கலாத்தியர் 5

5
கிறிஸ்துவில் சுதந்திரம்
1நாம் சுதந்திரமுடையவர்களாய் இருப்பதற்காகவே கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியிருக்கிறார். எனவே நீங்கள் உறுதியாய் நிலைத்திருங்கள். மீண்டும் நீங்கள் உங்களை அடிமைத்தன நுகத்தின் சுமைக்கு உட்படுத்தாதபடி காத்துக்கொள்ளுங்கள்.
2பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்கின்றேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்வதை ஏற்றுக்கொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. 3நான் மீண்டும் சொல்கின்றேன், விருத்தசேதனம் செய்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவனும் நீதிச்சட்டம் முழுவதையும் கைக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறான். 4நீதிச்சட்டத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படுவதே வழியென்று நீங்கள் எண்ணினால் கிறிஸ்துவை விட்டொதுங்கி கிருபையிலிருந்து வீழ்ந்துவிட்டீர்கள். 5ஆனால் நாங்களோ, எதிர்பார்த்திருக்கும் நீதிக்காக பரிசுத்த ஆவியானவர் மூலமாய் விசுவாசத்தில் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். 6ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமோ, விருத்தசேதனம் இல்லாமையோ ஒன்றுமில்லை. அன்பினால் செயற்படும் விசுவாசமே பயனுள்ளது.
7இந்தப் பந்தயத்தில் நீங்கள் நன்றாய் ஓடிக் கொண்டிருந்தீர்கள். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடை செய்தது யார்? 8இவ்விதமாக செயற்படுவதற்கான தூண்டுதல் உங்களை அழைத்தவரிடம் இருந்து வந்ததல்ல. 9“ஒரு சிறிதளவு புளித்த மாவானது பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்கி விடுகிறது.” 10என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட எதையும் நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நான் உங்களைக் குறித்து கர்த்தரில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால், உங்களைக் குழப்பமடையச் செய்கின்றவன் யாராயிருந்தாலும் அவன் தண்டனை அனுபவிப்பான். 11பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியமென்று சொல்லி நான் இன்னும் பிரசங்கித்தேன் என்றால், ஏன் நான் இன்னும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? அப்படிப் பிரசங்கித்திருந்தால் சிலுவையின் பொருட்டு உண்டாகும் எதிர்ப்பு நீங்கியிருக்குமே. 12உங்களைக் குழப்பமடையச்#5:12 உங்களைக் குழப்பமடைய என்பது விருத்தசேதனத்தைப்பற்றி உங்களை குழப்பமடைய செய்கின்றவர்களோ தங்களது ஆணுறுப்பை சேதம் செய்துகொள்ளட்டும்.
ஆவியானவரால் வரும் வாழ்வு
13எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் சுதந்திரத்தை, பாவ மனித இயல்பை அனுபவிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தாமல் அன்பினாலே ஒருவருக்கு ஒருவர் பணி செய்யுங்கள். 14“நீ உன்னில் அன்பாய் இருப்பது போல், உன் அயலவனிலும் அன்பாய் இரு”#5:14 லேவி. 19:18 என்ற ஒரே கட்டளையின் ஊடாக நீதிச்சட்டம் முழுவதுமே நிறைவேற்றப்படுகிறது. 15ஆனால் நீங்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து கடித்து விழுங்குகிற#5:15 கடித்து விழுங்குகிற – கிரேக்க மொழியில் தீங்கு செய்து அழிவைக் கொண்டுவருபவர்களாய் என்பது இதன் பொருள். செயலை நிறுத்தாவிட்டால், நீங்கள் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள், எனவே கவனமாயிருங்கள்.
16எனவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுங்கள். அப்போது பாவ மனித இயல்பின் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள மாட்டீர்கள். 17ஏனெனில் பாவ மனித இயல்பின் ஆசைகள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவைகளாகவும், பரிசுத்த ஆவியானவரின் ஆசைகள் பாவ மனித இயல்புக்கு எதிரானவைகளாகவும் உள்ளன. இதனாலேயே நீங்கள் விரும்புவதை செய்ய முடியாதவர்களாக இருக்கின்றீர்கள். 18ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டால், நீதிச்சட்டத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல.
19பாவ மனித இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை. பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கை, 20விக்கிரக வழிபாடு, மாந்திரீகம், பகைமை, தகராறு, அதீத பற்று, கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள், 21பொறாமை, குடிவெறி, ஒழுக்கக்கேடான களியாட்டம் போன்றவைகளே அவையாகும். நான் உங்களை முன்பு எச்சரித்தது போலவே இப்போதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றவர்கள் இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை.
22ஆனால் ஆவியானவரின் கனியோ அன்பு, மனமகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், நம்பகத் தன்மை, 23சாந்தகுணம், சுயகட்டுப்பாடு என்பனவாகும். இவைகளுக்கு முரணான எந்தவித சட்டமும் இல்லை. 24கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் பாவ மனித இயல்பை அதன் தீவிர ஆசைகளோடும், முறைகேடான விருப்பங்களோடும் சேர்த்து சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்பவர்களெனில், ஆவியானவருடனே ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைப்போமாக. 26நாம் வீண்பெருமை கொள்ளாமலும், மற்றவர்களை எரிச்சல் மூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருப்போம்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

கலாத்தியர் 5: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்