கலாத்தியர் 3
3
விசுவாசமும் நீதிச்சட்டமும்
1மூடர்களான கலாத்தியரே! கண்கட்டுவித்தையினால் உங்களை ஏமாற்றியது யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்கள் கண்களுக்கு பகிரங்கமாக சித்திரித்துக் காட்டப்பட்டாரே! 2நான் உங்களிடமிருந்து ஒன்றை அறிய விரும்புகிறேன். நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களினாலா அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா? 3நீங்கள் இந்தளவு அறிவீனர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்போது மனித முயற்சியினால் நிறைவேற்றி முடிக்கப் போகின்றீர்களா? 4நீங்கள் வீணாகத்தான் அத்தனை பாடுகளையும் அனுபவித்தீர்களா? உண்மையில் அவை அர்த்தமற்றவையா? 5பரிசுத்த ஆவியானவரை இறைவன்#3:5 இறைவன் – கிரேக்க மொழியில் அவர் உங்களுக்குத் தந்து, உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்வது நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களினாலா அல்லது நீங்கள் கேட்டதை நீங்கள் விசுவாசிப்பதனாலா?
6ஆபிரகாமைப் பாருங்கள், “அவர் இறைவனை விசுவாசித்தார், அந்த விசுவாசமே அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”#3:6 ஆதி. 15:6
7இதிலிருந்து, விசுவாசிக்கின்றவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 8யூதரல்லாத மக்களை, அவர்களது விசுவாசத்தின் மூலமாக இறைவன் நீதிமான்கள் ஆக்குவார் என்பதனை முன்னரே அறிந்துகொண்ட வேதவசனம், “எல்லா இன மக்களும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்”#3:8 ஆதி. 12:3; 18:18; 22:8 என்று அந்த நற்செய்தியை முன்னரே ஆபிரகாமுக்கு அறிவித்தது. 9எனவே விசுவாசம் உள்ளவர்களும் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடன் சேர்த்து ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
10நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களில் தங்கியிருக்கும் எல்லோரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “நீதிச்சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொண்டு, அதன்படி தொடர்ந்து வாழாத ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்”#3:10 உபா. 27:26 என்று எழுதப்பட்டிருக்கின்றது. 11“நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்”#3:11 ஆப. 2:4 என்று எழுதியிருக்கின்றபடி, நீதிச்சட்டத்தால் இறைவனுக்கு முன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. 12ஆயினும் நீதிச்சட்டமானது விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டதொன்றல்ல. மாறாக, “நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவன் அவற்றால் வாழ்வு பெறுவான்”#3:12 லேவி. 18:5 என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. 13“மரத்திலே தொங்க விடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்”#3:13 உபா. 21:23 என்று எழுதியிருக்கின்றபடியே கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நீதிச்சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார். 14அதன்படி, ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவன் வாக்குறுதியளித்த பரிசுத்த ஆவியானவரை விசுவாசத்தின் மூலமாக நாமும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே அப்படிச் செய்தார்.
நீதிச்சட்டமும் வாக்குறுதியும்
15பிரியமானவர்களே, அன்றாட நடைமுறையிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். மனிதரால் எழுதப்பட்ட ஒரு உடன்படிக்கை உறுதி செய்யப்பட்ட பின்பு, ஒருவரும் அதிலிருந்து எதையும் நீக்கிவிடவோ சேர்த்துக்கொள்ளவோ முடியாது. 16அதேபோலத்தான் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டபோது வேதவசனமானது, “சந்ததிகளுக்கு” என்று பலரைக் குறித்துச் சொல்லாமல், “உன்னுடைய சந்ததிக்கு”#3:16 ஆதி. 12:7; 13:15; 24:7 என்று ஒருவரைக் குறித்தே சொல்கின்றது. அந்த ஒருவர் கிறிஸ்துவே. 17நான் சொல்வது என்னவென்றால், இறைவன் முன்னதாகவே ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்து வாக்குறுதியையும் கொடுத்து விட்டார். அதற்கு நானூற்று முப்பது வருடங்களுக்குப் பின் வந்த நீதிச்சட்டமானது முன்பு உறுதி செய்யப்பட்ட அந்த உடன்படிக்கையைத் தள்ளி வைக்கவோ, அந்த வாக்குறுதியை செல்லுபடியற்றதாக்கி விடவோ முடியாது. 18இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமைச் சொத்தானது, நீதிச்சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுமானால், அது வாக்குறுதியின் அடிப்படையில் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் இறைவனோ தமது கிருபையினால் அதை ஒரு வாக்குறுதியின் மூலமாக ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.
19அப்படியானால் அதன்பின் நீதிச்சட்டமும் கொடுக்கப்பட்டதே, அதற்கு என்ன காரணம்? வாக்குறுதிக்கு உரியவரான வழித்தோன்றலானவர்#3:19 வழித்தோன்றலானவர் என்பது இயேசுவைக் குறிக்கின்றது வரும்வரை உலகிலுள்ள மீறுதல்களை எடுத்துக்காட்டவே நீதிச்சட்டம் தேவைப்பட்டது. அது இறைதூதர்களைக் கொண்டு ஒரு மத்தியஸ்தர் மூலமாகக் கொடுக்கப்பட்டது. 20இரு சாராருக்கு இடையே மத்தியஸ்தராக இருப்பவர் ஒரு சாராருக்கு மாத்திரம் உரியவரல்ல. ஆனால் இறைவனோ ஒருவரே.
21அப்படியானால் நீதிச்சட்டம் இறைவனுடைய வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருபோதும் இல்லை! வாழ்வு தரும்படியான ஒரு நீதிச்சட்டம் கொடுக்கப்பட்டிருந்தால், உண்மையில் நீதிச்சட்டத்தின் மூலமாகவே நீதிமானாக்கப்படுவது உண்டாகியிருக்க வேண்டும். 22ஆனால் இயேசு கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாய் கிடைக்கும் வாக்குறுதி, விசுவாசிக்கின்றவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக வேதவசனமானது அனைத்தையும் பாவத்தின் கீழ் சிறை வைத்துவிட்டது.
இறைவனின் பிள்ளைகள்
23விசுவாசம் வருவதற்கு முன்னதாக நாம் நீதிச்சட்டத்தினால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களாய், அந்த விசுவாசம் வெளிப்படுத்தப்படும் வரை அவதானத்துடன் காவல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தோம். 24நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும் பொருட்டு, கிறிஸ்துவின் காலம் வரும் வரையிலும் நீதிச்சட்டமானது எமக்கு ஒரு பிள்ளை பராமரிப்பாளரைப் போல இருந்தது. 25ஆனால் இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டது என்பதனால் நாங்கள் இனிமேல் பிள்ளைப் பராமரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இல்லை.
26நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தின் மூலமாய், இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கின்றீர்கள். 27ஏனெனில் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை ஆடையாய் அணிந்து கொண்டிருக்கிறீர்கள். 28உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ, அடிமை அல்லாதவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வேற்றுமை இல்லாதபடி நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருக்கின்றீர்கள். 29நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்கின்றீர்களா? அப்படியானால் ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குறுதியின்படி சொத்துரிமை உடையவர்களாகவும் இருக்கின்றீர்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
கலாத்தியர் 3: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.