பிலிப்பியர் 4
4
ஒற்றுமையாய் நிலைத்திருப்பதற்கான அழைப்பு
1ஆகவே, என் அன்பு சகோதரர்களே! இப்படியே, கர்த்தரில் உறுதியாய் நில்லுங்கள். எனக்குப் பிரியமான நண்பர்களே! நீங்களே நான் காண விரும்புகின்ற என் மனமகிழ்ச்சியும், என் முயற்சியின் பலனுமாய்#4:1 பலனுமாய் – கிரேக்க மொழியில் கிரீடம். இது இலைகளினாலான மலர் வளையம். அக்காலத்தில் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் பெறும் ஒரு விருது. இருக்கின்றீர்கள்.
2கர்த்தரில் ஒரே மனதுள்ளவர்களாய் இருக்கும்படி எயோதியாளிடமும் சிந்திகேயாளிடமும் கேட்டுக்கொள்கிறேன். 3ஆம், என் உண்மையுள்ள சக கூட்டாளியே, இந்தப் பெண்களுக்கு உதவி செய்யும்படி உன்னிடமும் கேட்கின்றேன். கிலெமெந்தோடும் எனது மற்ற சக ஊழியரோடும் சேர்ந்து இவர்களும் என்னுடன் நற்செய்திக்காகப் போராடினார்கள். இவர்கள் அனைவருடைய பெயர்களும் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
இறுதி புத்திமதிகள்
4எப்போதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். மீண்டும் உங்களுக்குச் சொல்கின்றேன்: மகிழ்ச்சியாய் இருங்கள்! 5உங்கள் கனிவான குணம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் விரைவில் வருகின்றார். 6எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை மன்றாடுதலின் மூலமும், வேண்டுதலின் மூலமும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள். 7அப்போது, விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அனைத்துக்கும் அப்பாற்பட்டதான இறைவனுடைய சமாதானம், கிறிஸ்து இயேசுவோடு இணைக்கப்பட்டவர்களான உங்கள் இதயங்களையும் மனங்களையும் பாதுகாக்கும்.
8இறுதியாக பிரியமானவர்களே, உண்மையானவை எவையோ, மதிப்பானவை எவையோ, சரியானவை எவையோ, தூய்மையானவை எவையோ, அன்பானவை எவையோ, பாராட்டுதலுக்குத் தகுந்தவை எவையோ, அத்துடன் மேன்மையும் புகழ்ச்சியுமானவை எவைகளோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். 9நீங்கள் எவற்றை எல்லாம் என்னிடமிருந்து கற்றுக் கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டறிந்தீர்களோ அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்போது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார்.
நன்கொடைகளுக்கான நன்றி
10மீண்டும் எனக்கு உதவி செய்ய, இப்பொழுதாவது உங்களுக்கு முடியுமாயிருப்பதைக் குறித்து கர்த்தரில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள், ஆனாலும் அதை வெளிக்காண்பிப்பதற்கு ஏற்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிவேன். 11எனக்கு ஏதோ தேவை இருப்பதால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக் கொண்டேன். 12ஏழ்மையுடன் வாழவும் எனக்குத் தெரியும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார உணவு உண்டிருந்தாலும், பசியோடு பட்டினியாயிருந்தாலும், வாழ்வில் நிறைவோ குறைவோ எதுவாயிருந்தாலும், எப்போதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் மனத்திருப்தியுடன் வாழும் இரகசியத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன். 13என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கின்றது.
14ஆனாலும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்கு கொண்டது நல்லது. 15மேலும் பிலிப்பியர்களே, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்ப நாட்களில் நான் மக்கெதோனியாவைவிட்டுப் புறப்பட்டபோது உங்களைத் தவிர வேறு எந்த ஒரு திருச்சபையும் எனக்கு உதவி செய்யவோ என்னிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளவோ இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 16ஏனெனில், நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையில் எனக்குத் தேவை ஏற்பட்டிருந்தபோது, நீங்களே எனக்கு மீண்டும் மீண்டும் நன்கொடை அனுப்பினீர்கள். 17நான் உங்கள் நன்கொடையைப் பெற்றுக்கொள்வதை நாடவில்லை. மாறாக, உங்கள் கணக்கில் நற்பலன்கள் பெருக வேண்டும் என்றே விரும்புகிறேன். 18எனவே, நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டேன். இப்போது என்னிடம் தேவைக்கு அதிகமாகவும் இருக்கின்றது. நீங்கள் அனுப்பிய நன்கொடையை எப்பாப்பிராத்துவிடமிருந்து பெற்று திருப்தி அடைந்திருக்கிறேன். அவை இறைவனைப் பிரியப்படுத்துகின்ற நறுமணமுள்ள காணிக்கையாகவும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க பலியாகவும் இருக்கின்றன. 19என் இறைவன், தமது மகிமை நிறைந்த செல்வத்தின்படியே உங்கள் எல்லாக் குறைகளையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாக நிறைவாக்குவார்.
20நமது இறைவனும், பிதாவுமாய் இருக்கின்றவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
இறுதி வாழ்த்து
21கிறிஸ்து இயேசுவில் இணைந்து இருக்கின்ற பரிசுத்தவான்கள் அனைவருக்கும் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
என்னுடன் இருக்கின்ற சகோதர சகோதரிகள் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.
22பரிசுத்தவான்கள் அனைவரும், குறிப்பாக ரோமப் பேரரசன் சீசரின் அரண்மனையைச் சேர்ந்த பரிசுத்தவான்களும் உங்களுக்கு வாழ்த்துதலை அனுப்புகிறார்கள்.
23ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
பிலிப்பியர் 4: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.