பிலிப்பியர் 3

3
மனிதர்களுடைய வழிமுறைகளில் நம்பிக்கை வைக்க வேண்டாம்
1கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவதில் எனக்குச் சிரமம் ஏதும் இல்லை, அது உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
2பொல்லாத நாய்கள்#3:2 பொல்லாத நாய்கள் – மோசமான மனிதர்கள் என்பதைக் குறிக்கிறது. குறித்து எச்சரிக்கையாக இருங்கள், தீமை செய்கின்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், விருத்தசேதனம்#3:2 விருத்தசேதனம் – கிரேக்க மொழியில், உறுப்பைச் சிதைப்பவர்கள் என்றுள்ளது. செய்பவர்களைக் குறித்து#3:2 விருத்தசேதனம் செய்பவர்களைக் குறித்து – மீட்படைவதற்கு, யூதர்களின் விருத்தசேதன சடங்கைக் கைக்கொள்வது அவசியம் எனப் போதிக்கிறவர்களைக் குறிக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள். 3ஏனென்றால் மனித முயற்சியில் நம்பிக்கை வைக்காமல் இறைவனின் ஆவியானவரது உதவியினாலே வழிபட்டு, கிறிஸ்து இயேசுவை மகிமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள். 4உண்மையில், மனித முயற்சியில் நம்பிக்கை வைப்பதானால் அதற்குரிய தன்மைகள் என்னிடமும் உள்ளன.
மனித முயற்சியின் மீது நம்பிக்கை வைப்பதற்குரிய தன்மைகள் தன்னிடம் இருப்பதாக எவராவது எண்ணுவாரானால், என்னிடம் அது அதிகமாகவே உள்ளது. 5ஏனெனில், நான் பிறந்து எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டவன், இஸ்ரயேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன், நீதிச்சட்டத்தின்படி நான் ஒரு பரிசேயன், 6பக்தி வைராக்கியத்தின் காரணமாக திருச்சபையைத் துன்புறுத்தியவன், நீதிச்சட்டத்தின் அடிப்படையிலான நீதியின்படி குற்றமில்லாதவன்.
7ஆனாலும், எனக்குப் பயன் தரும் என்று நான் எண்ணிய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக இப்போது பயன் அற்றவையாகக் கருதுகிறேன். 8அதுமட்டுமல்ல, என் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் ஒப்பிடும்போது மற்ற எல்லாமே ஒரு இழப்பு என்பதாகக் கருதி, அவருக்காக அவை எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டேன். கிறிஸ்துவை நான் ஆதாயமாகப் பெற, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன். 9அத்துடன் அவரோடு நான் இணைந்திருக்கவே விரும்புகிறேன். நீதிச்சட்டத்தினால் வரும் சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் ஊடாக வருகின்ற அவருடைய நீதியை உடையவனாய் இருக்கவே விரும்புகிறேன். இந்த நீதியானது விசுவாசத்தின் அடிப்படையில் இறைவனிடம் இருந்து வருகின்றது. 10நான் கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிந்துகொண்டவனாய், அவரைப் போலவே மரணத்திலும்கூட அவருடைய மரணத்துக்கு ஒத்திருந்து, அவர் அடைந்த வேதனைகளில் ஒன்றிணைந்து பங்குகொண்டு, 11இப்படியாக ஏதோ ஒருவிதத்தில் நானும் இறந்தோரின் உயிர்த்தெழுதலை அடைய வேண்டும்.
12இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலை அடைந்துவிட்டேன் என்றோ சொல்லவில்லை. மாறாக, கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை அடைவதற்காகத் தொடர்ந்து கடும் முயற்சி செய்கின்றேன். 13பிரியமானவர்களே, அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று நான் எண்ணவில்லை. ஆனால், நான் ஒன்றைச் செய்கின்றேன். கடந்துபோனவற்றை மறந்து, முன்னால் உள்ளவற்றை நோக்கி, 14பரிசை வென்றெடுப்பதற்காக இலக்கை நோக்கி அயராது ஓடுகிறேன். இறைவன் கொடுக்கின்ற பரிசாகிய பரலோக வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, கிறிஸ்து இயேசுவின் மூலமாக அவர் என்னை அழைத்திருக்கிறார்.
பவுலின் முன்மாதிரியை பின்பற்றுதல்
15எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும் இதே மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். எதைக் குறித்தாவது உங்களுக்கு வேறுபட்ட கருத்து இருக்குமானால் அதையும் இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். 16எது எப்படியானாலும் நாம் ஏற்கெனவே அடைந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழ முயற்சிப்போம்.
17பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு நீங்களும் இணைந்து, நாங்கள் உங்களுக்கு வாழ்ந்து காட்டிய முன்மாதிரியின்படி வாழ்கின்றவர்களைக் கவனத்திற்கொள்ளுங்கள். 18ஏனெனில் அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கின்றார்கள். இதைப்பற்றி அடிக்கடி உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். இப்போது மீண்டும் அதைக் கண்ணீருடன் சொல்கின்றேன். 19அவர்களது முடிவு அழிவு, அவர்களது தெய்வம் வயிறு, தமது வெட்கக்கேடானவைகளில் அவர்கள் பெருமைகொள்கின்றார்கள். உலகத்துக்கு உரியவைகளிலேயே சிந்தனையாய் இருக்கின்றார்கள். 20ஆனால், நமது குடியுரிமை பரலோகத்தில் உள்ளது. அங்கிருந்தே இரட்சகராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரென ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். 21அவர் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரச் செய்கின்ற தம்முடைய வல்லமையான ஆற்றலினால், நமது பலவீனமான அழிவுக்குரிய உடல்களை அவரது மகிமையுள்ள உடலைப் போல மாற்றுவார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

பிலிப்பியர் 3: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்