மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியமொழிகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது; தீர்க்கதரிசனமோ விசுவாசம் இல்லாதவர்களுக்கு அடையாளமாக இல்லாமல், விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது. ஆகவே, சபையார் எல்லோரும் ஏகமாகக் கூடிவந்து, எல்லோரும் அந்நிய மொழிகளிலே பேசிக்கொள்ளும்போது, படிப்பறியாதவர்களாவது, விசுவாசம் இல்லாதவர்களாவது உள்ளே நுழைந்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்களல்லவா? எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் இரகசியங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புறவிழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாக உங்களுக்குள்ளே இருக்கிறார் என்று அறிக்கையிடுவான்.
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நிய மொழியைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் விளக்கம் சொல்லுகிறான். சகோதரர்களே, இது என்ன? அனைத்தும் பக்திவளர்ச்சிக்கேதுவாகச் செய்யப்படவேண்டும். யாராவது அந்நிய மொழியிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டும் அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டும் பேசவும், அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவும், இன்னொருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப்பேசவேண்டும். தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கவேண்டும். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாவது வெளிப்படுத்தப்பட்டால், முதலில் பேசினவன் பேசாமலிருக்கவேண்டும். எல்லோரும் கற்கிறதற்கும் எல்லோரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனம் சொல்லலாம். தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே. தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும். இப்படியிருக்க, சகோதரர்களே, தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள், அந்நிய மொழிகளைப் பேசுகிறதற்கும் தடைசெய்யாமலிருங்கள். அனைத்து காரியங்களும் நல்லொழுக்கமாகவும், முறையாகவும் செய்யப்படவேண்டும்.