்லது அந்த விளக்கமில்லாதவனோ, நீங்கள் எல்லோரும் சொல்லும் இறைவாக்கின் வார்த்தைகளைக் கேட்டு, தான் பாவி என்று எடுத்துக்காட்டும். அவன் கேட்கும் வார்த்தைகளெல்லாம், அவனை நியாயந்தீர்க்கும். அப்பொழுது அவனுடைய இருதயத்தின் இரகசியம் எல்லாம் வெளியாகும். எனவே அவன், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு, “உண்மையாகவே இறைவன் உங்கள் மத்தியில் இருக்கிறார்!” என்று அறிக்கையிடுவான். ஆகையால் பிரியமானவர்களே, நாங்கள் என்னத்தைச் சொல்வோம்? நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, ஒருவன் ஒரு பாட்டைப் பாடுகிறான்; மற்றொருவன், ஒரு அறிவுறுத்தும் வார்த்தையைக் கொடுக்கிறான்; இன்னொருவன் தான் பெற்ற வெளிப்பாட்டைத் தெரியப்படுத்துகிறான்; வேறொருவன், வேற்று மொழியில் பேசுகிறான்; இன்னொருவன், அதை மொழிபெயர்க்கிறான். இவை எல்லாம் திருச்சபையின் வளர்ச்சிக்காகவே செய்யப்படவேண்டும். எவராவது வேறொரு மொழியில் பேசுவதாயிருந்தால், இரண்டு பேரோ, அல்லது மூன்று பேரோ மட்டும் அப்படிப் பேசட்டும். அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவேண்டும். யாராவது ஒருவர் அதை மொழிபெயர்த்துச் சொல்லவேண்டும். ஆனால், அதை மொழி பெயர்க்கக்கூடிய ஒருவன் திருச்சபையில் இல்லாதிருந்தால், அப்படிப்பேசுகிறவன் திருச்சபையில் மவுனமாய் இருக்கவேண்டும். அவன் உள்ளத்தில் தனக்குள்ளேயே இறைவனிடம் பேசிக்கொள்ளட்டும். இறைவாக்குரைப்போரும், இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ பேசலாம். மற்றவர்களோ, சொல்லப்பட்ட செய்தியைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். பேசிக்கொண்டிருக்கிறவனுக்கு அருகே உட்கார்ந்திருக்கிறவன், இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டால், பேசிக்கொண்டிருக்கிறவன் தான் பேசுவதை நிறுத்தவேண்டும். இப்படி நீங்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்கு உரைக்கலாம். இதனால், நீங்கள் எல்லோரும் அறிவுறுத்தப்பட்டு ஊக்கம் பெறலாம். இறைவாக்குரைப்போரின் ஆவிகள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியவையாக இருக்கின்றன. ஏனெனில், இறைவன் ஒழுங்கின்மையை ஏற்படுத்தும் இறைவன் அல்ல. பரிசுத்தவான்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருப்பதுபோலவே, அவர் அமைதியையே ஏற்படுத்துகிறவர். திருச்சபைக் கூட்டங்களில் பெண்கள் மவுனமாக இருக்கவேண்டும். பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறதில்லை. யூதச்சட்டத்தில் சொல்லியிருக்கிறபடி, அவர்கள் தலைமைத்துவத்தில் இருக்கக்கூடாது. பெண்கள் எதைப்பற்றியாவது அறிந்துகொள்ள விரும்பினால், அதை வீட்டில் தங்கள் சொந்த கணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்; ஏனெனில் திருச்சபையிலே பெண்கள் பேசுவது அவர்களுக்கு அவமானமாயிருக்கும். இறைவனுடைய வார்த்தை உங்களுடன்தான் ஆரம்பமாயிற்றோ? அல்லது உங்களிடம் மட்டும்தான் அது வந்து சேர்ந்ததோ? உங்களில் யாராவது தன்னை ஒரு இறைவாக்கினன் என்றோ, அல்லது ஆவிக்குரிய வரம் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது கர்த்தருடைய கட்டளைகள் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆகவே பிரியமானவர்களே, இறைவாக்கு உரைப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருங்கள். ஆனால், வேற்று மொழிகளைப் பேசுவதையோ தடுக்கவேண்டாம். எல்லாக் காரியங்களும் ஏற்றவிதத்திலும், ஒழுங்காகவும் செய்யப்படவேண்டும்.