கலாத்தியர் 4

4
1சொத்துரிமை உடையவன் சொத்து முழுவதற்கும் உரிமையாளனாய் இருந்தாலும், அவன் பிள்ளைப் பருவத்தைக் கடக்கும் வரை ஒரு அடிமைக்கும்#4:1 அடிமைக்கும் – குடும்பத்தில் ஒருவனாக வீட்டின் நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் ஒரு பணியாளனை இது குறிக்கும். அவனுக்கும் வித்தியாசம் இல்லை. 2எனவே அவனுடைய தந்தை நியமித்திருக்கும் காலம் நிறைவேறும் வரை, அவனது பாதுகாவலர்களுக்கும், அவனது நிதியை நிர்வகிப்பவர்களுக்கும் அவன் கீழ்ப்பட்டவனாய் இருக்கின்றான். 3இவ்விதமாய் நாமும் பிள்ளைகளாய் இருந்தபோது உலகத்தின் மூலக்கோட்பாடுகளுக்கு அடிமைப்பட்டிருந்தோம். 4குறித்த காலம் பூர்த்தியானபோது இறைவன் தம்முடைய மகனை பெண்ணிடத்தில் பிறக்கின்ற ஒருவராகவும், நீதிச்சட்டத்திற்கு கீழ்ப்பட்ட ஒருவராகவும் அனுப்பினார். 5நீதிச்சட்டத்திற்கு கீழ்ப்பட்டவர்களை மீட்பதற்காகவும், அவருடைய பிள்ளைகளாக நாம் தத்தெடுக்கப்படவுமே அவர் இதைச் செய்தார். 6நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதனால், “அப்பா, பிதாவே” என்று கூப்பிடுகின்ற தமது மகனுடைய ஆவியை இறைவன் உங்களுடைய இருதயங்களுக்குள் அனுப்பி இருக்கின்றார். 7ஆகவே இனியும் நீங்கள் அடிமை அல்ல அவருடைய பிள்ளையாய் இருக்கின்றீர்கள். பிள்ளையாய் இருப்பதனால் இறைவனுக்கு ஊடாக சொத்துரிமை உடையவராகவும் இருக்கின்றீர்கள்.
கலாத்தியர்களைக் குறித்த அக்கறை
8முன்பு நீங்கள் இறைவனை அறியாதிருந்தபோது இயல்பாகவே தெய்வங்கள் அல்லாதவைகளுக்கு அடிமைகளாக இருந்தீர்கள். 9ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனை அறிந்திருக்கிறீர்கள், அதைவிட மேலாக அவரால் அறியப்பட்டும் இருக்கின்றீர்கள். இப்படியிருக்க, பலவீனமானதும் பெறுமதியற்றதுமான உலகத்தின் மூலக்கோட்பாடுகளுக்கு மீண்டும் செல்வது ஏன்? அவைகளுக்கு மீண்டும் அடிமைகளாக விரும்புகிறீர்களா? 10நீங்கள் விசேட நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருடங்களையும் அனுசரித்து நடக்கின்றீர்களே! 11நான் உங்களுக்காக துன்பதுயரங்களுடன் பாடுபட்டதெல்லாம் வீணாகப் போய்விட்டதோ என்று பயப்படுகிறேன்.
12பிரியமானவர்களே, என்னைப் போல் ஆகுங்கள் என்று உங்களைக் கேட்கின்றேன், ஏனெனில் நானும் உங்களைப் போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை. 13நீங்கள் அறிந்திருக்கின்றபடி, எனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணத்தினாலேயே முதன்முதலில் உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க முடிந்தது. 14என்னுடைய உடல்நிலை உங்களுக்கு சோதனையாக இருந்தபோதும், நீங்கள் என்னை வெறுக்கவோ புறந்தள்ளவோ இல்லை. மாறாக இறைவனின் ஒரு தூதனைப் போலவும் கிறிஸ்து இயேசுவைப் போலவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள். 15அப்போது உங்களிடம் இருந்த ஆனந்தம்#4:15 ஆனந்தம் – கிரேக்க மொழியில் இந்த சொல்லை ஆசீர்வாதம் என்றும் அர்த்தம்கொள்ளலாம். எங்கே? முடிந்தால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று சாட்சி கூறுவேன். 16சத்தியத்தை சொன்னதனாலே நான் உங்களுக்குப் பகைவன் ஆனேனா?
17உங்கள் மீது அதிக அக்கறை காட்டுகின்ற அவர்கள் நல்ல நோக்கத்தோடு அன்றி, எங்களிடமிருந்து உங்களைப் பிரித்து நீங்கள் அவர்களில் அதிக ஆர்வம்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்கின்றார்கள். 18நல்ல நோக்கத்துக்காக அக்கறை காட்டுவது எப்போதும் நல்லது. ஆனால் நான் உங்களுடன் இருக்கும்போது மாத்திரம் அவர்கள் அக்கறை காட்டுவது முறையல்ல. 19என் பிள்ளைகளே! கிறிஸ்து உங்களில் உருவாகும் வரைக்கும் உங்களுக்காக நான் பிரசவ வேதனைப்படுகிறேன். 20இப்போது நேரில் வந்து உங்களுடன் நல்லவிதமாகப் பேச அதிகம் விரும்புகிறேன். ஏனெனில் உங்களைக் குறித்து நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறேன்.
ஆகாரும் சாராளும்
21நீதிச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகின்ற நீங்கள், நீதிச்சட்டம் சொல்வதை அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள். 22ஆபிரகாமுக்கு இரண்டு மகன்மார் இருந்தார்கள் என்றும், ஒருவன் அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்தவன், மற்றவன் அடிமையல்லாத பெண்ணிடத்தில் பிறந்தவன் என்றும் எழுதப்பட்டிருக்கின்றதே. 23அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்த அவருடைய மகன் மனித விருப்பத்தின்படி பிறந்தான்; சுதந்திரமான பெண்ணிடத்தில் பிறந்த அவருடைய மகனோ இறைவனின் வாக்குறுதியின்படி பிறந்தான்.
24இதை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு பெண்களும் இரண்டு உடன்படிக்கைகளுக்கு ஒத்திருக்கிறார்கள். ஒன்று சீனாய் மலையில் இருந்து வந்தது. அது அடிமைத்தனத்தின் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது. இது ஆகாருக்கு ஒப்பாய் இருக்கின்றது. 25அரேபியாவிலுள்ள சீனாய் மலைக்கு அடையாளமாய் இருப்பவள் ஆகார். அவள் இப்போது இருக்கும் எருசலேம் நகருக்கும் ஒப்பாய் இருக்கின்றாள். ஏனெனில் எருசலேமும் அதன் பிள்ளைகளுடன் அடிமைத்தனத்துக்குள் இருக்கின்றதே! 26ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்திரமானவள். அவளே நம்முடைய தாய். 27ஏனெனில்,
“குழந்தைப் பேறு அற்றவளான பெண்ணே,
நீ சந்தோஷப்படு;
பிரசவ வேதனையை அனுபவிக்காதவளே,
நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு;
ஏனெனில், தன் கணவனுடன் வாழும் பெண்ணுக்கு இருப்பதைவிட,
கைவிடப்பட்ட பெண்ணுக்கே அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்”#4:27 ஏசா. 54:1
என்று எழுதியிருக்கின்றதே.
28பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குறுதியின் பிள்ளைகளாய் இருக்கின்றீர்கள். 29அக்காலத்தில் மனித விருப்பத்தின்படி பிறந்த மகன் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே இப்போதும் நடைபெறுகிறது. 30ஆனால் வேதவசனம் என்ன சொல்கின்றது? “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும் வெளியே அனுப்பி விடு. ஏனெனில், அடிமைப் பெண்ணின் மகன் சுதந்திரமான பெண்ணின் மகனுடனே, சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.”#4:30 ஆதி. 21:10 31ஆகவே பிரியமானவர்களே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல, சுதந்திரமான பெண்ணின் பிள்ளைகள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

கலாத்தியர் 4: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்